Sunday, November 13, 2011

உலகம் உறுதியாக அழிவை நோக்கி போகிறது:தடுக்க கோரி மாநாடு


" மனிதனுக்காக படைக்கப்பட்ட உலகம் முடிவால் அவனாலேயே அழிக்கப்படும்"-பைபிள்
கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வைக்கப்பட்டவை இவை. ஆம், நிச்சயம் உலகம் உறுதியாக அழிவை நோக்கி போகிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது வெயிலின் உக்கிரம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருவதை கணக்கீடுகள் காட்டுகின்றன. இப்படி உயரும்  வெப்பத்தை தாங்கும் சக்தி மனிதன், தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு இல்லை. எனவே பூமிக்கு ஏற்பட போகும்  அழிவு  எந்த உத்தியாலும் தடுக்க முடியாததாக இருக்க போகிறது. உயர போகும் வெப்பம் மனித குலத்தை கருக்கி அழிக்க நேரிடலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

இந்த பேராபத்தை தடுக்க கோரி மதுரையில் வரும் ஜுலை 22,23,24 திகதிகளில் புவி வெப்பமயமாக்கலுக்கு எதிரான தமிழக மாநாடு நடைபெறவுள்ளது. சமூக ஆர்வலர்களால் நடத்தப்படும் இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதிலும் இருந்து அறிவியல் அறிஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக சேவகர்கள் உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த மாநாட்டை முன் முயற்சி எடுத்து நடத்துபவர் திரு.ஒய்.டேவிட் என்ற சமூக ஆர்வலர். உலகம் முழுவதிலும் நடைபெற்ற பல சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்குகளிலும், மாநாடுகளிலும் கலந்து கொண்டவர் இவர். மனித குலத்திற்கு ஏற்பட போகும் பேரழிவை தடுக்க இணைந்து செயல்படுவோம் என்ற அறைகூவலுடன் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த மாநாடு ஏன் என்பது பற்றி அவரிடம் கேட்டோம்.

" நாம் எல்லோரும் இன்று ஒரு அசாதாரண காலகட்டத்தில் வாழ்கிறோம். இந்தோனேஷீயா, இந்தியா, ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி உள்பட உலகின் பலபகுதிகளும் இயற்கையின் சீற்றங்களால் அழிவை ஆங்காங்கே சந்திக்கின்றன. இந்த நிகழ்வுகள் நம்மை அச்சுறுத்துவதுடன் நமது வாழ்வையே கேள்விக்குறியாக்குகிறது.
பனிப்பகுதிகள் உருகி வருகின்றன
ஆர்டிக், அண்டார்டிகா, கீரின்லாந்து போன்ற பனிப்பிரதேசங்களில் உள்ள பனிப்பகுதிகள் உருகி அப்பகுதிகள் உலகின் ஏனையப் பகுதிகளைப் போன்று தரைப்பகுதியாக்கும் போக்கு வேகமாக அதிகரித்துக் கொண்டே
வருகிறது. இமயமலையிள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகுவதால், வற்றாத நதிகள் வறண்டு போகும் நிலையும், அதனால் ஏற்படும் தாக்கங்களும் நம்மை அச்சுறுத்துவதாக உள்ளது. உலகின் பிற பகுதிகளிலுள்ள மலைத்தொடர்களிலும் இதே போக்குகளே நடந்துகொண்டிருக்கின்றன. கடல் மட்டங்கள் உயர்ந்து கொண்டேவருகின்றபடியால் கடற்கரையை அடுத்த தாழ்வான பகுதிகளிலுள்ள கிராமங்கள், நகரங்களில் உள்ள மக்கள் இடம் பெயர வேண்டியகட்டாயகாலச்சூழல்கள்வேகமாகஉருவாகிக்கொண்டேயிருக்கின்றன. பலதீவுகள் கடலுக்குள் மூழ்கிவிடும் நிலையில் உள்ளன.

தமிழகத்திலுள்ள சென்னை மாநகரின் பெரும் பகுதியும், நமது கிழக்கு கடற்கரையில் பெரும்பாலான பகுதிகளிலும் இந்நிலையே ஏற்படும். காடுகளில் பெரும் தீ ஏற்கனவே அநேக நாடுகளில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. உலகின் வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க
இப்போக்கு அதிகமாகிக் கொண்டேயிருக்கும். பருவகால மாற்றங்களினாலும், நீர் பற்றாக்குறையினாலும், வெப்ப அதிகரிப்பினாலும் விவசாய உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படும். நெல், கோதுமை உற்பத்திகள் பெருமளவில் குறைந்து கொண்டே வரும். இதனால் உணவுக்கு வருங்காலத்தில் எவ்வித உத்திரவாதமும் இருக்க வாய்ப்பில்லை.

