Monday, November 14, 2011

"பை' முறை விவசாயம்




இயற்கையான உணவு எப்பொழுதுமே சிறந்தது. சரிவிகித, சத்தான, தீங்கு விளைவிக்காத உணவினை குழந்தைகளுக்கு தருவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இதை நான் இரு குழந்தைகளின் தாயாக சொல்கிறேன் என்கிறார் சித்ரா. ஐரோப்பிய நாட்டில் பயணம் செய்யும்போது பார்த்த சீதோஷ்ண நிலை, சமன்படுத்தப் பட்ட காய்கறி தோட்ட தொழிற் சாலைகளை மனதில் கொண்டு திட்டமிடப் பட்டதுதான் இந்த வீட்டுக் குறுந்தோட்டமும், வீட்டு மாடித் தோட்டமும். தேங்காய் மட்டையிலிருந்து கிடைக்கும் துகள்களை ஆதாரமாகக் கொண்டு அத்துடன் இயற்கைத் தாதுக் களையும், நுண்ணுயிர்களையும் கலந்து செடிகள் வளர்வதற்கான ஊடகத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்களின் உதவியோடு உருவாக்கி உள்ளார்.
இந்த ஊடகத்தை ஆராய்ந்தவர்கள் இது இயற்கையான சத்துமிகுந்த ஊடகம் மட்டுமில்லாமல் மிக சிறிதளவு தண்ணீர் இருந்தாலே செடிகள் வளர்வதற்கு போதுமானது என்கிறார்கள். கலக்கப்பட்ட ஊடகத்தை பைகளில் போட்டு விதைச்சான்று பெற்ற வீரிய விதைகளை விதைத்து வீட்டில் சூரிய வெளிச்சம் படும் வராந்தா, பால்கனி, மாடி, ஜன்னல் போன்ற இடங்களில் வளரவிடுவதுதான் வீட்டு குறுந்தோட்டம்.
அன்றாட தேவைக்கான கீரைகள், காய்கறிகள், அலங்கார செடிவகைகள், மூலிகை செடிகள் எது வேண்டுமானாலும் இந்தப் பைகளில் வளர்க்கலாம். பைகளில் விவசாயமா? கதை சொல்கிறார்களா? இல்லை இல்லை. நிஜம். 3 செடியிலிருந்து 8 கிலோ கத்தரிக்காய், 15 கிலோ தக்காளி அறுவடை செய்யப் படுகிறது. இச்செடிகளுக்கு வரும் நோய்களைக் கட்டுப்படுத்த பஞ்சகவ்யா இயற்கைவழி பூச்சிவிரட்டியும் உபயோகப்படுத்தப் படுகிறது.
கீரைகள்: கீரைகளில் புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்கீரை, கருவேப்பிலை, சிறுகீரை, பாலக்கீரை, பசலைக்கீரை, பொன்னாங் கண்ணிக் கீரை, வல்லாரைக்கீரை, தண்டுக்கீரை, புளிச்சகீரை ஆகியவை பயிர் செய்யப் படுகின்றன. காய்கறிகளில் கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, பாகற்காய், சுரைக்காய், முள்ளங்கி, பீட்ரூட், வெள்ளரி, அவரை ஆகியவை பயிர் செய்யப்படுகிறது.
மூலிகைச்செடிகள்: நமது அன்றாட வாழ்விற்குத் தேவையான மூலிகைகளையும் இம்முறையில் வளர்க்கலாம். மிக முக்கியமான மூலிகைகளான கற்பூரவல்லி, துளசி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை, சிறியாநங்கை, பெரியநங்கை, இன்சுலின், தத்துரா (கருஊமத்தை), பல்வலிப்பூண்டு, பார்வதிதழை, ஆடாதொடை, தைம் ரோஸ்மேரி, மின்ட் வகைகள், அறுபத்தாம் தழை, வெட்டிவேர், லேவண்டர், லெமன்கிராஸ், கரிசலாங்கண்ணி, தூதுவளை, அப்பகோவை, முடக்கத்தான், நொச்சி, பொடுதலை வளர்க்கலாம்.
இம்மூலிகைகளை வளர்க்கும் முறை பற்றியும், உபயோகிக்கும் முறை பற்றியும் இத்துறையில் பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் உதவியோடு எடுத்துரைக்கப் படுகிறது. மாடியிலோ அல்லது தரையிலோ 20+10 அளவில் வெயில் படும்படியான இடவசதி இருக்கின்றதா? இருந்தால் இந்த பசுமைக்குடில் அமைக்கலாம். ஐந்து நபர் கொண்ட குடும்பத்தின் காய்கனி, கீரைகள் தேவைகளை இந்த பசுமைக்குடில் பூர்த்தி செய்யும்

