Monday, November 14, 2011

பொன்னாய் நெல் குவிக்க பொடிநெல் சாகுபடி




மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் எடீடி 36, எடீடி 45, எஸ்டி16 (பெருவெட்டு ரக நெல்), வெள்ளைப் பொன்னி மற்றும் ஜே-13 நெல் ரகங்களைத் தேர்ந்தெடுத்து திருந்திய நெல் சாகுபடி முறைகளை கடைபிடித்து சாகுபடி செய்யலாம். இதில் விவசாயிகள் நல்ல அனுபவமும், திறமையும் பெற்றுள்ளனர். இந்த முயற்சியில் ஏக்கர் சாகுபடி செலவு ரூ.11,000 - 12,000 வரை ஆகும். ஏக்கர் மகசூல் 32 மூடை வரை கிட்டும். ஒரு மூடை விலை ரூ.650 வரை கிடைக்கும். ஏக்கரில் மொத்த வரவு ரூ.20,800 கிடைக்கும். செலவு ரூ.11,000 போக லாபம் ரூ.9,800லிருந்து ரூ.10,000 வரை கிடைக்கும். விவசாயிகள் பாடுபட்டு உழைத்து பலன் அடைய வேண்டும்.
தற்போது ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட விவசாயிகள் முதல் போக நெல் சாகுபடியை செய்ய ஆர்வமாக உள்ளனர். இம்மாவட்டங்களில் விவசாயிகள் நம்பிக்கையுடன் பொடியில் நேரிடை விதைப்பு செய்ய தங்களை தயார் செய்துகொண்டு இருக்கின்றனர். இங்கு மண்ணின் தன்மை மணல் சார்ந்த இளக்கமானதாக இருக்கும். விவசாயிகள் டிராக்டர் மற்றும் டில்லர் கருவி கொண்டு நிலத்தை உழுது புழுதியாக்கி விடுகின்றனர். புழுதியை அப்படியே காயவைத்துள்ளனர். இது சமயம் அடிக்கும் வெயிலானது மூன்று பங்கு புழுதியை ஒரு பங்காக சுண்டவிடுகின்றது. இதனால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மண் நல்ல வளத்தைப் பெற்று விடுகின்றது. இந்நிலை வந்தவுடன் விவசாயிகள் மக்கிய இயற்கை உரத்தோடு பத்து பொட்டலங்கள் நுண்ணுயிர் உரத்தை கலந்து நிலத்திற்கு இடலாம். உடனே மழை வரும். மழை ஈரத்தில் ஊறப்போடாத நெல் விதைகளை நேரிடை விதைப்பு செய்து விதை சீராக முளைக்க நிலத்தின் மேல் பரம்படிக்க வேண்டும். நிச்சயமாக இந்த சீசனில் விவசாயிகளை மகிழ்விக்க மழை பெய்யும். விதை விதைத்த 15-ம் நாள் மேலுரமாக 25 கிலோ டிஏபி, 15 கிலோ யூரியா (இம்முறை சாகுபடியில் பலமுறை நிலம் உழப்படுவதால் களைத் தொந்தரவு அதிகம் இருக்காது) இடவேண்டும். விதை விதைத்த 20-ம் நாள் ஒரு கைக்களை லேசாக எடுக்கவும். களையெடுத்தபின் மழை வரும். மழை நன்கு பெய்த சமயம் இரண்டாவது மேலுரமாக யூரியா 10 கிலோ, பொட்டாஷ் 10 கிலோ இடலாம். புழுதிக்கால் சாகுபடியில் ஒரு சிறிய பிரச்னை உண்டு. அதாவது பயிரை லேசாக பூஞ்சாள நோய் தாக்கும். குறிப்பாக பயிரினை குலைநோய் தாக்கும் வாய்ப்பு உண்டு. உடனே விவசாய இலாகா அதிகாரிகளது ஒத்துழைப்போடு நோயினை கட்டுப்படுத்த வேண்டும். பயிர் செழிப்பாக வளர்ந்து பூக்கள் பிடிக்கும். பயிர் பூத்து 25 முதல் 30 நாட்களில் அறுவடை கட்டம் தோன்றும். அப்போது கதிரின் அடிபாகத்திலுள்ள 4, 5 மணிகள் முற்றிய நிலைக்கு வரும். இக்கட்டத்தில் நெல் அறுவடை செய்து சுமைகளை களத்து மேட்டிற்கு கொண்டு போகும்போது ஒரு மணி நெல் கூட கீழே கொட்டாது. இதனால் அதிக விளைச்சல் கிடைக்கும். இம்முறை சாகுபடிக்கு செலவு ரூ.8,000 - 9,000 வரை ஆகும். இம்முறை சாகுபடியில் விவசாயிகள் சாகுபடிக்கு குச்சி நெல், மட்டை ரக நெல், பெருவெட்டு ரக நெல் இவைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சாகுபடியில் ஏக்கரில் 25 மூடை மகசூல் கிடைக்கும். இம்முறை சாகுபடியில் விவசாயிகள் சுலபமாக ஏக்கரில் ரூ.8,000 வரை லாபம் எடுக்க முடியும். துணிவே துணை என்ற நம்பிக்கையோடு விவசாயிகள் சாகுபடி செய்தால் நல்ல பலன் காண முடியும்.

No comments:

Post a Comment