Monday, November 14, 2011

"பை' முறை விவசாயம்




இயற்கையான உணவு எப்பொழுதுமே சிறந்தது. சரிவிகித, சத்தான, தீங்கு விளைவிக்காத உணவினை குழந்தைகளுக்கு தருவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இதை நான் இரு குழந்தைகளின் தாயாக சொல்கிறேன் என்கிறார் சித்ரா. ஐரோப்பிய நாட்டில் பயணம் செய்யும்போது பார்த்த சீதோஷ்ண நிலை, சமன்படுத்தப் பட்ட காய்கறி தோட்ட தொழிற் சாலைகளை மனதில் கொண்டு திட்டமிடப் பட்டதுதான் இந்த வீட்டுக் குறுந்தோட்டமும், வீட்டு மாடித் தோட்டமும். தேங்காய் மட்டையிலிருந்து கிடைக்கும் துகள்களை ஆதாரமாகக் கொண்டு அத்துடன் இயற்கைத் தாதுக் களையும், நுண்ணுயிர்களையும் கலந்து செடிகள் வளர்வதற்கான ஊடகத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்களின் உதவியோடு உருவாக்கி உள்ளார்.
இந்த ஊடகத்தை ஆராய்ந்தவர்கள் இது இயற்கையான சத்துமிகுந்த ஊடகம் மட்டுமில்லாமல் மிக சிறிதளவு தண்ணீர் இருந்தாலே செடிகள் வளர்வதற்கு போதுமானது என்கிறார்கள். கலக்கப்பட்ட ஊடகத்தை பைகளில் போட்டு விதைச்சான்று பெற்ற வீரிய விதைகளை விதைத்து வீட்டில் சூரிய வெளிச்சம் படும் வராந்தா, பால்கனி, மாடி, ஜன்னல் போன்ற இடங்களில் வளரவிடுவதுதான் வீட்டு குறுந்தோட்டம்.
அன்றாட தேவைக்கான கீரைகள், காய்கறிகள், அலங்கார செடிவகைகள், மூலிகை செடிகள் எது வேண்டுமானாலும் இந்தப் பைகளில் வளர்க்கலாம். பைகளில் விவசாயமா? கதை சொல்கிறார்களா? இல்லை இல்லை. நிஜம். 3 செடியிலிருந்து 8 கிலோ கத்தரிக்காய், 15 கிலோ தக்காளி அறுவடை செய்யப் படுகிறது. இச்செடிகளுக்கு வரும் நோய்களைக் கட்டுப்படுத்த பஞ்சகவ்யா இயற்கைவழி பூச்சிவிரட்டியும் உபயோகப்படுத்தப் படுகிறது.
கீரைகள்: கீரைகளில் புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்கீரை, கருவேப்பிலை, சிறுகீரை, பாலக்கீரை, பசலைக்கீரை, பொன்னாங் கண்ணிக் கீரை, வல்லாரைக்கீரை, தண்டுக்கீரை, புளிச்சகீரை ஆகியவை பயிர் செய்யப் படுகின்றன. காய்கறிகளில் கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, பாகற்காய், சுரைக்காய், முள்ளங்கி, பீட்ரூட், வெள்ளரி, அவரை ஆகியவை பயிர் செய்யப்படுகிறது.
மூலிகைச்செடிகள்: நமது அன்றாட வாழ்விற்குத் தேவையான மூலிகைகளையும் இம்முறையில் வளர்க்கலாம். மிக முக்கியமான மூலிகைகளான கற்பூரவல்லி, துளசி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை, சிறியாநங்கை, பெரியநங்கை, இன்சுலின், தத்துரா (கருஊமத்தை), பல்வலிப்பூண்டு, பார்வதிதழை, ஆடாதொடை, தைம் ரோஸ்மேரி, மின்ட் வகைகள், அறுபத்தாம் தழை, வெட்டிவேர், லேவண்டர், லெமன்கிராஸ், கரிசலாங்கண்ணி, தூதுவளை, அப்பகோவை, முடக்கத்தான், நொச்சி, பொடுதலை வளர்க்கலாம்.
இம்மூலிகைகளை வளர்க்கும் முறை பற்றியும், உபயோகிக்கும் முறை பற்றியும் இத்துறையில் பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் உதவியோடு எடுத்துரைக்கப் படுகிறது. மாடியிலோ அல்லது தரையிலோ 20+10 அளவில் வெயில் படும்படியான இடவசதி இருக்கின்றதா? இருந்தால் இந்த பசுமைக்குடில் அமைக்கலாம். ஐந்து நபர் கொண்ட குடும்பத்தின் காய்கனி, கீரைகள் தேவைகளை இந்த பசுமைக்குடில் பூர்த்தி செய்யும்

சின்னார் 20 - புதிய ரக நெல்



ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கீழமானங்கரை கிராமத்தில் லேட். சின்னார் என்ற விவசாயி ஒரு புதிய நெல்ரகத்தை அதே கிராமத்தில் உள்ள புஷ்பம் என்பவர் உதவியுடன் உருவாக்கியுள்ளார். இந்த நெல் 110-115 நாட்கள் வயதுஉடையது. நெல் கத்தரி ஊதா கலரில், சாயாத நெல் வகையைச் சேர்ந்தது.
புதிய நெல் ரகம் உருவான வரலாறு: 7 வருடங்களுக்கு முன்னர் புஷ்பம் என்ற விவசாயி முதுகுளத்தூர் பஞ்சாயத்து யூனியனில் எடிடி 36 என்ற நெல் ரக விதையை வாங்கிக் கொணர்ந்து புரட்டாசி மாதம் வயலில் விதைத்தார். நெல் முளைத்து பயிரானது. அச்சமயம் நெல்லில் களை எடுக்க முற்பட்டார். ஒரு பயிர் மட்டும் கத்தரி ஊதா கலரில் களைச்செடி போன்று தென்பட்டது. இது களைச்செடி என்று பிடுங்க முற்பட்ட சமயம் நெல்மணி போன்ற கதிரும் தென்பட்டது. இந்த நெல் பயிரை பார்வையிட்ட சின்னார் என்ற பக்கத்து தோட்ட விவசாயி இதனை பிடுங்கிச்சென்று அவருடைய வயலில் நட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தார். ஆரம்பத்தில் கத்தரி கலரில் இருந்த பயிரானது ரோஜா நிறத்தில் மாறியது. நெல்லின் மணிகள் சற்று நீளம் அதிகம் கொண்டதாக இருந்தன. இதன் மணிகளை தனியாக அறுவடை செய்து அடுத்த பட்டத்தில் விதைத்தார். இவ்வாறாக பிரித்து எடுத்த நெல்லை "நாதன்' என்பவர் ஆலோசனைப்படி தன்னுடைய பெயரிலேயே சின்னார் 20 என்று பெயரிட்டார். இதில் 20 என்பது 2000/2004 வருடத்தைக் குறிக்கும். அதாவது 20ம் நூற்றாண்டு என்பதைக்குறிக்க இவ்வாறு பெயரிட்டார். இந்த நெல்லின் நிறத்தையும் நீண்ட மணிகளையும் பார்த்த உள்ளூர் விவசாயிகள் அதிசயப்பட்டு தாங்களும் பயிரிடமுற்பட்டனர். இவ்வூரில் புஷ்பம் என்பவரும் மற்ற விவசாயிகளும் இந்த நெல்லை தங்கள் வயலில் விளைவித்து நல்ல பலன் கண்டனர். இதனால் இந்த ரகம் கீழமானங்கரை மற்றும் பக்கத்து கிராமங்களிலும் உள்ள விவசாயிகளால் சுமார் 150 ஏக்கர் நிலங்களுக்கும் மேலாக பயிர் செய்யப்படுகிறது.
சின்னார் நெல் ரகத்தின் சிறப்பு தன்மைகள்: நெற்பயிர் வளரும் சமயம் கத்தரி ஊதா கலரில் காணப்படும். அறுவடை செய்யும் போது ரோஜா கலரில் மாறிவிடும். நெல்லின் உயரம் சுமார் 88 செ.மீ. கதிரின் நீளம் 22 செ.மீ. ஒரு பயிரில் 19-30 தூர்கள் உள்ளன. இதில் கதிர்பிடிக்கும் தூர்கள் 11 வரை உள்ளன. இது 115 நாட்களில் அறுவடை ஆகும். ஒரு கதிரில் 85-100 நெல்மணிகள் காணப்படும். 1000 நெல்மணிகளின் எடை 25 கிராம் ஆகும். இந்த நெல் ரகம் சாயாது. ஏக்கருக்கு 40-44 மூடைகள் விளைச்சல் கிடைக்கும்.
இந்த நெல் ரகம் பரவி உள்ள ஊர்கள்: இந்த நெல்லின் சிறப்பம்சங்களை கேள்விப்பட்டு பக்கத்து ஊரில் உள்ள விவசாயிகள் இந்த நெல் ரகத்தை விதைக்காக கூடுதல் விலைகொடுத்து வாங்கிச் செல்கின்றனர். இந்த நெல் கீழ்க்கண்ட ஊர்களில் பரவலாக பயிர் செய்யப்படுகின்றன.
1. தேரூர்வெளி, 2. கீழப்பானூர், 3. உத்தரகோசமங்கை, 4. சாத்தான் குளம், 5. கமுதி, 6. பொதிகுளம், 7. முதுகுளத்தூர், 8. குமாரகுறிஞ்சி, 9. பேரையூர். இந்தரகம் இப்போது சிவகங்கை மாவட்டத்திலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த நெல் ரகத்தை மூடைக்கு ரூ.100 அதிகம் கொடுத்து விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர். இதில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் தன்மை குறைவு என்று கூறுகின்றனர். 