சின்னார் 20 - புதிய ரக நெல்



ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கீழமானங்கரை கிராமத்தில் லேட். சின்னார் என்ற விவசாயி ஒரு புதிய நெல்ரகத்தை அதே கிராமத்தில் உள்ள புஷ்பம் என்பவர் உதவியுடன் உருவாக்கியுள்ளார். இந்த நெல் 110-115 நாட்கள் வயதுஉடையது. நெல் கத்தரி ஊதா கலரில், சாயாத நெல் வகையைச் சேர்ந்தது.
புதிய நெல் ரகம் உருவான வரலாறு: 7 வருடங்களுக்கு முன்னர் புஷ்பம் என்ற விவசாயி முதுகுளத்தூர் பஞ்சாயத்து யூனியனில் எடிடி 36 என்ற நெல் ரக விதையை வாங்கிக் கொணர்ந்து புரட்டாசி மாதம் வயலில் விதைத்தார். நெல் முளைத்து பயிரானது. அச்சமயம் நெல்லில் களை எடுக்க முற்பட்டார். ஒரு பயிர் மட்டும் கத்தரி ஊதா கலரில் களைச்செடி போன்று தென்பட்டது. இது களைச்செடி என்று பிடுங்க முற்பட்ட சமயம் நெல்மணி போன்ற கதிரும் தென்பட்டது. இந்த நெல் பயிரை பார்வையிட்ட சின்னார் என்ற பக்கத்து தோட்ட விவசாயி இதனை பிடுங்கிச்சென்று அவருடைய வயலில் நட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தார். ஆரம்பத்தில் கத்தரி கலரில் இருந்த பயிரானது ரோஜா நிறத்தில் மாறியது. நெல்லின் மணிகள் சற்று நீளம் அதிகம் கொண்டதாக இருந்தன. இதன் மணிகளை தனியாக அறுவடை செய்து அடுத்த பட்டத்தில் விதைத்தார். இவ்வாறாக பிரித்து எடுத்த நெல்லை "நாதன்' என்பவர் ஆலோசனைப்படி தன்னுடைய பெயரிலேயே சின்னார் 20 என்று பெயரிட்டார். இதில் 20 என்பது 2000/2004 வருடத்தைக் குறிக்கும். அதாவது 20ம் நூற்றாண்டு என்பதைக்குறிக்க இவ்வாறு பெயரிட்டார். இந்த நெல்லின் நிறத்தையும் நீண்ட மணிகளையும் பார்த்த உள்ளூர் விவசாயிகள் அதிசயப்பட்டு தாங்களும் பயிரிடமுற்பட்டனர். இவ்வூரில் புஷ்பம் என்பவரும் மற்ற விவசாயிகளும் இந்த நெல்லை தங்கள் வயலில் விளைவித்து நல்ல பலன் கண்டனர். இதனால் இந்த ரகம் கீழமானங்கரை மற்றும் பக்கத்து கிராமங்களிலும் உள்ள விவசாயிகளால் சுமார் 150 ஏக்கர் நிலங்களுக்கும் மேலாக பயிர் செய்யப்படுகிறது.
சின்னார் நெல் ரகத்தின் சிறப்பு தன்மைகள்: நெற்பயிர் வளரும் சமயம் கத்தரி ஊதா கலரில் காணப்படும். அறுவடை செய்யும் போது ரோஜா கலரில் மாறிவிடும். நெல்லின் உயரம் சுமார் 88 செ.மீ. கதிரின் நீளம் 22 செ.மீ. ஒரு பயிரில் 19-30 தூர்கள் உள்ளன. இதில் கதிர்பிடிக்கும் தூர்கள் 11 வரை உள்ளன. இது 115 நாட்களில் அறுவடை ஆகும். ஒரு கதிரில் 85-100 நெல்மணிகள் காணப்படும். 1000 நெல்மணிகளின் எடை 25 கிராம் ஆகும். இந்த நெல் ரகம் சாயாது. ஏக்கருக்கு 40-44 மூடைகள் விளைச்சல் கிடைக்கும்.
இந்த நெல் ரகம் பரவி உள்ள ஊர்கள்: இந்த நெல்லின் சிறப்பம்சங்களை கேள்விப்பட்டு பக்கத்து ஊரில் உள்ள விவசாயிகள் இந்த நெல் ரகத்தை விதைக்காக கூடுதல் விலைகொடுத்து வாங்கிச் செல்கின்றனர். இந்த நெல் கீழ்க்கண்ட ஊர்களில் பரவலாக பயிர் செய்யப்படுகின்றன.
1. தேரூர்வெளி, 2. கீழப்பானூர், 3. உத்தரகோசமங்கை, 4. சாத்தான் குளம், 5. கமுதி, 6. பொதிகுளம், 7. முதுகுளத்தூர், 8. குமாரகுறிஞ்சி, 9. பேரையூர். இந்தரகம் இப்போது சிவகங்கை மாவட்டத்திலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த நெல் ரகத்தை மூடைக்கு ரூ.100 அதிகம் கொடுத்து விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர். இதில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் தன்மை குறைவு என்று கூறுகின்றனர். 

