Sunday, November 13, 2011

தமிழ்நாட்டின் அடுத்த பஞ்சம்? தடுக்க நீங்கள் தயாரா?இயக்கமாவோம் வாருங்கள்!


இந்தியாவில் 2002 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் கடுமையான வறட்சி! கடுமையான வறட்சி! கடந்த 120 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு வறட்சி தாக்கியது. இந்த  வறட்சியால் உணவு தானியம் உற்பத்தி 2 கோடியே 95 லட்சம் மெட்ரிக் டன் குறைந்து போனது. எண்ணெய் வித்துக்கள், கரும்பு, பருத்தி போன்ற விவசாய விளைபொருட்களின் அளவும், முந்தைய ஆண்டை விட மிகவும் குறைந்து போனது. கால்நடைகளும் வலுவிழந்து போயின. அந்த அளவு வறட்சி தாண்டவமாடியது.

பேரழிவு நிவாரண நிதி, தேசிய பேரழிவு அவசர காலநிதி ஆகியவற்றிலிருந்து சுமார் 4 ஆயிரம் கோடி வரை வறட்சி நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்டது. இது தவிர, 8300 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு தானியங்களும், வேலைக்கு உணவு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது. இதையெல்லாம் செய்தாலும் தமிழ்நாட்டில் மூலைமுடுக்கெல்லாம் குடிநீர் கிடைக்காமல் திண்டாடின. இந்த உலகத்தில் எதையும் உருவாக்கி விட முடியும். ஆனால் தண்ணீரை செயற்கையாக உருவாக்க முடியுமா?

கவனத்தில் கொள்ளுங்கள்
மேலே சொன்னது போன்ற வறட்சி மீண்டுமொரு முறை திரும்பி வந்தால் என்னவாகும்? பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் கொந்தளிக்கும் மக்கள் காணாமலே போய்க்கொண்டிருக்கும் தண்ணீரை பற்றி அவ்வளவாக கவலைப்பட்டதாக தெரியவில்லை. பெட்ரோல், டீசல் இல்லாவிட்டால் நடந்து போய் விடலாம். தண்ணீர் இல்லாவிட்டால் வாழ முடியுமா? நிச்சயமாக முடியாது. மின்சாரம் தட்டுப்பாடாகிக் கொண்டே வந்தது. எதிர்காலத்தில் மின்சாரத்தின் தேவை உயரும் என்பதை அரசுகள் கவனிக்க தவறியதால் தான் கடும் மின்சார தட்டுப்பாட்டில் சிக்க நேர்ந்தது. தொழில்கள் முடங்கின. பலர் வேலை இழந்தனர். ஏற்றுமதி பாதித்தது. இப்படி பல பிரச்சினைகள்.
இது போலவே நமது கவனத்திற்கு வராமல் தண்ணீரும் மறைந்து கொண்டே போகிறது. நாம் மற்ற எல்லாவற்றையும் விட தண்ணீரை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தண்ணீரை காப்பாற்றுவதால் நமது தாகத்தையும், வருங்கால சந்ததிகளுக்கான தாகத்தையும் தீர்க்க முடியும். விவசாயத்தை காப்பாற்றவும் முடியும். உணவுப்பஞ்சமோ, வறட்சியோ வராமல் தற்காத்துக் கொள்ளவும் முடியும்.

வறண்ட நதிகள்
மதுரையில் ஓடும் நதியான வைகையில் அக்கரைக்கும் இக்கரைக்கும் ஓடும் தண்ணீரை கடக்க முடியாமல் பாண்டியமன்னர்கள் விதவிதமான படகை உருவாக்கி வைத்திருந்தார்களாம். ஆனால் வைகை ஆறு இன்றைக்கு வறண்டு போய் அறுக்கப்பட்ட ஆடு, மாடு, பன்றி இறைச்சிகளை கொட்டும் குப்பை தொட்டியாய் மாறி இருக்கிறது. பெயரளவுக்கு கூட தண்ணீர் இல்லை. இது போல் நெல்லையில் ஓடிய தாமிரபரணி ஆறும் மணல்கொள்ளையர்களால் சூறையாடப்பட்டு மொட்டை மணல் பாலைவனமாக காட்சி தருகிறது.
ஈரோட்டின் நொய்யலாறு சாயக்கழிவுகளால் நிறமிழந்து விவசாயங்கள் பாழ்பட்டு விட்டன.