செம்மை நெல் நடவுக்கேற்ற நடவு இயந்திரம்:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் குமுளூர் வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் செம்மைநெல் நடவு செய்வதற்கான இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட, நமது நாட்டில் கிடைக்கும் யான்ஜி நெல் நடவு இயந்திரத்தில் பற்சக்கரங்களை 24 செ.மீ. பயிருக்கு பயிர் இடைவெளி வரும் வண்ணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நெல் நாற்றை எடுத்து நடவு செய்யும் விரல்கள் அமைப்பு மாற்றம் செய்யப்பட்டு 1-2 நாற்றுகளை நடவு செய்யும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெல் நடவு செய்யும் இயந்திரம் 24x24 செ.மீ. இடைவெளியில் நாற்றை நடவு செய்யும். ஒருமுறை முன்னோக்கி செல்லும்போது 8 வரிசை நடவு செய்துவிட்டு, திரும்பி அடுத்த சாலில் நடவு செய்யும்போது சதுர முறையில் நடவு செய்யும் இடத்தைக் குறிக்கும் வண்ணம் வரிசைக் குறிகள் இயந்திரத்தின் வலது, இடது திசைகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறிகளின் குறியீட்டை சரியான இடத்தில் அமைத்து சதுர நடவுமுறை செய்யலாம். நடவு செய்யும்போது இயந்திரத்துடன் நாற்றுக்களை எடுத்துச்செல்லும் வண்ணம் 8 பாய் நாற்றுக்களை வைக்க அமைப்பு ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. பாய் நாற்றங்கால் முறையில் சிறிது கவனத்துடன் நாற்றுக்களை பராமரிக்க வேண்டும். ஒரு ஏக்கரில் நடவு செய்ய 2 மணி நேரம் ஆகும்.
செம்மை நெல் சாகுபடிக்கேற்ற அடையாள கைக்கருவி: செம்மை நெல் சாகுபடியில் அதிக இடைவெளியில் சதுரவடிவ நடவுமுறை முக்கியமான கோட்பாடாகும். சதுர நடவில் பயிருக்கு தேவையான காற்றோட்டம் கிடைக்கிறது. மேலும் களைக்கருவியை இரண்டு திசைகளிலும் பயன்படுத்துவதற்கு ஏதுவான முறை. செம்மை நெல் சாகுபடியில் சதுர நடவை மேற்கொள்ள அடையாளக் குறியிடப்பட்ட கயிறு (25x25செ.மீ.) பயன்படுத்துகின்றனர். இந்த முறையில் ஒரே திசையில் மட்டுமே வரிசை நடவு அமைகிறது. இதனால் களைக்கருவியை இரண்டு திசைகளிலும் பயன்படுத்த இயலாததால் பயிரின் தூர்கட்டும் திறன் குறைகிறது. இதைத் தவிர்க்க உருளும் அடையாளக்கருவி (25x25 செ.மீ.) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அடையாளக் கருவியை வயலில் உருட்டும்போது தொடர்ச்சியான சதுர வடிவ அமைப்பை அடையாளத்துடன் ஏற்படுத்துகிறது. குறியீடு உள்ள இடத்தில் நாற்றுக்கள் நடப்படுவதால் சீராகவும், வேகமாகவும் சதுர முறையில் நடவு செய்ய இயலும்

தமிழகத்தில் இயற்கையாக பரவிவரும் ஆடுதுறை 45 நெல்



காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கம் கொளத்தூரில் விவசாயம் செய்து வருபவர் கே.லோகு. இவர் நெல் சாகுபடியில் வல்லுநர். எப்போதும் திறமையாக நன்கு தேர்ந்தெடுத்த நெல் ரகங்களை இவர் சாகுபடி செய்வது வழக்கம். கொளத்தூர் பகுதியில் நீர்வளம் சிறப்பாக இருப்பதால் விவசாயம் சிறப்பாக செய்யப் படுகிறது. இப்பகுதியில் நெல் விவசாயம் மூன்று பட்டங்களில் செய்யப்படுகிறது. சொர்ணவாரிப் பட்டத்தைத் தொடர்ந்து சம்பா மற்றும் நவரைப் பட்டங்களில் நெல் விவசாயம் செய்யப்படுகின்றது. போட்டி மனப்பான்மையில் விவசாயிகள் சிறப்பாக நெல் சாகுபடியை செய்து வருகின்றனர்.
கே.லோகு சொர்ணவாரிப் பட்டத்தில் ஆடுதுறை 43 ரகத்தை சாகுபடி செய்துவந்தார். இப்பயிரில் லாபம் எடுத்துவந்தாலும் ஆடுதுறை43 ரகத்தில் கோடையில் அதிக உஷ்ணத்தால் கதிரில் பால் பிடிக்கும் தருணத்தில் பால் சிதறி கருக்காய் அதிகமாக விழ ஆரம்பிக்கின்றது. அதனால் மகசூல் ஏக்கரில் 20 மூடைதான் கிடைத்தது. கோடை சற்று குறைவாக இருக்கும்போது நல்ல மகசூல் கிடைப்பதுண்டு. இதுசமயம் லோகுவிற்கு ஆடுதுறை45 என்ற நெல் ரகத்தை விவசாயிகள் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். ஆடுதுறை 45 ரகமும் ஆடுதுறை 43 போல் மிகவும் சன்னமான நெல்லினைக் கொண்ட ரகமாகும். இந்த பயிரை சொர்ணவாரியில் சாகுபடி செய்ய நினைத்து 2011ம்வருடம் மே மாதம் சித்திரைப் பட்டத்தில் ஆடுதுறை 45 ரகத்தினை அரும்பாடுபட்டு ஒரு ஏக்கரில் விவசாயி லோகு சாகுபடி செய்தார். பயிர் மிக செழிப்பாக வளர்ந்ததோடு அல்லாமல் வாளிப்பான கதிர்கள் வந்து பயிரைப் பார்த்தவர்கள் கவனத்தை ஈர்த்தது. பார்த்தவர்கள் எல்லாம் நல்ல மகசூல் கிடைக்கும் என்று கூறினார்கள். கதிர்கள் மிக சிறப்பாக வந்ததோடல்லாமல் நெல் மிக சன்னமாக இருந்தது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. பயிர் இவ்வாறு வளர்ந்து கொண்டிருக்கும்போது லோகு மிகப்பெரிய வியாபாரிகளைக் கூட்டி வந்து தனது பயிரைக் காட்டி என்ன விலை கிடைக்கும் என்ற கேட்டார். வியாபாரிகள் முதலில் எந்த கருத்தையும் கூறவில்லை. இருந்தாலும் ஒரு வியாபாரி சில நெல்மணிகளை எடுத்து கையில் தேய்த்து அரிசியை எடுத்து வைத்துக்கொண்டார். ஆனால் கருத்து ஒன்றும் சொல்லவில்லை. 
லோகு வியாபாரியின் கருத்தை தெரிந்துகொள்ள பொறுமையாக இருந்தார். ஒரு வாரம் கழித்து வந்த வியாபாரி லோகுவிடம், "உன் நெல் மிக சன்னமாக இருந்தாலும் அரிசி பச்சைக்கு வராது இருந்தாலும் வெண் புழுங்கலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது,' என்றார். என்ன விலை கொடுப்பீர்கள் என்று கேட்டதற்கு கிலோவிற்கு ரூ.8.50தான் கொடுப்பேன் என்றார். விவசாயி லோகு ரூ.9 கொடுங்கள் என்று கேட்டார். வியாபாரி மறுக்கவே வியாபாரி சொன்ன விலையே லோகு ஏற்றுக்கொண்டார்.
இந்த சமயத்தில் லோகு தனது கிராமத்தில் உள்ள ஆடுதுறை 43 ரகத்தை சாகுபடி செய்த விவசாயிகளை சந்தித்து உங்கள் பகுதியில் நெல் விலை விவரம் எப்படி என்று கேட்டார். வியாபாரிகள் கிலோவிற்கு ரூ.9 தருவேன் என்று சொன்னாலும் எங்கள் ஆடுதுறை 43 பயிர் எதிர்பார்த்த மகசூல் கொடுக்கவில்லை. ஏனெனில் நெல் மகசூலில் அதிகம் கருக்காய் போனதோடு கருப்பு நெல்கள் அதிகம் விழுந்துவிட்டன. விவசாயி லோகு மனதை திடப்படுத்திக் கொண்டு வந்த லாபம் வரட்டும் என்று தீர்மானம் செய்துகொண்டு தனது வயலில் அறுவடையை தயார்செய்ய ஆட்களை ஏற்பாடு செய்ய சென்றார்.
விவசாயி லோகு தனது அறுவடையை வெற்றிகரமாக செய்து முடித்தார். இப்பகுதி விவசாயிகள் லோகுவிற்கு என்ன மகசூல் வரும் என்று தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். லோகுவிற்கு ஏக்கர் சாகுபடி செலவு ரூ.10,036 ஆனது.
லோகுவிற்கு அறுவடையில் 25 மூடை மகசூல் கிடைத்தது (மூடை 80 கிலோ). ஒரு கிலோ ரூ.8.50 வீதம் ஒரு மூடை விலை ரூ.680.00. 25 மூடைகள் விலை ரூ.17,000. சாகுபடி செலவு ரூ.10,036 போக நிகர லாபம் ரூ.6,964 கிடைத்தது. வைக்கோல் வரவு ரூ.1000. மொத்த வரவு ரூ.7,964. விவசாயி லோகு சாகுபடியில் திருப்தி அடைந்தார். மேலும் ஆடுதுறை 45 ரகத்திற்கு ஆடுதுறை 43 ரகத்தைவிட அதிக மகசூல் திறன் உள்ளதை தெரிந்துகொண்டு தொடர்ந்து ஆடுதுறை 45 ரகத்தை சாகுபடி செய்யலாம் என்ற எண்ணத்திற்கு அனைவரும் வந்தனர். இந்த ரகம் மேலும் பரவுவதற்கு விவசாய இலாகா அதிகாரிகள் ரகத்தின் விதையை கொடுத்து உதவுவது குறிப்பிடத்தக்கது. ஆடுதுறை 45 தமிழகத்தில் இயற்கையாகவே பரவிவருகிறது.