செம்மை நெல் நடவுக்கேற்ற நடவு இயந்திரம்:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் குமுளூர் வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் செம்மைநெல் நடவு செய்வதற்கான இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட, நமது நாட்டில் கிடைக்கும் யான்ஜி நெல் நடவு இயந்திரத்தில் பற்சக்கரங்களை 24 செ.மீ. பயிருக்கு பயிர் இடைவெளி வரும் வண்ணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நெல் நாற்றை எடுத்து நடவு செய்யும் விரல்கள் அமைப்பு மாற்றம் செய்யப்பட்டு 1-2 நாற்றுகளை நடவு செய்யும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெல் நடவு செய்யும் இயந்திரம் 24x24 செ.மீ. இடைவெளியில் நாற்றை நடவு செய்யும். ஒருமுறை முன்னோக்கி செல்லும்போது 8 வரிசை நடவு செய்துவிட்டு, திரும்பி அடுத்த சாலில் நடவு செய்யும்போது சதுர முறையில் நடவு செய்யும் இடத்தைக் குறிக்கும் வண்ணம் வரிசைக் குறிகள் இயந்திரத்தின் வலது, இடது திசைகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறிகளின் குறியீட்டை சரியான இடத்தில் அமைத்து சதுர நடவுமுறை செய்யலாம். நடவு செய்யும்போது இயந்திரத்துடன் நாற்றுக்களை எடுத்துச்செல்லும் வண்ணம் 8 பாய் நாற்றுக்களை வைக்க அமைப்பு ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. பாய் நாற்றங்கால் முறையில் சிறிது கவனத்துடன் நாற்றுக்களை பராமரிக்க வேண்டும். ஒரு ஏக்கரில் நடவு செய்ய 2 மணி நேரம் ஆகும்.
செம்மை நெல் சாகுபடிக்கேற்ற அடையாள கைக்கருவி: செம்மை நெல் சாகுபடியில் அதிக இடைவெளியில் சதுரவடிவ நடவுமுறை முக்கியமான கோட்பாடாகும். சதுர நடவில் பயிருக்கு தேவையான காற்றோட்டம் கிடைக்கிறது. மேலும் களைக்கருவியை இரண்டு திசைகளிலும் பயன்படுத்துவதற்கு ஏதுவான முறை. செம்மை நெல் சாகுபடியில் சதுர நடவை மேற்கொள்ள அடையாளக் குறியிடப்பட்ட கயிறு (25x25செ.மீ.) பயன்படுத்துகின்றனர். இந்த முறையில் ஒரே திசையில் மட்டுமே வரிசை நடவு அமைகிறது. இதனால் களைக்கருவியை இரண்டு திசைகளிலும் பயன்படுத்த இயலாததால் பயிரின் தூர்கட்டும் திறன் குறைகிறது. இதைத் தவிர்க்க உருளும் அடையாளக்கருவி (25x25 செ.மீ.) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அடையாளக் கருவியை வயலில் உருட்டும்போது தொடர்ச்சியான சதுர வடிவ அமைப்பை அடையாளத்துடன் ஏற்படுத்துகிறது. குறியீடு உள்ள இடத்தில் நாற்றுக்கள் நடப்படுவதால் சீராகவும், வேகமாகவும் சதுர முறையில் நடவு செய்ய இயலும்