பலபிரதேசங்களில் சிறுதானியங்கள் கூடப்பயிரிடமுடியாத நிலைமை உருவாகிக் கொண்டே வருகிறது.நீண்டகோடைகாலம் ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டேவரும் வெப்பம், தொடர்ந்து வறட்சி, பெரும்
வெள்ளப்பெருக்கு, புயல், சுனாமி, பூமியதிர்ச்சிகள் போன்றவைகள் உலகின் பல பகுதிகளில் சாதாரண நிகழ்வுகளைப் போன்று அடிக்கடி நடந்து கொண்டிருக்கின்றன.

மக்கள் பெருமளவில் இடம் பெயர்தல், உயிரிழப்புக்கள், வாழ்வாதாரங்களை இழந்து தவித்தல் போன்றவைகள் உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகின்றன. பல்லுயிர்ப்பெருக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டேயிருக்கின்றன. பல்வேறு வகைப்பட்ட வெப்ப சம்மந்தமான நோய்கள் அதிகரித்து வருகின்றன.

அழிவை கொண்டு வரும் 20 செல்சியஸ் வெப்பம் 
இன்று புவியின் சராசாரி  வெப்பம் தொழில் புரட்சி ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்ததை விட தற்போது 0.740 செல்சியஸ் ஆக உயர்ந்துள்ளது என ஐபிசிசி(Intergovernmental Panel on Climate Change-IPCC) கூறியுள்ளது. இந்தக் குழுவில் 2000க்கும் அதிகமான விஞ்ஞானிகள் உள்ளனர். பூமியின் வெப்பத்தில் 0.740 செல்சியஸ் கூடியிருப்பதன் காரணமாகத்தான் மேலே சொல்லப்பட்ட வரலாற்றில் இதுவரை நிகழாத அசாதாரணமான அழிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. IPCC - யின் 4 வது அறிக்கையின் படி, பூமியின் வெப்பம் வேகமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. 20 செல்சியஸ் ஆக உயருமென்றால் நாம் பேரழிவை சந்திப்போம்.

அத்தகைய பேரழிவினால் பூமியின் நிலையே தாறுமாறாகப் போகும். பூமி தன்னை சரிப்படுத்திக் கொள்ளும் ஆற்றலை பலநிலைகளில் இழந்து விடும். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் எவ்வித பயனும் அளிக்காது. எனவே 20 செல்சியஸ்க்குள் பூமியின் வெப்பநிலையை வைத்துக் கொள்ள வேண்டும் என இத்தாலியில் 2008- ல் கூடிய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. உலகநாடுகள் இந்தமுடிவை ஏற்றுள்ளன. இந்தியாவும் 20 செல்சியஸ் வெப்பநிலையை உச்சகட்ட பாதுகாப்பு அளவீடாக வைக்கவேண்டும் என்பதை ஏற்றுள்ளது.

இன்று உலகில் செய்யப்படும் செயல்பாடுகளின் போக்கைப் பார்த்தால் நாம் மிக விரைவில் இந்த 20 செல்சியஸை தாண்டி விடுவோம் என்றே தோன்றுகிறது. இன்னும் பத்து, பதினைந்து வருடங்களுக்குள் இன்று அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நாம் பேரழிவை சந்திப்போம்.

பூமி வெப்பமடைதல்
இன்று ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களும், அழிவுகளும் பூமிவெப்பமடைந்தினால் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும்  மனிதர்களுடைய வேகமான செயல்பாடுகளால் பசுமைக்குடில் வாயுக்களின் அளவும், செறிவும் பூமியின் வளிமண்டலத்தில் கூடியுள்ளன. இதுவே பூமி வெப்பமடைதலுக்கு அடிப்படை காரணமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் நைட்ரஜன் 78 விழுக்காடும், பிராணவாயு 21 விழுக்காடும் உள்ளன. மீதமுள்ள1 விழுக்காட்டில்பசுமைக்குடில் வாயுக்களான கரி யமிலவாயு, மீத்தேன்,  நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவைகள் முக்கியமான
வாயுக்களாகும். இவைகளில் கரியமிலவாயுவே அதிகமாக காணப்படுகிறது. இதோடு குளிர்சாதனக்கருவிகளிலிருந்து வெளிவரும் குளோரோ·புளூரோகார்பன், விமானங்களில் எரிபொருளாக பயன்படுத்தப்படும் ஏரோசால் போன்ற வாயுக்களும் பசுமைக்குடில் வாயுக்களில் அடங்கும். 1