இந்த ஆறுகளில் எல்லாம் வறண்டு போக இரண்டே காரணங்கள் தான். முதலாவதாக மழை குறைந்து போனது, இரண்டாவது மணல் திருட்டு. இந்த இரண்டு காரணங்களும் சரிசெய்யப்பட்டால் தான் இனி ஆறுகளில் தண்ணீரை பார்க்க முடியும் என்ற நிலை இருக்கிறது. ஆறுகளில் வறண்டு விடும் போது நிலத்தடி நீரும் வற்றி போகிறது. முன்பு 50 அடி ஆழத்தில் நிலத்தடி நீர் கிடைத்த இடங்களில் எல்லாம், தற்போது 300 அடி ஆழம் தோண்டினால் கூட தண்ணீர் கிடைப்பதில்லை என்பது தான் நிலைமை.

இப்படி தண்ணீர் பூமியில் இருந்து அடி ஆழத்தில் மறைந்து கொண்டே போய்க் கொண்டிருக்கிறதே என்று அவ்வளவாக நாம் கவலைப்படாமலே இருந்தால், ஒரு கட்டத்தில் பூமியில் ஆயிரம் அடி ஆழத்திற்கு தோண்டினாலும் தண்ணீர் கிடைக்க போவது இல்லை. மிகவும் துன்பத்திற்குள்ளாக போவது நமது வருங்கால சந்ததிகள் தான். அவர்கள் குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கு தண்ணீர் இருக்குமா என்று கூட சந்தேகம் எழுகிறது. அந்த அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ஆழ்துளை போர்வெல் பம்புகள் அன்றாடம் காலையிலும், மாலையிலும் இயங்கி பூமியின் தண்ணீரை இறைத்து மேலே கொண்டு வந்து கொண்டுள்ளன.

விவசாயமும் மழையும்
தமிழ்நாட்டில் உள்ள 27 லட்சம் எக்டர் நிகர பாசன நிலங்களில் 12.5 லட்சம் எக்டர் கிணறுகள் மூலமும், 8.1 லட்சம் எக்டர் பரப்பு கால்வாய்கள் மூலமும், 6 லட்சம் எக்டர் பரப்பு ஏரிகள் மூலமும் பாசனம் செய்யப்படுகிறது. மொத்த பாசன பரப்பளவு 33.1 லட்சம் எக்டர்கள். தமிழ்நாட்டின் ஆண்டு மழையளவு 923.1 மில்லி மீட்டர்.
இந்த மழைநீர் முழுவதையும் பூமிக்குள் செலுத்தி விட்டால் தமிழ்நாடு போல் ஒரு மாநிலம் வேறு எங்கும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடும். நிலத்தடி நீர் மட்டம் உயரும் போது வறட்சி விலகும். நிலத்தடி நீர் அதிகமாவதால், கிணறுகளில் நீர் மட்டம் உயரும். பாசனப்பரப்பு விரிவாக்கப்படும். இதனால் விவசாய உற்பத்தியை அதிகரிக்கலாம்.
ஆனால், நிலத்தடி நீரின் பயன்பாடு மழைநீரின் உட்கசிவை விட பல மடங்கு அதிகரிப்பதால், நிலத்தடி நீர் மட்டம் அண்மைக்காலமாக பல இடங்களில் வேகமாக குறைந்து வருகிறது. இதனால், கடற்கரை ஓரங்களில் கடல் உப்பு நீர் உள்ளே நுழைந்து நிலத்தடி நீரின் தன்மையை பாதிக்கிறது.
இந்த நீரை பாசனத்திற்கு பயன்படுத்துவதால் விளைநிலங்களும் பாழாகின்றன. நிலத்தடி நீர் மட்டம் குறைய குறைய கிணறுகள் மற்றும் ஆழ்துளைக்கிணறுகளையும் அதிக செலவில் ஆழப்படுத்த வேண்டியுள்ளது. கிணறுகள் நீர்வற்றி போவதால் முதலீடுகள் வீணாகி விவசாயிகள் பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