தமிழகத்தில் இயற்கையாக பரவிவரும் ஆடுதுறை 45 நெல்



காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கம் கொளத்தூரில் விவசாயம் செய்து வருபவர் கே.லோகு. இவர் நெல் சாகுபடியில் வல்லுநர். எப்போதும் திறமையாக நன்கு தேர்ந்தெடுத்த நெல் ரகங்களை இவர் சாகுபடி செய்வது வழக்கம். கொளத்தூர் பகுதியில் நீர்வளம் சிறப்பாக இருப்பதால் விவசாயம் சிறப்பாக செய்யப் படுகிறது. இப்பகுதியில் நெல் விவசாயம் மூன்று பட்டங்களில் செய்யப்படுகிறது. சொர்ணவாரிப் பட்டத்தைத் தொடர்ந்து சம்பா மற்றும் நவரைப் பட்டங்களில் நெல் விவசாயம் செய்யப்படுகின்றது. போட்டி மனப்பான்மையில் விவசாயிகள் சிறப்பாக நெல் சாகுபடியை செய்து வருகின்றனர்.
கே.லோகு சொர்ணவாரிப் பட்டத்தில் ஆடுதுறை 43 ரகத்தை சாகுபடி செய்துவந்தார். இப்பயிரில் லாபம் எடுத்துவந்தாலும் ஆடுதுறை43 ரகத்தில் கோடையில் அதிக உஷ்ணத்தால் கதிரில் பால் பிடிக்கும் தருணத்தில் பால் சிதறி கருக்காய் அதிகமாக விழ ஆரம்பிக்கின்றது. அதனால் மகசூல் ஏக்கரில் 20 மூடைதான் கிடைத்தது. கோடை சற்று குறைவாக இருக்கும்போது நல்ல மகசூல் கிடைப்பதுண்டு. இதுசமயம் லோகுவிற்கு ஆடுதுறை45 என்ற நெல் ரகத்தை விவசாயிகள் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். ஆடுதுறை 45 ரகமும் ஆடுதுறை 43 போல் மிகவும் சன்னமான நெல்லினைக் கொண்ட ரகமாகும். இந்த பயிரை சொர்ணவாரியில் சாகுபடி செய்ய நினைத்து 2011ம்வருடம் மே மாதம் சித்திரைப் பட்டத்தில் ஆடுதுறை 45 ரகத்தினை அரும்பாடுபட்டு ஒரு ஏக்கரில் விவசாயி லோகு சாகுபடி செய்தார். பயிர் மிக செழிப்பாக வளர்ந்ததோடு அல்லாமல் வாளிப்பான கதிர்கள் வந்து பயிரைப் பார்த்தவர்கள் கவனத்தை ஈர்த்தது. பார்த்தவர்கள் எல்லாம் நல்ல மகசூல் கிடைக்கும் என்று கூறினார்கள். கதிர்கள் மிக சிறப்பாக வந்ததோடல்லாமல் நெல் மிக சன்னமாக இருந்தது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. பயிர் இவ்வாறு வளர்ந்து கொண்டிருக்கும்போது லோகு மிகப்பெரிய வியாபாரிகளைக் கூட்டி வந்து தனது பயிரைக் காட்டி என்ன விலை கிடைக்கும் என்ற கேட்டார். வியாபாரிகள் முதலில் எந்த கருத்தையும் கூறவில்லை. இருந்தாலும் ஒரு வியாபாரி சில நெல்மணிகளை எடுத்து கையில் தேய்த்து அரிசியை எடுத்து வைத்துக்கொண்டார். ஆனால் கருத்து ஒன்றும் சொல்லவில்லை. 
லோகு வியாபாரியின் கருத்தை தெரிந்துகொள்ள பொறுமையாக இருந்தார். ஒரு வாரம் கழித்து வந்த வியாபாரி லோகுவிடம், "உன் நெல் மிக சன்னமாக இருந்தாலும் அரிசி பச்சைக்கு வராது இருந்தாலும் வெண் புழுங்கலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது,' என்றார். என்ன விலை கொடுப்பீர்கள் என்று கேட்டதற்கு கிலோவிற்கு ரூ.8.50தான் கொடுப்பேன் என்றார். விவசாயி லோகு ரூ.9 கொடுங்கள் என்று கேட்டார். வியாபாரி மறுக்கவே வியாபாரி சொன்ன விலையே லோகு ஏற்றுக்கொண்டார்.
இந்த சமயத்தில் லோகு தனது கிராமத்தில் உள்ள ஆடுதுறை 43 ரகத்தை சாகுபடி செய்த விவசாயிகளை சந்தித்து உங்கள் பகுதியில் நெல் விலை விவரம் எப்படி என்று கேட்டார். வியாபாரிகள் கிலோவிற்கு ரூ.9 தருவேன் என்று சொன்னாலும் எங்கள் ஆடுதுறை 43 பயிர் எதிர்பார்த்த மகசூல் கொடுக்கவில்லை. ஏனெனில் நெல் மகசூலில் அதிகம் கருக்காய் போனதோடு கருப்பு நெல்கள் அதிகம் விழுந்துவிட்டன. விவசாயி லோகு மனதை திடப்படுத்திக் கொண்டு வந்த லாபம் வரட்டும் என்று தீர்மானம் செய்துகொண்டு தனது வயலில் அறுவடையை தயார்செய்ய ஆட்களை ஏற்பாடு செய்ய சென்றார்.
விவசாயி லோகு தனது அறுவடையை வெற்றிகரமாக செய்து முடித்தார். இப்பகுதி விவசாயிகள் லோகுவிற்கு என்ன மகசூல் வரும் என்று தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். லோகுவிற்கு ஏக்கர் சாகுபடி செலவு ரூ.10,036 ஆனது.
லோகுவிற்கு அறுவடையில் 25 மூடை மகசூல் கிடைத்தது (மூடை 80 கிலோ). ஒரு கிலோ ரூ.8.50 வீதம் ஒரு மூடை விலை ரூ.680.00. 25 மூடைகள் விலை ரூ.17,000. சாகுபடி செலவு ரூ.10,036 போக நிகர லாபம் ரூ.6,964 கிடைத்தது. வைக்கோல் வரவு ரூ.1000. மொத்த வரவு ரூ.7,964. விவசாயி லோகு சாகுபடியில் திருப்தி அடைந்தார். மேலும் ஆடுதுறை 45 ரகத்திற்கு ஆடுதுறை 43 ரகத்தைவிட அதிக மகசூல் திறன் உள்ளதை தெரிந்துகொண்டு தொடர்ந்து ஆடுதுறை 45 ரகத்தை சாகுபடி செய்யலாம் என்ற எண்ணத்திற்கு அனைவரும் வந்தனர். இந்த ரகம் மேலும் பரவுவதற்கு விவசாய இலாகா அதிகாரிகள் ரகத்தின் விதையை கொடுத்து உதவுவது குறிப்பிடத்தக்கது. ஆடுதுறை 45 தமிழகத்தில் இயற்கையாகவே பரவிவருகிறது.