1824-ல் பசுமைக்குடில் வாயுக்களின் செறிவு வளிமண்டலத்தில்
அதிகரிப்பதால் பூமி வெப்பமடையும் என்பதை ஜோசப் என்பவர் எடுத்துரைத்தார். 1828-ம் ஆண்டில் கரியமிலவாயுவின் செறிவு 228ppm (particles per million) ஆக இருந்தது. 2004-ல் 383ppm ஆக கூடியுள்ளது.350ppmக்கு மேல் கூடுவதே பேரழிவை உருவாக்கும். ஏற்கனவே அந்த அளவையும் தாண்டி விட்டது. எனவே உடனடியாக 350ppmக்குள் செறிவைக் குறைக்க வேண்டும் என NASA விஞ்ஞானி ஜேம்ஸ் ஹான்சன் குறிப்பிட்டுள்ளார்.

பசுமைக்குடில் வாயுக்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள்
பசுமைக்குடில் வாயுக்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள் இரண்டு என தெளிவாகக் கண்டறியப்பட்டுள்ளன. அவை புதைபடிவ எரிபொருட்களை
அதிகம் பயன்படுத்தல், காடுகளை பெருமளவில் அழிப்பது. இவைகளில் புதைபடிவ எரிபொருட்கள் பெரும் பங்கை வகிக்கின்றன. நிலக்கரி , பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவைகளை மையப்படுத்தியே சென்ற இரு நூற்றாண்டுகளாக மேற்கத்திய பாணியிலான நாகரிகம் வடிவமெடுத்துள்ளது.

உலகில் மின்சக்தி பெருமளவில் நிலக்கரியையே பயன்படுத்தும் அனல்மின் நிலையங்களிலிருந்து தான் எடுக்கப்படுகின்றன. இன்று உலகமெங்கும் போக்குவரத்து பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்களையே
சார்ந்துள்ளது. ஆலைகள் பெரும்பாலும் புதைபடிவ எரிபொருட்களையே சார்ந்துள்ளது. எனவே பசுமைகுடில் வாயுக்களை உமிழும் எரிபொருட்களைச் சார்ந்த வாழ்வியல் முறை இன்று நம்மை பேரழிவின் விளிம்பில் கொண்டு நிறுத்தியுள்ளது.

விவசாயம் மற்றும் தொழில்களுக்காக காடுகள் உலகமெங்கும் பெருமளவில் அழிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. வெட்டப்பட்ட மரங்களிலிருந்து உமிழப்பட்ட கரியமிலவாயு மற்றும் விவசாய முறைகளால் உருவான மீத்தேன் வாயுவும, பசுமைக்குடில் வாயுக்களின் செறிவு வளி மண்டலத்தில் அதிகரிப்பதற்கான காரணங்களாக அமைகிறது. மேலும் காடுகளின் அளவு குறையும் போது, கரியமிலவாயுவை கிரகிக்கும் நிலையும் குறைகிறது.
வளிமண்டலத்தில் பசுமைக்குடில் வாயுக்களின் செறிவு அதிகமாக இருப்பதால், சூரிய ஒளி பூமியில் பட்டு, மறுபடியும் மேலே செல்வதற்கு வாய்ப்பில்லாமல், வளிமண்டலத்தில் சென்று மறுபடியும் பூமிக்கே திரும்புகிறபடியால், பூமியிலேயே வெப்பம் தேங்கி பூமியை வெப்பமடையச் செய்கிறது.

