Monday, November 14, 2011

கோகம் பயிர்

கோகம் என்பது ஒரு தோட்டப்பயிராகும். கேரளத்தில் காசர்கோடு, வயநாடு ஆகிய பகுதிகளில் இது பயிராகின்றது. தமிழகத்தில் மலைப்பாங்கான பிரதேசங்களில் இதனைப் பயிரிட்டுப் பயன்பெறலாம். இதன் தாவரவியல் பெயர் கார்சினியா இண்டிகா என்பதாகும். இது குளூசியேசியா குடும்பத்தைச் சேர்ந்தது. விதைகளால் இது பெருக்கம் அடைகிறது. நட்ட விதை 22 நாட்களில் முளைவிடும். சுமார் மூன்று அல்லது நான்கு மாத நாற்றுகளைத் தோட்டங்களில் நடலாம்.
தரை மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்திற்கு குறையாத இடங்களில் இது நன்கு வளரக்கூடியதாகும். இந்தப் பயிருக்கு அதிகமான தண்ணீர் தேவை இல்லை. அவ்வப்போது நீர்ப்பாசனம் செய்யலாம். வயதான மரங்கள் அதிகமான பலன்களைத் தருகின்றன. தென்னையுடன் இதனை ஊடுபயிராக பயிரிடலாம். காபித் தோட்டங்களில் இதன் "டிர்கா' ரகம் நல்ல நிழல் தருகின்ற ஊடுபயிராக அமையும். மேலும் பாக்குத் தோட்டங்களிலும் தடைப்பயிராக இதனைப் பயிரிடலாம்.
இந்த மரத்தின் கிளைகளை அவ்வப்போது சீராக்க வேண்டும். ஒரு மரத்திற்கு ஓர் ஆண்டிற்கு பத்து கிலோ இயற்கை உரம் அல்லது மாட்டுச்சாணம் போதுமானதாகும். ஐந்து ஆண்டுகளில் சுமார் மூன்று மீட்டர் வரை இந்த மரம் வளரும். இத்தகைய பருவத்தில் நுனியை வெட்டிவிடுவது அவசியம். இந்த மரத்தை ஐந்து மீட்டருக்கும் மேல் வளரவிட்டால் அறுவடை செய்து சிரமமாகும்.
பொதுவாக, கோகம் ஜனவரியில் பூத்து மே மாதத்தில் கனியாகிறது. பச்சை நிறக்காய்கள் அடர்ந்த ரத்தச் சிவப்புக் கனிகளாக மாறுகின்றன. ஒரு பழம் 35 கிராம் முதல் 80 கிராம் வரை எடை உள்ளதாக இருக்கும். இந்தப் பழத்தின் வெளித்தோல், உள்சதை மற்றும் விதை போன்றவை பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இது உணவாகவும், மருந்தாகவும் செயல்படுகிறது. சமையலில் புளி மற்றும் தக்காளிக்கு இணையாக இதனைப் பயன்படுத்தலாம்.
கோகம் தயாரிப்பான "பிருந்தா ஜுஸ்' என்ற பானம் ஒரு சுவையான மெது பானமாகும். இது எவ்வித ரசாயனக் கலப்பும் இல்லாத இயற்கையான பானமாகும். இதில் "சிட்ரஸ்' அடங்கியுள்ளதால் பித்தத்திற்கு மருந்தாகப் பயன்படுகிறது. கோகம் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் நெய் தோல் சரீரப் பாதுகாப்பிற்குச் சிறந்தது. ஒரு ஸ்பூன் அளவில் இதனை வெந்நீரில் கலந்து அருந்தினால் வயிற்றுவலி விரைவில் குணமாகும்.

No comments:

Post a Comment