வேளாண் உற்பத்தியை அதிகரிக்க கூடப்பாக்கம் வேங்கடபதி யோசனை

வேளாண் சாகுபடியில் பயிர்களுக்கு ஏற்ப ஆர்த்தோ பாஸ்பரிக் அமிலத்தின் சதவீதத்தை குறைத்தும் அதிகரித்தும் பயன்படுத்துவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் என கூடப்பாக்கம் வேங்கடபதி ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளார்.
வேளாண் பயிர்கள் வளர்ச்சிக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் மிக அவசியம். பாஸ்பரஸ் என்ற மணிச்சத்து, பயிர்களின் வேர்களை அதிகரிக்க உதவும். சூப்பர் பாஸ்பேட் வயலில் இடும்போது முழுமையாக கரைவதில்லை. 50 சதவீதம் கரைந்த நிலையில் இதை பயிர்கள் எடுத்துக்கொள்ள பல இடையூறு ஏற்படுகிறது. இதனால் மகசூல் குறையும்.
குறிப்பிட்ட பயிர்களுக்கு பாஸ்பரஸ் அதிக அளவில் தேவைப்படும். இத்தகைய பயிர்களுக்கு ஏற்ற மணிச்சத்து உரங்கள் மார்க்கெட்டில் கிடைப்பதில்லை. மணிச்சத்து உரம் தயாரிக்க, ஆர்த்தோ பாஸ்பரிக் அமிலம் மூலப் பொருளாகப் பயன்படுகிறது. இத்திரவத்தை செடிகளுக்கு ஏற்ப குறைத்தும் அதிகரித்தும் தண்ணீருடன் கலந்து வேர்பகுதியில் செலுத்தினால் தேவையான மணிச்சத்து கிடைத்து, அதிக வேர்கள் உருவாகி, செடிகள் ஆரோக்கியமாக வளர்ந்து அதிக மகசூலைத் தரும்.
இந்த முறையை சவுக்கு, வாழை பயிர்களில் சோதித்துப் பார்த்ததில் வேர்கள் அதிகளவில் ஊடுருவி, தேவையான சத்துக்களை எடுத்துக் கொண்டன. சவுக்கு வளர்ப்பில் பரிசோதனை செய்ததில், ஒரு சவுக்கு மரத்தின் எடை 3 ஆண்டுகளில் 80 கிலோ, 50 அடி உயரம், 20 அங்குலம் சுற்றளவு கொண்டதாக வளர்ந்தது. மேலும் சில பயிர்களில் இம்முறையைப் பயன்படுத்தி சோதித்துப் பார்த்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது. ஆர்த்தோ பாஸ்பரிக் அமிலம் பயன்படுத்துவதால் நோய் தடுப்பு மருந்தாகவும் செயல்படுகிறது.
-வேங்கடபதி, கூடப்பாக்கம். 

நிலத்தை சமன்படுத்த லேசர் லெவலர்




பண்ணை நிலங்களை நுட்பமாகவும், துல்லியமாகவும் சமப்படுத்துவதற்காக லேசர் ஸ்டார் என்னும் டிராக்டரில் இயங்கி லேசர் வழிகாட்டுதலில் நிலத்தைச் சமன்செய்யும் உபகரணம் உள்ளது. அது அதிகபட்சம் 30% வரை பாசன நீர்த்தேவையை குறைக்கிறது. களத்தைச் சமப்படுத்தும் நேரத்தேவையைக் குறைத்து பண்ணையின் உற்பத்தித் திறனை மேம்படுத்துகிறது.

லேசர் உபயோகித்து நிலத்தை சமப்படுத்துவதன் பலன்கள்
* பயிர்களின் உற்பத்தித் திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது.
* நிலத்தைச் சமப்படுத்துவதற்காகத் தேவைப்படும் நேரத்தைக் குறைக்கிறது.
* முழுப்பண்ணை நிலத்திற்கும் நீர் சம அளவில் விநியோகம்.
* பயிர்களின் வளர்ச்சி சீராக அமையும்.
* அதிகபட்சம் 30% வரை நீர்த்தேவையைக் குறைத்து நீர் ஆதாரத்தைத் திறம்பட உபயோகிக்கச் செய்கிறது.
* களைகளின் பிரச்னையைக் குறைக்கிறது.

பயன்பாடுகள்
* பண்ணை நிலம்
* சாலை மற்றும் வடிகால் வசதி சிறப்பம்சங்கள்
* 3 சமப்படுத்தும் தேர்வுகளுடன் கிடைக்கிறது.
* ஒற்றை அச்சு சரிவு கட்டுப்பாடு
* நிலத்தைச் சமப்படுத்துவது
* இரட்டை அச்சு சரிவு கட்டுப்பாடு

செயல்பாட்டு தூரம்
* 600 மீ. வட்டம் (சமநிலம்)
* 900 மீ. விட்டம் (ஒற்றை சரிவு)
* 1200 மீட்டர்கள் விட்டம் (இரட்டை சரிவு)
* துல்லியத்தன்மை 1/8'' இயக்கி
* 45 எச்.பி. அல்லது அதற்கும் அதிகம் எச்.பி. உள்ள டிராக்டர் கொண்டு? இயக்கலாம்.
* டிராக்டர் ஹைட்ராலிக் பவர் மூலம் இயங்குகிறது.
* லேசர் லெவலரை டிராக்டருடன் இணைப்பது மற்றும் வேலை துவங்க தயார் செய்வது மிகவும் எளிது.
* வலுவான, அதிர்ச்சியைத் தாங்கும் வகையில் கட்டுமான அமைப்பு.
* நம்பிக்கையான சிக்கலில்லாத இயக்கம்