கண்டிப்பாக பஞ்சம்?
இப்போது நாம் வீடுகளில் பயன்படுத்தும் தண்ணீரின் அளவை கணக்கிட்டால் தமிழகத்தில் விரைவில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் இப்போது தேவைப்படும் தண்ணீரைவிட இரண்டு மடங்கு தண்ணீர் விவசாயத்திற்கும், ஏழுமடங்கு தண்ணீர் தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் பயன்பாட்டுக்கும் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது பயன்படுத்தப்படும் நீரின் அளவில் 50 விழுக்காடு பற்றாக்குறை ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் தொழிற்சாலை, வேளாண்மை ஆகிய ஒவ்வொரு துறையிலும் நீர்சிக்கன உத்திகளை கையாள வேண்டியது அனைவரது கடமை.
இந்த கடமையை மறந்து விட்டால், தமிழகம் பாலைவனமாகி பஞ்சப்பிரதேசமாகி விடும் அபாயம் இருக்கிறது.

தேவை அவசரச்சட்டம்

நிலத்தடி நீர் மட்டம் ஆண்டுக்கு ஆண்டு கீழே போய்க்கொண்டிருக்கிருப்பதால் அதனை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக நீர்த்தேவை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நீரின் தேவை மிகுந்துள்ளது. நமது கிராமப்புறங்களில் 80 விழுக்காடும், நகர்ப்புறங்களில் 50 விழுக்காடும் நிலத்தடி நீரில் இருந்து தான் பெறப்படுகிறது. பழங்காலம் தொட்டு இருந்த குளங்கள் அல்லது குட்டைகள் பராமரிக்கப்படாத சூழ்நிலையில் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி இருக்கிறோம். இதனால் மழைநீர் முறையாக சேமிக்க வேண்டும். ஏரி, குளங்களைப் பராமரிக்காமலும், நிலத்தடி நீரை சேமிக்காமலும் இருந்தால் எதிர்காலத்தில் கடுமையான நீர்ப்பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க இயலாது.

மழைநீர் சேமிப்பு திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த முறை ஆட்சியிலிருந்த போது கட்டாயப்படுத்தினார். " தமிழகத்தில் உள்ள எல்லாக்கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும். மழைநீர் சேமிப்பு அமைக்காத கட்டிடங்களுக்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 2003 இறுதிக்குள் தங்களது தங்களது கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் அத்தகைய கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தி அதற்கான செலவு தொகையை உள்ளாட்சி வசூல் செய்யும். அக்டோபர் 10 ம் தேதிக்கு பிறகும் மழைநீர் சேமிப்பு அமைப்புகளை ஏற்படுத்ததாத கட்டிடங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்" இப்படி ஒரு ஆணையை கடந்த முறை ஜெயலலிதா தலைமையிலான அரசு வெளியிட்டது.

அப்போது முனகியவர்கள் எல்லாம் பின்னர் அதன் பலனை அறிந்து நன்றி தெரிவித்தார்கள். தற்போதும் இந்த அரசு மீண்டும் ஒரு முறை இந்த திட்டத்தை கட்டயாமாக அமுல்படுத்தி தான் தீரவேண்டும் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழகத்தில் மழைநீர் சேமிப்பு என்பதை அவசர சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும், வணிக வளாகங்களிலும், மருத்துவமனைகளிலும், தொழிற்சாலைகளிலும்  தனிநபர்களின் கட்டிடங்களுக்கு அரசு ஆணை மூலம் மழைநீர் வசதியை பெருக்கிட அவசரச் சட்டம் மூலம் வழி செய்ய வேண்டும்.