வேளாண் உற்பத்தியை அதிகரிக்க கூடப்பாக்கம் வேங்கடபதி யோசனை

வேளாண் சாகுபடியில் பயிர்களுக்கு ஏற்ப ஆர்த்தோ பாஸ்பரிக் அமிலத்தின் சதவீதத்தை குறைத்தும் அதிகரித்தும் பயன்படுத்துவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என கூடப்பாக்கம் வேங்கடபதி ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளார்.
வேளாண் பயிர்கள் வளர்ச்சிக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் மிக அவசியம். பாஸ்பரஸ் என்ற மணிச்சத்து, பயிர்களின் வேர்களை அதிகரிக்க உதவும். சூப்பர் பாஸ்பேட் வயலில் இடும்போது முழுமையாக கரைவதில்லை. 50 சதவீதம் கரைந்த நிலையில் இதை பயிர்கள் எடுத்துக்கொள்ள பல இடையூறு ஏற்படுகிறது. இதனால் மகசூல் குறையும்.
குறிப்பிட்ட பயிர்களுக்கு பாஸ்பரஸ் அதிக அளவில் தேவைப்படும். இத்தகைய பயிர்களுக்கு ஏற்ற மணிச்சத்து உரங்கள் மார்க்கெட்டில் கிடைப்பதில்லை. மணிச்சத்து உரம் தயாரிக்க, ஆர்த்தோ பாஸ்பரிக் அமிலம் மூலப் பொருளாகப் பயன்படுகிறது. இத்திரவத்தை செடிகளுக்கு ஏற்ப குறைத்தும் அதிகரித்தும் தண்ணீருடன் கலந்து வேர்பகுதியில் செலுத்தினால் தேவையான மணிச்சத்து கிடைத்து, அதிக வேர்கள் உருவாகி, செடிகள் ஆரோக்கியமாக வளர்ந்து அதிக மகசூலைத் தரும்.
இந்த முறையை சவுக்கு, வாழை பயிர்களில் சோதித்துப் பார்த்ததில் வேர்கள் அதிகளவில் ஊடுருவி, தேவையான சத்துக்களை எடுத்துக் கொண்டன. சவுக்கு வளர்ப்பில் பரிசோதனை செய்ததில், ஒரு சவுக்கு மரத்தின் எடை 3 ஆண்டுகளில் 80 கிலோ, 50 அடி உயரம், 20 அங்குலம் சுற்றளவு கொண்டதாக வளர்ந்தது. மேலும் சில பயிர்களில் இம்முறையைப் பயன்படுத்தி சோதித்துப் பார்த்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது. ஆர்த்தோ பாஸ்பரிக் அமிலம் பயன்படுத்துவதால் நோய் தடுப்பு மருந்தாகவும் செயல்படுகிறது.
-வேங்கடபதி, கூடப்பாக்கம். 