கத்தரி சாகுபடி - இயற்கை முறை




சாகுபடிக்கு முதலில் தேவைப்படுவது நாற்றங்கால். இதன் பரப்பு 25 அடி நீளம். 4 அடி அகலம், 4 அங்குலம் உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். நாற்றங்காலுக்கு 500 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் இடவேண்டும். இதோடு இயற்கை உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இவைகளை ஒரு கிலோ வீதம் போடவேண்டும். காய்கறி செடிகளில் தோன்றும் மிகக்கொடிய வாடல் நோயினைக் கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மா விரிடி என்னும் இயற்கை சம்பந்தப்பட்ட பூசணக்கொல்லி ஒரு கிலோ அளவினை நாற்றங்காலுக்கு இட்டு மண்ணினை நன்கு கொத்திவிட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை விதைக்க வேண்டும்.
நடவு வயலில் நல்ல வடிகால் வசதி உண்டாவதற்காக உளி கலப்பை கொண்டு உழவேண்டும். பிறகு நன்கு மக்கிய தொழு உரம் 15 டன் போட்டு நிலத்தை உழுது பார்சால் போடவேண்டும். (இரண்டரை x இரண்டு அடி) நாற்றங்காலில் இருந்து நல்ல திடமான 28 நாள் வயதுடைய நாற்றினை எடுத்து நடவு வயலில் நடவேண்டும். (பாருக்கு பார் இரண்டரை அடி, செடிக்கு செடி 2 அடி) நடவு நட்ட 21, 42, 63, 84 ஆகிய நாட்களில் ஒவ்வொரு முறையும் ஒரு டன் மக்கிய தொழு உரம், ஒரு கிலோ பாஸ்போ பாக்டீரியா, ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடி இவைகளைக் கலந்து வயலில் இட்டு பாசனம் செய்ய வேண்டும். செடிகளுக்கு கவனமாக பயிர் பாதுகாப்பு செய்ய வேண்டும். நடவு நட்ட மூன்றுவாரம் கழித்து மாதம் இருமுறை உயிர் பூச்சிக்கொல்லி மருந்துகளான பவேரியா பாசியானா இதனை ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று மில்லி அளவு கலந்து தெளிக்க வேண்டும். வாரம் ஒருமுறை பைட்டோபிராட் என்னும் இயற்கை பூச்சி விரட்டியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி அளவு கலந்து தெளிக்கவும். இந்த இரண்டு இயற்கை மருந்துகளும் வெகு சிறப்பாக செயல்பட்டு விவசாயிகள் விஷ மருந்துகளை உபயோகிப்பதில் இருந்து காப்பாற்றுகின்றன. வளரும் செடிகளுக்கு காலத்தில் பாசனம் செய்ய வேண்டும். இயற்கை முறையை அனுசரிக்கும்போது பாசன செலவில் மிச்சம் ஏற்படும். பாசன நீர் கிரகிக்கப்பட்டு பூமியை தளர கொத்திவிட வேண்டும். உடனே மக்கிய தொழு உரத்தை பூமிக்கு இட்டு பாசனம் செய்யலாம். விவசாயிகள் தாங்கள் சேகரித்துள்ள தொழு உரத்தை அவ்வப்போது மேலே விவரித்தபடி செடிகளுக்கு இட்டு வரவேண்டும். இதனால் செடிகள் வெகு செழிப்பாக வளர்ந்து வருகின்றன. மேற்கண்ட பணிகளை கவனத்தோடும், நம்பிக்கையோடும் செய்யும்போது கத்தரி செடிகள் நட்ட 75வது நாளிலிருந்து 120 நாட்கள் வரை அறுவடை கொடுத்துக் கொண்டிருக்கும். ஒரு ஏக்கரில் 65 கிலோ கொண்ட மூடை 135 கிடைக்கும்.
இயற்கை முறை சாகுபடியில் ஏக்கருக்கு ஆகும் செலவு ரூ.22,000 ஆகும். காய்கள் விற்பனையில் ரூ.68,000 கிடைக்கும். 
இயற்கை விவசாயம் இளமையை அதிகரிக்கின்றது: மகசூல் கொடுக்கும் நாட்களை அதிகரிக்கின்றது. செடிகள் அதிகம் காய்க்கும். காய்ப்பு சிறிது குறையும்பொழுது செடிகளை மீண்டும் கொத்திவிட்டு, நன்கு மக்கிய தொழு உரம் இட்டு பயிருக்கு இயற்கை முறை உரம் இட்டு பாசனம் செய்தால் செடிகள் வீரியம் கொண்டு காய்க்கும்

திசுவளர்ப்பு வாழை மையத்தின் சாதனை படைத்த பெண்மணி



கோவை மாவட்டம், வடவள்ளியில் வசித்துவரும் பூங்கொடி கடந்த 8 வருடங்களுக்கு முன்னால் தனியார் திசு வளர்ப்பு மையத்தில் ரூ.1500/- சம்பளத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இன்று தொழில் நுட்பக் கழக உதவியுடன் ரூ.8,00,000 வரை ஆண்டு வருமானம் ஈட்டி சுமார் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார். 
திசுவளர்ப்பு வாழை பயிரிடுவதால் ஏற்படும் நன்மைகள்
* தரமான நோயில்லா கன்றுகள் தரப்படுகின்றன.
* ஒரே சீரான அறுவடை.
* அதிக விளைச்சல். 
* வருடம் முழுவதும் கன்றுகள் கிடைக்கும்.
விவசாயிகள் திசு வளர்ப்பு வாழைக்கன்றுகளை வருடம் முழுவதும் பயிர் செய்யலாம்.
ரொபஸ்டா, கிராண்ட் 9, செவ்வாழை, குள்ள வாழை, நேந்திரன், வில்லியம்ஸ் ஆகிய முக்கிய ரகங்கள் திசுவளர்ப்பு முறையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
மேற்கூறிய இடைவெளியில் 1 அடி, 1 அடி அளவுள்ள குழிகள் எடுத்து குழியை சம அளவில் நன்கு மக்கிய தொழு உரமும் குழியின் மேல் மண்ணும் இத்துடன் 500 கிராம் ஜிப்சம், 45 கிராம் பியூரடான், 3ஜி கலந்த கலவையைவிட்டு நிரப்பி நீர் பாய்ச்சவும். திசுவளர்ப்பு வாழைக்கன்றுகளின் பாலிதீன் பையை முழுவதுமாக நீக்கி குழியின் நடுப்பகுதியின் பையிலிருந்து மண்ணுடன் தரைமட்டத்திற்கு நடவு செய்து உடன் நீர் பாய்ச்சவும் நல்லது.
உரங்களும் உரமிடுதலும்: நட்ட 45வது நாளில் நன்கு மக்கிய தொழு உரம் 5 கிலோ ஒரு மரத்திற்கு என்ற வகையில் இடவேண்டும். மண் பரிசோதனை செய்து நிலத்தின் தன்மைக்கேற்ப சிபாரிசுப்படி உரமிடுவது நல்ல பலனை அளிக்கும். திசு வாழைக்கன்றுகளை மாலை நேரங்களில் ஈர மண்ணில் நடுவது நல்லது. எமிசான் 1 கிராம், 1 லிட்டர் தண்ணீரில் (அ) பகலால் 1 கிராம் 1 லிட்டர் தண்ணீரில் (அ) பிளீசிங் பவுடர் 10 கிராம், 1 லிட்டர் நட்ட ஒரு வாரத்திற்குள் வேர்கள் நன்கு நனையுமாறு ஊற்றவும். இதையே நட்ட 3 மற்றும் 5ம் மாதங்களிலும் பின்பற்றவும்.
3வது மாதத்திலிருந்து தாய் மரத்திற்கு காயம் ஏற்படாதவண்ணம் மாதாமாதம் பக்கக் கன்றுகளை நீக்கிவரவும். காய்ந்த இலைகள், சருகுகளை அவ்வப்போது அகற்றி அப்புறப்படுத்தவும். தேவைக்கேற்ப மூங்கில், சவுக்குக் கம்புகளைக் கொண்டு மரத்திற்கு முட்டுக்கொடுக்கவும். 3வது, 4வது மற்றும் 7வது மாதங்களில் மண் அணைக்கவும். களைக்கட்டுப்பாடு அவசியம்.

பார்த்தீனியம் நச்சுக்களை மேலாண்மை





பார்த்தீனியம் விதைகள் முளைக்கும் முன்னும் முளைத்த செடிகள் பூ பூத்து விதை உண்டாவதற்கு முன்னும் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இதனால் விதைகள் முற்றி மேற்கொண்டு இச்செடி பரவுவது தடுக்கப்படுகிறது. பார்த்தீனியம் விதைகள் முளைக்கும் முன் கட்டுப்படுத்தும் முறை பார்த்தீனியம் நச்சுக்களை விதைகள் முளைப்பதை தடுக்க மழை காலத்தில் மண்ணில் போதுமான ஈரம் இருக்கும்பொழுது அட்ராடாப் களைக்கொல்லியை எக்டருக்கு 2.5 கிலோ என்ற அளவில் சுமார் 625 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பானால் நிலத்தின் மேல் சீராக தெளிக்க வேண்டும்.

பார்த்தீனியம் செடிகள் பூக்கும் முன் கட்டுப்படுத்தும் முறை

செடிகளை அகற்றி எரித்தல்: பூப்பதற்கு முன் கையுறை அணிந்து அல்லது ஏதாவது கருவியை உபயோகித்து செடிகளை வேருடன் அகற்றி எரிப்பதனால் விதை உண்டாகி பரவுவது தடுக்கப்படுகிறது.