அது போல் அரசாங்கம் மற்றும் உள்ளாட்சிகளின் பராமரிப்பில் இருக்கும் பூங்காக்கள், கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்களில் விழும் தண்ணீரும் சேமிக்கப்பட வேண்டும். அதாவது ஒட்டு மொத்தத்தில் மழை பெய்யும் போது சாலைகளில் தண்ணீர் ஓடாமல் அந்த மழைநீர் துளிகள் அனைத்தும் பூமிக்குள் திரும்ப வேண்டும்.

நிலத்தடி நீர் சேமிப்பு
1. மழைநீரை சேமிக்க உயர வரப்புகள், வயலோர வரப்புகள் அமைத்தல், தடுப்பனைகள் கட்டுதல், குட்டைகளில் தேக்கி வைத்தல், சமஉயர மேடைகள், சமூக காடுகள், பண்ணைக்காடுகள் மற்றும் நலிவுற்ற காடுகளை மேம்படுத்தல் மூலமாக நீர் பூமிக்குள் போகும் வழிகளை அதிகப்படுத்தலாம்.
2. இருக்கின்ற குளம் குட்டை ஏரிகளை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்தி, நீர்வளத்தை அதிகரித்தல், அனைத்து வீட்டுப்பயன்பாடுகளிலும் நீரின் அளவை சிக்கனமாக பயன்படுத்துதல் போன்ற செயல்களால் நிலத்தடி நீரை சேமிக்க முடியும். 
3. வீடுகளில், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படாத கிணறுகள் இருந்தால் அவற்றில் மழைநீரை சேமிப்பது மிக எளிய மற்றும் அதிக செலவில்லாத முறையாகும்.
4. கீழ்நிலை தொட்டிகள் (சம்ப்) இருக்குமானால், அதில் மழை நீரை வடிகட்டி மூலம் சேமித்து பயன்படுத்தலாம். மிகுதியான மழைநீரை குழாய்க்கிணற்றில் சேர்க்கலாம்.
5. கிணறுகள், குழாய்க்கிணறு இல்லாத இடங்களில் கசிவுநீர்க்குழிகள் மற்றும் நீர்க்கொள்ளும் கிணறுகள் அமைத்து மழைநீரை பூமிக்குள் செலுத்தலாம். குறைந்த பரப்பளவு கொண்ட கட்டிடங்களில் துணையுள்ள கசிவு நீர்க்குழிகளும் அதிக பரப்பளவுள்ள கட்டிடங்களில் நீர்கொள்ளும் கிணறுகளும் அமைக்க வேண்டும்.
6. மழைநீர் சேகரிப்பு முறைகளை நிலத்தடியில் மணற்பாங்கான பகுதியில் மழைநீர் சென்று சேகரிப்படும் வகையில் தேவையான ஆழத்திற்கு அமைக்க வேண்டும். (ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலத்தடி மண்ணின் தன்மைக்கேற்ப மழைநீர் சேமிப்பு முறைகளை அமைக்க வேண்டும்).

இதனை வலியுறுத்தும் பொருட்டு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் மழைத்துளிக்கான நண்பர்கள் அமைப்பை உருவாக்க முனைந்துள்ளோம். இந்த அமைப்பின் நோக்கம் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை மக்களுக்கு வலியுறுத்துவது மட்டுமே. இதற்காக அந்தந்த பகுதியில் உள்ள நண்பர்கள் இணைந்து மழைநீர் சேகரிப்பு மற்றும் அந்தந்த பகுதியில் உள்ள நீர் சேகரிப்பு அமைப்புகளை பாதுகாப்பதன் அவசியம் பற்றி மக்களிடம் சிறு பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் தொடக்க நிலை வேலை.

இந்த பிரசுரங்கள் பொதுவாக இயற்கை ஆர்வலர்கள், கல்வியியலாளர்கள், மழைநீர் சேகரிப்பு நிபுணர்கள், பொறியாளர்கள், தாவரவியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளிடம் பெறப்பட்ட தகவல்களை கொண்டதாக இருக்கும். இந்த அமைப்பில் மாவட்டம் தோறும் இருந்து இயங்க விரும்பும் இயற்கை ஆர்வலர்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்

No comments:

Post a Comment