நிலத்தை சமன்படுத்த லேசர் லெவலர்




பண்ணை நிலங்களை நுட்பமாகவும், துல்லியமாகவும் சமப்படுத்துவதற்காக லேசர் ஸ்டார் என்னும் டிராக்டரில் இயங்கி லேசர் வழிகாட்டுதலில் நிலத்தைச் சமன்செய்யும் உபகரணம் உள்ளது. அது அதிகபட்சம் 30% வரை பாசன நீர்த்தேவையை குறைக்கிறது. களத்தைச் சமப்படுத்தும் நேரத்தேவையைக் குறைத்து பண்ணையின் உற்பத்தித் திறனை மேம்படுத்துகிறது.

லேசர் உபயோகித்து நிலத்தை சமப்படுத்துவதன் பலன்கள்
* பயிர்களின் உற்பத்தித் திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது.
* நிலத்தைச் சமப்படுத்துவதற்காகத் தேவைப்படும் நேரத்தைக் குறைக்கிறது.
* முழுப்பண்ணை நிலத்திற்கும் நீர் சம அளவில் விநியோகம்.
* பயிர்களின் வளர்ச்சி சீராக அமையும்.
* அதிகபட்சம் 30% வரை நீர்த்தேவையைக் குறைத்து நீர் ஆதாரத்தைத் திறம்பட உபயோகிக்கச் செய்கிறது.
* களைகளின் பிரச்னையைக் குறைக்கிறது.

பயன்பாடுகள்
* பண்ணை நிலம்
* சாலை மற்றும் வடிகால் வசதி சிறப்பம்சங்கள்
* 3 சமப்படுத்தும் தேர்வுகளுடன் கிடைக்கிறது.
* ஒற்றை அச்சு சரிவு கட்டுப்பாடு
* நிலத்தைச் சமப்படுத்துவது
* இரட்டை அச்சு சரிவு கட்டுப்பாடு

செயல்பாட்டு தூரம்
* 600 மீ. வட்டம் (சமநிலம்)
* 900 மீ. விட்டம் (ஒற்றை சரிவு)
* 1200 மீட்டர்கள் விட்டம் (இரட்டை சரிவு)
* துல்லியத்தன்மை 1/8'' இயக்கி
* 45 எச்.பி. அல்லது அதற்கும் அதிகம் எச்.பி. உள்ள டிராக்டர் கொண்டு? இயக்கலாம்.
* டிராக்டர் ஹைட்ராலிக் பவர் மூலம் இயங்குகிறது.
* லேசர் லெவலரை டிராக்டருடன் இணைப்பது மற்றும் வேலை துவங்க தயார் செய்வது மிகவும் எளிது.
* வலுவான, அதிர்ச்சியைத் தாங்கும் வகையில் கட்டுமான அமைப்பு.
* நம்பிக்கையான சிக்கலில்லாத இயக்கம்