களைக்கொல்லி உபயோகம்: ஒரு லிட்டர் நீரில் 200 கிராம் சமையல் உப்பு (20 சதம்) மற்றும் 2 மில்லி டீபால் அல்லது சோப்பு திரவம் கலந்து நல்ல வெயில் நேரத்தில் செடிகள் முழுவதும் நனையும்படி கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். 
* ஒரு லிட்டர் நீருக்கு 2,4-டி (பெர்னாக்சோன்) 10 கிராம் அல்லது கிளைபோசேட் (ரவுண்டப்) 15 மில்லியுடன் அம்மோனியம் சல்பேட் 20 கிராம் + சோப்பு திரவம் 2 மி.லி. அல்லது மெட்ரிபுசின் (சென்கார்) 4 கிராம் ஆகிய களைக்கொல்லிகளில் ஏதாவது ஒன்றை கலந்து, வளர்ந்த பார்த்தீனியம் செடிகள் முழுவதும் நனையும்படி கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

உயிரியல் முறை கட்டுப்பாடு

* தரிசு நிலங்களில் அடர் ஆவாரை மற்றும் துத்தி வகைச் செடிகளை போட்டு, செடிகளாக வளரச் செய்து பார்த்தீனியத்தின் வளர்ச்சியைக் குறைக்கலாம். * மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளரும் தாவர இனங்களை வளர ஊக்குவிக்கலாம்.
* பார்த்தீனியம் செடியை தின்று அழிக்கக்கூடிய சைக்கோகிராமா பைக்கலரேட்டா என்ற மெக்சிகன் வண்டுகளை பரவச் செய்தும் பார்த்தீனியத்தை கட்டுப்படுத்தலாம்.

பார்த்தீனியம் செடிகள் பூத்தபின் கட்டுப்படுத்தும் முறை

* செடிகள் பூத்த பின்னும் மேற்கூறிய களைக் கொல்லிகளைத் தெளிக்கலாம். ஆனால் செடிகள் முழுவதும் அழியாது. 
* இச்சூழ்நிலையில் பூத்த செடிகளை கையுறை அணிந்து அல்லது கருவிகள் மூலம் விதைகள் காற்றில் பரவும் முன் அகற்றி எரித்தல் வேண்டும்.

பார்த்தீனியத்தை உரமாக்குதல்:

பார்த்தீனியச் செடிகளை களைக்கொல்லி கொண்டு அழிக்காத தருணத்தில் அவற்றை வேருடன் அகற்றி நன்கு நறுக்கி, குழியில் போட்டு மக்கவைத்து உரமாக பயன்படுத்தலாம்.

பொன்னாய் நெல் குவிக்க பொடிநெல் சாகுபடி




மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் எடீடி 36, எடீடி 45, எஸ்டி16 (பெருவெட்டு ரக நெல்), வெள்ளைப் பொன்னி மற்றும் ஜே-13 நெல் ரகங்களைத் தேர்ந்தெடுத்து திருந்திய நெல் சாகுபடி முறைகளை கடைபிடித்து சாகுபடி செய்யலாம். இதில் விவசாயிகள் நல்ல அனுபவமும், திறமையும் பெற்றுள்ளனர். இந்த முயற்சியில் ஏக்கர் சாகுபடி செலவு ரூ.11,000 - 12,000 வரை ஆகும். ஏக்கர் மகசூல் 32 மூடை வரை கிட்டும். ஒரு மூடை விலை ரூ.650 வரை கிடைக்கும். ஏக்கரில் மொத்த வரவு ரூ.20,800 கிடைக்கும். செலவு ரூ.11,000 போக லாபம் ரூ.9,800லிருந்து ரூ.10,000 வரை கிடைக்கும். விவசாயிகள் பாடுபட்டு உழைத்து பலன் அடைய வேண்டும்.
தற்போது ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட விவசாயிகள் முதல் போக நெல் சாகுபடியை செய்ய ஆர்வமாக உள்ளனர். இம்மாவட்டங்களில் விவசாயிகள் நம்பிக்கையுடன் பொடியில் நேரிடை விதைப்பு செய்ய தங்களை தயார் செய்துகொண்டு இருக்கின்றனர். இங்கு மண்ணின் தன்மை மணல் சார்ந்த இளக்கமானதாக இருக்கும். விவசாயிகள் டிராக்டர் மற்றும் டில்லர் கருவி கொண்டு நிலத்தை உழுது புழுதியாக்கி விடுகின்றனர். புழுதியை அப்படியே காயவைத்துள்ளனர். இது சமயம் அடிக்கும் வெயிலானது மூன்று பங்கு புழுதியை ஒரு பங்காக சுண்டவிடுகின்றது. இதனால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மண் நல்ல வளத்தைப் பெற்று விடுகின்றது. இந்நிலை வந்தவுடன் விவசாயிகள் மக்கிய இயற்கை உரத்தோடு பத்து பொட்டலங்கள் நுண்ணுயிர் உரத்தை கலந்து நிலத்திற்கு இடலாம். உடனே மழை வரும். மழை ஈரத்தில் ஊறப்போடாத நெல் விதைகளை நேரிடை விதைப்பு செய்து விதை சீராக முளைக்க நிலத்தின் மேல் பரம்படிக்க வேண்டும். நிச்சயமாக இந்த சீசனில் விவசாயிகளை மகிழ்விக்க மழை பெய்யும். விதை விதைத்த 15-ம் நாள் மேலுரமாக 25 கிலோ டிஏபி, 15 கிலோ யூரியா (இம்முறை சாகுபடியில் பலமுறை நிலம் உழப்படுவதால் களைத் தொந்தரவு அதிகம் இருக்காது) இடவேண்டும். விதை விதைத்த 20-ம் நாள் ஒரு கைக்களை லேசாக எடுக்கவும். களையெடுத்தபின் மழை வரும். மழை நன்கு பெய்த சமயம் இரண்டாவது மேலுரமாக யூரியா 10 கிலோ, பொட்டாஷ் 10 கிலோ இடலாம். புழுதிக்கால் சாகுபடியில் ஒரு சிறிய பிரச்னை உண்டு. அதாவது பயிரை லேசாக பூஞ்சாள நோய் தாக்கும். குறிப்பாக பயிரினை குலைநோய் தாக்கும் வாய்ப்பு உண்டு. உடனே விவசாய இலாகா அதிகாரிகளது ஒத்துழைப்போடு நோயினை கட்டுப்படுத்த வேண்டும். பயிர் செழிப்பாக வளர்ந்து பூக்கள் பிடிக்கும். பயிர் பூத்து 25 முதல் 30 நாட்களில் அறுவடை கட்டம் தோன்றும். அப்போது கதிரின் அடிபாகத்திலுள்ள 4, 5 மணிகள் முற்றிய நிலைக்கு வரும். இக்கட்டத்தில் நெல் அறுவடை செய்து சுமைகளை களத்து மேட்டிற்கு கொண்டு போகும்போது ஒரு மணி நெல் கூட கீழே கொட்டாது. இதனால் அதிக விளைச்சல் கிடைக்கும். இம்முறை சாகுபடிக்கு செலவு ரூ.8,000 - 9,000 வரை ஆகும். இம்முறை சாகுபடியில் விவசாயிகள் சாகுபடிக்கு குச்சி நெல், மட்டை ரக நெல், பெருவெட்டு ரக நெல் இவைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சாகுபடியில் ஏக்கரில் 25 மூடை மகசூல் கிடைக்கும். இம்முறை சாகுபடியில் விவசாயிகள் சுலபமாக ஏக்கரில் ரூ.8,000 வரை லாபம் எடுக்க முடியும். துணிவே துணை என்ற நம்பிக்கையோடு விவசாயிகள் சாகுபடி செய்தால் நல்ல பலன் காண முடியும்.

தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்



தென்னையின் மகசூல் குறைவிற்கு சத்துப்பற்றாக்குறை, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் முக்கிய பங்கு வகிக்கின்றன. தென்னையை காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு, கருந்தலைப்புழு மற்றும் ஈரியோபைட் சிலந்திகள் தாக்கி மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்
* காண்டாமிருக வண்டின் தாக்குதல் இருந்தால் நன்றாக வளர்ந்த ஓலைகள், முக்கோண வடிவில் விசிறி போன்றும் ("வி' வடிவில்) நடுக்குருத்து ஒன்றாக சேர்ந்தும், நடுக்குருத்தின் அடியில் சக்கை ஒட்டிக்கொண்டும் இருக்கும்.
* அடிமரத்தில் பழுப்பு நிறத்தில் சாறு வடிதல், உள்இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல் மற்றும் நுனிப்பகுதியில் உள்ள நடுக்குருத்து மெதுவாக வாட ஆரம்பித்தல் போன்றவை சிவப்பு கூன்வண்டின் தாக்குதலாகும்.
* இலைகள் பச்சையமின்றி நெருப்பில் கருகியது போன்றும், தாக்கப்பட்ட இலைகளின் அடியில் கழிவுகள் இருப்பதும் கருந்தலைப் புழுக்களின் அறிகுறிகள்.
* தேங்காய் நெற்று சொரசொரப்பாக இருப்பது ஈரியோபைட் சிலந்தியின் தாக்குதலாகும்.

ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாட்டுமுறைகள்
* ஒரு மரத்திற்கு யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ், 3.5 கிலோ என்ற அளவில் வருடத்திற்கு ஒருமுறை உரமிட வேண்டும்.
* 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.
* நுண்ணூட்ட உரமான போராக்சை 50 கிராம் என்ற அளவில் ஒரு மரத்திற்கு இடவேண்டும்.
* மடிந்த மரங்களைத் தோப்புகளிலிருந்து அகற்றி எரித்துவிட வேண்டும். ஏனெனில் அவைகள் வண்டின் இனப்பெருக்கத்திற்கு உகந்த இடமாகிவிடுகிறது.
* தொழு உரத்தை குழிகளிலிருந்து எடுக்கும்பொழுது அவற்றில் இருக்கும் புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களைச் சேகரித்து அழித்துவிட வேண்டும்.
* பச்சை மஸ்கார்டைன் பூஞ்சாணத்தை (மெட்டாரைசியம் அனிசோபிலியே) எருக்குழிகளில் கலந்துவிட வேண்டும்.
* விளக்குப் பொறியை முதல் கோடைமழை சமயங்களில் மற்றும் பருவமழைக் காலங்களிலும் அமைத்துக் கவர்ந்து அழிக்கலாம்.
* ஒரு கிலோ ஆமணக்குப் புண்ணாக்கினை 5 லிட்டர் தண்ணீரில் மண் பானைகளில் ஊறவைத்து தோப்புகளில் ஆங்காங்கே வைத்து காண்டாமிருக வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
* கரும்புச் சர்க்கரைப்பாகு 2.5 கிலோ (அ) கள் 2.5 லிட்டருடன் அசிடிக் அமிலம் 5 மில்லி, 5 கிராம் ஈஸ்ட் மாத்திரையை இவற்றுடன் நீளவாக்கில் சிறு துண்டுகளாக்கிய முப்பது தென்னை மட்டைகளை ஊறவைத்து தோப்புகளில் ஆங்காங்கே வைத்து கூன் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
* ரைனோலூர், பெரோலூர் இனக்கவர்ச்சிப் பொறிகளை இரண்டு எக்டருக்கு ஒன்று வீதம் வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கவும்.
* பச்சை தென்னை மட்டைகளை நீளவாக்கில் பிளந்து கள்ளில் நன்கு தேய்த்து தோப்புகளில் ஆங்காங்கே வைப்பதன் மூலம் வளர்ந்த வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
* மரத்தில் சேதம் ஏற்படாமல் முடிந்தவரை பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சேதம் ஏற்பட்டால் சிமெண்ட் கொண்டு அவற்றை அடைத்து வண்டுகள் முட்டையிடுவதை தவிர்க்கலாம்.
* பச்சை மட்டைகளை வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
* ஒவ்வொரு முறையும் தேங்காய் எடுக்கும் தருணத்தில் தென்னை மடல் பகுதிகளை நன்கு சோதிக்க வேண்டும். அரைமீட்டர் நீளமுள்ள குத்தூசி கொண்டு மடல்களுக்கும், குருத்துகளுக்கும் இடையே செருகி வண்டு இருப்பதை சோதித்து இருந்தால் குத்தி எடுத்துவிட வேண்டும்.
* தென்னங்கன்றுகளில் அடிப்பாகத்தில் பண்ணாடைகளின் உள்பகுதியில் மூன்றரை கிராம் எடையுள்ள மூன்று (நாப்தலின்) பாச்சை உருண்டைகளை (அ) அந்துப்பூச்சி உருண்டைகளை ஒரு கன்றுக்கு 3 என்ற அளவில் 45 நாட்களுக்கு ஒரு முறை வைத்து கன்றுகளை காண்டாமிருக வண்டின் தாக்குதலிலிருந்து தவிர்க்கலாம்.
* கருந்தலைப்புழு தாக்கப்பட்ட இலைகளை வெட்டி எரித்துவிட வேண்டும்.
* கோடைகாலத்தில் கருந்தலைப்புழுக்களின் தாக்குதல் அதிகமாக காணப்பட்டால் ஒரு எக்டருக்கு 300 பெத்திலிட் ஒட்டுண்ணி குளவி மற்றும் 4500 பிரோகனிட் குளவியை மரத்தில் விடவேண்டும்.
* வேப்பங்கொட்டைத் தூள் அல்லது வேம்பு பருப்புத்தூள் 150 கிராமுடன் இரண்டு மடங்கு மணலைக் கலந்து அல்லது போரேட் 10 சதம் குருணை மருந்து 5 கிராமை ஒரு சிறிய துளையிடப்பட்ட பாலிதீன் பையில் எடுத்துக்கொண்டு அதை குருத்து மற்றும் மடல் பகுதிகளில் உள்ளிருந்து மூன்றாவது மட்டைகளின் அடிப்பகுதியில் பண்ணாடைகளுக்கு இடையில் வைப்பதன் மூலம் காண்டாமிருக மற்றும் கூன் வண்டுகளால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கலாம்.
* வேர் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து செலுத்தி கூன்வண்டு மற்றும் கருந்தலைப்புழு தாக்குதலை குறைக்கலாம். புதிய வேரை தேர்ந்தெடுத்து சிறிய கத்தியால் சாய்வாக வெட்டி பூச்சிக்கொல்லி மருந்து கரைசலான மோனோகுரோட்டோபாஸ் 10 மில்லியுடன் 10 மில்லி தண்ணீரை ஒரு பாலிதீன் பையில் இட்டு வேரை கரைசலின் உள்ளே விட்டு பாலிதீன் பையை நூல் கொண்டு கட்டவேண்டும். 24 மணி நேரத்திற்கு பிறகு கரைசல் உறிஞ்சப் பட்டிருக்கிறதா என்று பார்க்கவேண்டும். அப்படி இல்லையென்றால் வேறு ஒரு வேர்ப்பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும். மருந்து செலுத்தியதிலிருந்து 45 நாட்கள் கழித்துதான் இளநீர் மற்றும் காய்களை பறிக்க வேண்டும்.
* வேர்மூலம் அசாடிராக்டின் 1 சதம் என்ற வேம்பு பூச்சிக்கொல்லியை 10 மி.லி. அளவில் 0 மி.லி. தண்ணீருடன் கலந்து செலுத்தி ஈரியோபைட் சிலந்தி தாக்குதலை குறைக்கலாம்.

முழு நீள காராமணி சாகுபடி

காராமணியை குளிர்காலம் மற்றும் கடும் மழை பெய்யும் காலம் இவைகளைத் தவிர்த்து இதர மாதங்களில் சாகுபடி செய்யலாம். காராமணி ஆடி-ஆவணிப் பட்டத்தில் மானாவாரி நிலங்களை மழையை நம்பி சாகுபடி செய்யப்படுகின்றது.
காராமணியை காய்கறியாக பயன்படுத்தவே சாகுபடி செய்யப்படுகிறது. சிறிய அளவில் சாகுபடி செய்ய குச்சி நட்டு அதன்மேல் படர விடலாம். பொதுவாக தரையில் வளரும்படியே இதனை சாகுபடி செய்யப்படுகிறது. காய்கறி வகை காராமணியில் சாகுபடிக்கு ஏற்ற இரண்டு ரகங்கள் உள்ளன. என்.எஸ்.634 என்ற ரகம் நல்ல பசுமை நிறத்துடன் காணப்படும். இதன் காய்கள் ஒன்றரை அடி நீளம் கொண்டதாக இருப்பதோடு பார்ப்பதற்கு உருண்டு காணப்படும். இதில் சதைப்பற்று குறைவாக இருப்பினும் நாரே கிடையாது.
காய்கள் சுவையாக இருக்கும். அடுத்து என்.எஸ்.620 ரகம் பார்ப்பதற்கு வெளிர்பச்சை நிறத்தில் இருக்கும். காய்கள் கயிறு போல் நீளமாக இருக்கும். காய்கறி வகை காராமணி ரகங்கள் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. நுகர்வோர்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். தேவையான அளவு புரதச்சத்து உள்ளது. காய்கறி வகை காராமணி சாகுபடியானது மிகவும் சுலபமாக உள்ளது. காற்றிலுள்ள தழைச்சத்தினை தனது வேர் முடிச்சுகளில் சேகரித்து வைத்துக்கொள்ளும் திறன் பெற்ற இந்த பயிர் அதிக அளவு ரசாயன உரங்களும், இயற்கை உரங்களும் இல்லாமலே நல்ல வளமான மண்ணில் சாகுபடி செய்யப்படுகின்றது.
சாகுபடி முறை: சாகுபடிக்கு தேர்ந்தெடுத்த மண் நல்ல வடிகால் வசதியைக் கொண்டிருக்க வேண்டும். நிலத்தை கட்டிகள் இல்லாமல் உழுது இயற்கை உரங்களை இடலாம். இயற்கை உரங்களை இடுவதற்கு முன் அவைகளில் உள்ள கண்ணாடிகள், கற்கள் மற்றும் இதர கலப்படங்களை அகற்றிவிட்டு உரத்தினை நன்கு பொடிசெய்துவிட்டு சாகுபடி நிலத்தின்மீது சீராகத் தூவவேண்டும். உடனே எருக்கள் நிலத்தில் மண்ணோடு நன்கு கலக்க உழவேண்டும். உழுவது மிக ஆழமாக இல்லாமல் எருவினை மண்ணோடு நன்கு கலக்கும்படி செய்யப்பட்டிருக்க வேண்டும். விவசாயிகள் சொந்தமாக தயாரித்த உரங்களை ஏக்கருக்கு 5 டன் வரை இடலாம். சாகுபடி நிலத்தில் போதிய வளம் இல்லாத சூழ்நிலையில் உழவு செய்யப்பட்ட பின், விதைப்பதற்கு முன் அடி உரமாக யூரியா 25 கிலோ, சூப்பர் 125 கிலோ மற்றும் பொட்டாஷ் 35 கிலோ இவைகளை ஒன்றாக கலந்து ஒரு ஏக்கர் நிலத்திற்கு இடவேண்டும். மறுபடியும் உழவு செய்துவிட்டு இரண்டு அடி இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். 
இவ்வாறு தயார்செய்த பாரில் அரை அடி இடைவெளியில், விதையினை வரிசையில் ஊன்ற வேண்டும். விதை சீராக முளைப்பதற்கு பாசனம் கொடுப்பதோடு, அடுத்துவரும் பாசனங்களை கவனமாக கொடுக்க வேண்டும். பாசனம் சமயம் நீர் தேங்குமளவிற்கு செய்யக்கூடாது. பயிர் சீராக வளர்ச்சிபெற வாரத்திற்கு இரு முறை பாசனம் தரவேண்டும். பயிரில் களை எடுப்பதற்கு நல்ல கவனம் கொடுக்க வேண்டும். நிலத்தை கொத்திவிடும்போது மேலாக செதுக்க வேண்டும். அதிக ஆழமாக செய்யக்கூடாது. செடிகள் வளரும்போது குச்சி நட்டு அதன் மேல் படர விடலாம். இதனால் காய்களை சுலபமாக அறுவடை செய்யலாம். அதிக செலவு ஏற்படுவதால் நடைமுறையில் இது சாத்தியப்படுவதில்லை. செடிகளை பாத்தியில் அப்படியே வளர விடப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை. விதை நட்ட 60 நாட்களுக்கு பிறகு அறுவடை வரும். காய்கள் பராமரிப்பு பணியைப் பொறுத்து ஒன்றரை முதல் இரண்டு அடி நீளத்தை காய்கள் அடையும்.
பொருளாதாரம்: இந்தப்பயிரை அரை ஏக்கரில் (50 சென்ட்) சாகுபடி செய்ய ரூ.6,650 செலவாகும். அரை ஏக்கர் மகசூலின் மதிப்பு ரூ.12,000 (ரூ.1,500 x 8), அரை ஏக்கரில் லாபம் ரூ.5,350.

கோகம் பயிர்

கோகம் என்பது ஒரு தோட்டப்பயிராகும். கேரளத்தில் காசர்கோடு, வயநாடு ஆகிய பகுதிகளில் இது பயிராகின்றது. தமிழகத்தில் மலைப்பாங்கான பிரதேசங்களில் இதனைப் பயிரிட்டுப் பயன்பெறலாம். இதன் தாவரவியல் பெயர் கார்சினியா இண்டிகா என்பதாகும். இது குளூசியேசியா குடும்பத்தைச் சேர்ந்தது. விதைகளால் இது பெருக்கம் அடைகிறது. நட்ட விதை 22 நாட்களில் முளைவிடும். சுமார் மூன்று அல்லது நான்கு மாத நாற்றுகளைத் தோட்டங்களில் நடலாம்.
தரை மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்திற்கு குறையாத இடங்களில் இது நன்கு வளரக்கூடியதாகும். இந்தப் பயிருக்கு அதிகமான தண்ணீர் தேவை இல்லை. அவ்வப்போது நீர்ப்பாசனம் செய்யலாம். வயதான மரங்கள் அதிகமான பலன்களைத் தருகின்றன. தென்னையுடன் இதனை ஊடுபயிராக பயிரிடலாம். காபித் தோட்டங்களில் இதன் "டிர்கா' ரகம் நல்ல நிழல் தருகின்ற ஊடுபயிராக அமையும். மேலும் பாக்குத் தோட்டங்களிலும் தடைப்பயிராக இதனைப் பயிரிடலாம்.
இந்த மரத்தின் கிளைகளை அவ்வப்போது சீராக்க வேண்டும். ஒரு மரத்திற்கு ஓர் ஆண்டிற்கு பத்து கிலோ இயற்கை உரம் அல்லது மாட்டுச்சாணம் போதுமானதாகும். ஐந்து ஆண்டுகளில் சுமார் மூன்று மீட்டர் வரை இந்த மரம் வளரும். இத்தகைய பருவத்தில் நுனியை வெட்டிவிடுவது அவசியம். இந்த மரத்தை ஐந்து மீட்டருக்கும் மேல் வளரவிட்டால் அறுவடை செய்து சிரமமாகும்.
பொதுவாக, கோகம் ஜனவரியில் பூத்து மே மாதத்தில் கனியாகிறது. பச்சை நிறக்காய்கள் அடர்ந்த ரத்தச் சிவப்புக் கனிகளாக மாறுகின்றன. ஒரு பழம் 35 கிராம் முதல் 80 கிராம் வரை எடை உள்ளதாக இருக்கும். இந்தப் பழத்தின் வெளித்தோல், உள்சதை மற்றும் விதை போன்றவை பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இது உணவாகவும், மருந்தாகவும் செயல்படுகிறது. சமையலில் புளி மற்றும் தக்காளிக்கு இணையாக இதனைப் பயன்படுத்தலாம்.
கோகம் தயாரிப்பான "பிருந்தா ஜுஸ்' என்ற பானம் ஒரு சுவையான மெது பானமாகும். இது எவ்வித ரசாயனக் கலப்பும் இல்லாத இயற்கையான பானமாகும். இதில் "சிட்ரஸ்' அடங்கியுள்ளதால் பித்தத்திற்கு மருந்தாகப் பயன்படுகிறது. கோகம் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் நெய் தோல் சரீரப் பாதுகாப்பிற்குச் சிறந்தது. ஒரு ஸ்பூன் அளவில் இதனை வெந்நீரில் கலந்து அருந்தினால் வயிற்றுவலி விரைவில் குணமாகும்.