கத்தரி சாகுபடி - இயற்கை முறை




சாகுபடிக்கு முதலில் தேவைப்படுவது நாற்றங்கால். இதன் பரப்பு 25 அடி நீளம். 4 அடி அகலம், 4 அங்குலம் உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். நாற்றங்காலுக்கு 500 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் இடவேண்டும். இதோடு இயற்கை உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இவைகளை ஒரு கிலோ வீதம் போடவேண்டும். காய்கறி செடிகளில் தோன்றும் மிகக்கொடிய வாடல் நோயினைக் கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மா விரிடி என்னும் இயற்கை சம்பந்தப்பட்ட பூசணக்கொல்லி ஒரு கிலோ அளவினை நாற்றங்காலுக்கு இட்டு மண்ணினை நன்கு கொத்திவிட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை விதைக்க வேண்டும்.
நடவு வயலில் நல்ல வடிகால் வசதி உண்டாவதற்காக உளி கலப்பை கொண்டு உழவேண்டும். பிறகு நன்கு மக்கிய தொழு உரம் 15 டன் போட்டு நிலத்தை உழுது பார்சால் போடவேண்டும். (இரண்டரை x இரண்டு அடி) நாற்றங்காலில் இருந்து நல்ல திடமான 28 நாள் வயதுடைய நாற்றினை எடுத்து நடவு வயலில் நடவேண்டும். (பாருக்கு பார் இரண்டரை அடி, செடிக்கு செடி 2 அடி) நடவு நட்ட 21, 42, 63, 84 ஆகிய நாட்களில் ஒவ்வொரு முறையும் ஒரு டன் மக்கிய தொழு உரம், ஒரு கிலோ பாஸ்போ பாக்டீரியா, ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடி இவைகளைக் கலந்து வயலில் இட்டு பாசனம் செய்ய வேண்டும். செடிகளுக்கு கவனமாக பயிர் பாதுகாப்பு செய்ய வேண்டும். நடவு நட்ட மூன்றுவாரம் கழித்து மாதம் இருமுறை உயிர் பூச்சிக்கொல்லி மருந்துகளான பவேரியா பாசியானா இதனை ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று மில்லி அளவு கலந்து தெளிக்க வேண்டும். வாரம் ஒருமுறை பைட்டோபிராட் என்னும் இயற்கை பூச்சி விரட்டியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி அளவு கலந்து தெளிக்கவும். இந்த இரண்டு இயற்கை மருந்துகளும் வெகு சிறப்பாக செயல்பட்டு விவசாயிகள் விஷ மருந்துகளை உபயோகிப்பதில் இருந்து காப்பாற்றுகின்றன. வளரும் செடிகளுக்கு காலத்தில் பாசனம் செய்ய வேண்டும். இயற்கை முறையை அனுசரிக்கும்போது பாசன செலவில் மிச்சம் ஏற்படும். பாசன நீர் கிரகிக்கப்பட்டு பூமியை தளர கொத்திவிட வேண்டும். உடனே மக்கிய தொழு உரத்தை பூமிக்கு இட்டு பாசனம் செய்யலாம். விவசாயிகள் தாங்கள் சேகரித்துள்ள தொழு உரத்தை அவ்வப்போது மேலே விவரித்தபடி செடிகளுக்கு இட்டு வரவேண்டும். இதனால் செடிகள் வெகு செழிப்பாக வளர்ந்து வருகின்றன. மேற்கண்ட பணிகளை கவனத்தோடும், நம்பிக்கையோடும் செய்யும்போது கத்தரி செடிகள் நட்ட 75வது நாளிலிருந்து 120 நாட்கள் வரை அறுவடை கொடுத்துக் கொண்டிருக்கும். ஒரு ஏக்கரில் 65 கிலோ கொண்ட மூடை 135 கிடைக்கும்.
இயற்கை முறை சாகுபடியில் ஏக்கருக்கு ஆகும் செலவு ரூ.22,000 ஆகும். காய்கள் விற்பனையில் ரூ.68,000 கிடைக்கும். 
இயற்கை விவசாயம் இளமையை அதிகரிக்கின்றது: மகசூல் கொடுக்கும் நாட்களை அதிகரிக்கின்றது. செடிகள் அதிகம் காய்க்கும். காய்ப்பு சிறிது குறையும்பொழுது செடிகளை மீண்டும் கொத்திவிட்டு, நன்கு மக்கிய தொழு உரம் இட்டு பயிருக்கு இயற்கை முறை உரம் இட்டு பாசனம் செய்தால் செடிகள் வீரியம் கொண்டு காய்க்கும்