நவீன தொழில்நுட்பம்

கலப்பின கிடேரிகள் வளர்க்க எளிய வழிமுறைகள்
கிடேரிக் கன்றுகளை தேர்வு செய்தல்: பொதுவாக ஜெர்சி கிடேரிகள் சிவப்பு அல்லது கருமை நிறத்தினை உடையது. உடல் முழுவதும் ஒரே நிறத்தினையே பெற்றிருக்கும். ஹால்ஸ்டியன் - பிரிசியன் இனம் வெள்ளை மற்றும் கருப்பு கலந்து காணப்படும். கிடேரிகளை 9-12 மாத வயதில் வளர்ப்பிற்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வயதில் கிடேரிகள் தற்காலிகப் பற்களையே பெற்றிருக்கும். மேலும் கிடேரிகளை தேர்ந்தெடுக்கும்போது கீழ்க்கண்ட அம்சங்களை கவனித்து வாங்க வேண்டும்.
* தேர்ந்தெடுக்கப்படும் கிடேரிகள் சுறுசுறுப்பாகவும் சாந்தமான மனநிலை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
* பக்கங்களில் இருந்து பார்க்கும்பொது உடல் நீள, முக்கோண வடிவாகக் காணப்பட வேண்டும்.
* முதுகு தொங்கிக்கொண்டு இல்லாமல் நேர்கோடாகவும், திமில் இல்லாமலும் மென்மை கலந்த தோற்றத்துடனும் இருக்க வேண்டும்.
* கண்கள் பளிச்சென்றும் வலுவான கால்களுடனும் தோற்றமளிக்க வேண்டும்.
* தோல் நல்ல மினுமினுப்பாகவும், மிருதுவாகவும் இழுத்தால் எளிதாக இழுபடும் விதமாகவும் இருத்தல் வேண்டும்.
* மூக்கு பெரியதாகவும், உடல் விரிந்தும் காணப்பட வேண்டும்.
* பால் மடியில் நான்கு காம்புகள் இருக்க வேண்டும். கிளை காம்புகள் இருப்பின், அதை சிறு அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிட வேண்டும். இதனால் மடி சீராக வளரும்.
* கால் குளம்புகள் கருப்பாகவும், ஈரத்தன்மையுடனும் இருக்க வேண்டும். குளம்புகளின் நடுவில் பிளவு அதிகமாக இல்லாமல் ஒட்டி இருக்க வேண்டும்.
பண்ணை வீடு அமைத்தல்: ஒரு கிடேரிக் கன்றுக்கு 15-20 ச.அடி இடம் தேவை. பொதுவாக கிடேரிக் கன்றுகளை மிதத்தீவிர முறையில் வளர்க்கலாம். இம்முறையில் இரவு மற்றும் சாதகமற்ற தட்பவெப்ப நிலைகளில் கால்நடைகளை கொட்டிலிலும் மற்ற தருணங்களில் திறந்தவெளி மேய்ச்சல் அல்லது தற்காலிக பாதுகாப்பு வேலிகளை அமைத்து வளர்க்கலாம். கொட்டகையின் உயரம் 10 முதல் 12 அடி உயரத்திற்கு குறையாமலும் நல்ல காற்றோட்ட வசதியுடனும் இருக்க வேண்டும். பண்ணை கிழக்கு மேற்காக அமைய வேண்டும். கொட்டகையின் தரை உறுதியாகவும் வெயில் காலங்களில் குளிர்ச்சியாகவும் மற்றும் எளிதில் உலரக் கூடியதாகவும் இருக்க வேண்டும். தரையை வடிகால் நோக்கி 60 அடிக்கு ஒரு அடி என்ற அளவில் சரிவுடன் கான்கிரீட்டால் அமைக்க வேண்டும். கொட்டகையின் கூரையை தென்னங்கீற்று, பனை ஓலை, கல்நார்ப்பலகை, நாட்டு ஓடு மற்றும் மங்களூர் ஓடு ஆகியவைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி அமைக்கலாம். 10 கிடேரிக் கன்றுகள் வளர்க்க 200 ச.அடியில் கொட்டகை அமைக்க வேண்டும்.
தீவனமளித்தல்: பொதுவாக கிடேரிகளுக்கு அடர்தீவனம், பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். ஆனால் கிடேரிகளை மிதத்தீவிர முறையில் மேய்ச்சல் மூலம் வளர்க்கும்பொழுது அதன் உடலுக்குத் தேவையான எரிசக்தி மற்றும் புரதச்சத்து போதுமான அளவு கிடைப்பதில்லை.
எரிசக்தி பற்றாக்குறையினைப் போக்க போதுமான அளவு பசுந்தீவனம் அளிக்க வேண்டும். குறிப்பாக தீவனச்சோளம், மக்காச்சோளம் மற்றும் வீரிய புல் வகைகளான கோ1, கோ2 மற்றும் கோ3 போன்ற தீவனப்பயிர்களை தினசரி 5 கிலோ அளிக்கலாம். புரதச்சத்து தேவையினைப் பூர்த்தி செய்ய மரஇலைத் தீவனத்தை 5-6 கிலோ வரை அளிக்கலாம். அகத்தி, சவுண்டால் மற்றும் கிளைரிசிடியா போன்ற மர இலைகளை நல்ல பசுந்தீவனமாகப் பயன்படுத்தலாம். மேலும் வைக்கோல் போன்ற உலர்தீவனத்தை 1.5-2 கிலோ வரை அளிக்கலாம்.

வான்கோழி வளர்ப்பு

வான்கோழிகள் வளர்த்திட கீழ்க்கண்ட வளர்ப்புமுறைகளை கடைபிடிக்கலாம்.
1. புறக்கடை வளர்ப்பு, 2. மிதத்தீவிர முறை அல்லது மேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்ப்பு, 3. ஆழ்கூள முறையில் கொட்டகையில் வளர்ப்பு, 4. கம்பிவலை மேல் வான்கோழிகள் வளர்த்தல்.
இனங்கள்: அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ்: இவ்வகை வான்கோழிகள் இங்கிலாந்து நாட்டில் தோன்றியவை. இவ்வினங்களில் ஆண்கோழிகள் 15 முதல் 18 கிலோ எடை வரையிலும், பெட்டைக் கோழிகள் 12லிருந்து 16 கிலோ எடை வரையிலும் வளரக்கூடிய தன்மையுடையன. இவற்றின் நிறம் பொதுவாகக் கருப்பாக இருக்கும். ஆனால் பெட்டை வான்கோழிகளின் மார்புப் பகுதியில் உள்ள சிறகுகளின் நுனிப்பகுதி மட்டும் வெள்ளை நிறமாக இருக்கும். இந்த நிறவேற்றுமை, பெட்டைக் கோழிகளை ஆண்கோழிகளிடம்இருந்து பிரித்து வளர்க்கப் பயன்படுகிறது. இவ்வகை வான்கோழிகளை இறைச்சிக்காக வளர்க்கலாம்.
அகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை வான்கோழி: இந்த ரக வான்கோழிகள், அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ் மற்றும் வெள்ளை ஆலந்து ஆகியவற்றின் கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாக்கப்பட்டவை ஆகும். இவ்வகை வான்கோழிகள் வெள்ளை நிறமாக இருக்கும். ஆண் கோழிகள் 12-18 கிலோ எடை வரையிலும், பெண் இனங்கள் 7 - 9 கிலோ எடை வரையிலும் இருக்கும். இவ்வகை வான்கோழிகளை இறைச்சிக்காக வளர்க்கலாம். 12 வார வயதில் சுமார் 8 - 10 கிலோ வரை வளரும் தன்மை கொண்டவை. மேலும் நிறம் வெள்ளையாக இருப்பதால் அதிக வெப்பத்தைத் தாங்கி எந்தச் சூழ்நிலையிலும் நன்கு வளரும் திறன் கொண்டவை. நமது பகுதிகளுக்கு மிகவும் ஏற்ற வகையாகக் கருதப்படுகின்றன.
பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை: அமெரிக்க நாட்டின் பெல்ட்ஸ்வில்லி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் இவ்வகை வான்கோழிகள் உருவாக்கப் பட்டன. இவ்வகை வான் கோழிகள் பெரும்பாலும் அகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை வான்கோழிகளை போலவே இருக்கும். ஆனால் உடல் எடையில் சிறியதாக இருக்கும். எனவே இந்த வகை வான்கோழிகளை முட்டை மற்றும் வான்கோழிக் குஞ்சு உற்பத்திக்கு வெகுவாகப் பயன்படுத்தலாம். மேலும் வளர்ச்சி குறைவாக இருப்பதால் நான்கு மாதம் வரை வளர்த்துப் பின் இறைச்சிக்காக விற்பனை செய்யலாம். அப்பொழுது அதன் எடை சுமார் 6 முதல் 8 கிலோ வரை இருக்கும்.
வான்கோழித் தீவனப் பராமரிப்பு: வான்கோழிகளுக்குச் சிறந்த கலப்புத் தீவனமளிப்பதன் மூலமே அதிகமான முட்டைகளும் இறைச்சியும் பெறமுடியும். வான்கோழிப் பண்ணையில் செலவிடப்படும் தொகையில் 70 சதவீதம் தீவனத்திற்காகவே செலவிடப்படுகின்றது. ஒரு பெட்டை வான்கோழியின் எடையோ சராசரியாக 3 கிலோகிராம் உள்ளது. வான்கோழி வருடத்திற்கு 70 கிராம் எடை கொண்ட 100 முட்டைகள் இடவேண்டும் என்றால் (அதாவது 7 கிலோ எடையுள்ள முட்டைகள்) நல்ல தரமான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த தீவனம் அளிக்கப்பட வேண்டும். அதேபோல் 45 கிராம் எடையுள்ள ஒரு நாள் வயதுள்ள குஞ்சு 84 நாட்களுக்குள் (12 வார வயதிற்குள்) 2.5 - 3.0 கிலோ எடை பெற வேண்டுமெனில் நல்ல தரமான சத்துள்ள தீவனம் அளிக்கப்பட வேண்டும். வான்கோழிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கீழ் வருமாறு: தண்ணீர், மாவுப்பொருள், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், தாது உப்புக்கள், உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின்கள்).
ஆண், பெட்டை வான்கோழிகளுக்கான சத்துக்கள் தேவை வேறுபடுவதால் இவைகளை குஞ்சு பொரித்தவுடன் தனித்தனியாகப் பிரித்து வளர்ப்பது நல்லது. வான் கோழிகளுக்குத் தீவனம் தயாரிக்க சாதாரணமாக மற்ற கோழிகளுக்குப் பயன்படுத்தப்படும் தீவன மூலப் பொருட்களையே பயன்படுத்தலாம்