பூமி வெப்பமடைதல்:பொருளாதாரப் போக்குகளின் விளைவே!
பூமி வெப்பமடைந்து, நாம் அழிவையும், பேரழிவையும் நோக்கி பயணம் செய்கிறோமென்றால் அதற்கு வெறும் பசுமைக்குடில் வாயுக்கள் மாத்திரம் காரணமல்ல. இன்றைய பொருளாதார போக்குகளும், அவற்றை மையமாகக் கொண்டு எழும்பிய நாகரிகமும் தான் காரணமாகும். பசுமைக்குடில் வாயுக்களை அளவோடு வெளியிடும் விதத்தில், புதைபடிவ
எரிசக்திகளை பயன்படுத்தியிருந்தால்,காடுகளை அளவோடு வெட்டியிருந்தால் இன்றைய நிலை ஏற்பட்டிருக்காது.

பேராசையை மையமாகக் கொண்டு, லாபநோக்கத்திற்காக மட்டும் செயல்படும், சந்தையை மையப்படுத்திய, பன்னாட்டுகம்பெனிகளால் திறமையாக உலகம் முழுவதிலும் திணிக்கப்பட்டு வரும் நாசகரமான பொருளாதாரம்தான் நம்மை பேரழிவுக்கு நேராக இழுத்து செல்லுகின்றன. இப்பொருளாதாரத்தில் வன்முறையான வளர்ச்சிப்பாதையே
வடிவமைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியின் அளவீடாக தேசிய மொத்த உற்பத்தி (Gross Domestic Product) உள்ளது.

நாடுகளின்  சுயநலம்
எனவே ஒவ்வொரு நாடும் தங்களுடைய GDP யை கூட்டுவதிலேயே கவனம் செலுத்துகின்றன. GDP கூடுவதை நாட்டின் முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்த அளவீட்டில் கேட்கப்படவேண்டிய முக்கிய கேள்விகள்
கேட்கப்படுவதில்லை. இவ்வளர்ச்சியின் அளவீட்டைக் கூட்டுவதில் எத்தகையப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன?
அவைகள் யாரால் எப்படி செய்யப்பட்டன?
எந்தப்பிரிவு நுகர்வோருக்காக உற்பத்தி செய்யப்பட்டன?
அவைகள் ஏற்படுத்திய ஏற்ற தாழ்வுகள் என்ன?
இந்த உற்பத்திக்கு யாருடைய வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டன? அவற்றின் மதிப்பீடு என்ன?
இயற்கையின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது?
வருங்காலத்தில் தொடர்ந்து ஏற்படுத்தும் தாக்கங்கள் எதுவாயிருக்கும்? அவைகளின் மதிப்பீடுகள் என்ன?
என்ற கேள்விகள் எழுப்பப்படுவதேயில்லை. இப்படிப்பட்ட
கேள்விகளை எழுப்பாததின் விளைவே இன்றைய வன்முறையான வளர்ச்சிப்பாதை. அதுவே நம்மை அழிவுக்கும் பேரழிவுக்கும் நேராக இட்டுச் செல்கிறது.
இன்று உலகமயமாக்கல் என்ற கோட்பாடுகளின் கீழ் உலகமெங்குமுள்ள இயற்கை வளங்களும், மக்களின் வாழ்வாதாரங்களும் பறிக்கப்பட்டு, மக்கள் வறியவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். வறுமையின் பிடியில் சிக்கியவர்களின்
எண்ணிக்கை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவு கூடிக்கொண்டே வருகின்றன. நாடுகளுக்கிடையிலும், நாடுகளுக்குள் மக்களுக்கிடையிலும் ஏற்றத்தாழ்வுகள் கூடிக்கொண்டே வருகின்றன. மக்களின் பாரம்பரிய அறிவும்,செயல்பாடுகளும் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டுள்ளன. நமது சுற்றுச்சூழல் சிதைக்கப்பட்டு நாம் வாழ முடியாத சூழ்நிலைகள் உருவாகிக்கொண்டே வருகின்றன. ஆயுதங்கள் கம்பெனிகளின் வர்த்தகப்பொருளாக வடிவமெடுத்து, உலகத்தின் பல பாகங்களில் அமைதிக்கே கேடு விளைவிக்கிறது.

மக்களுக்காக செயல்பட வேண்டிய ஜனநாயகப்போக்குகளும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு சேவை புரியும் அமைப்புகளாக மாற்றப்பட்டு, ஜனநாயகம் நாளுக்கு நாள் வளமையடைவதற்கு பதில் இன்று வலுவிழந்து சிதைக்கப்பட்டுள்ளது. எனவே, சென்ற ஐநூறு வருடங்களில் உலகில் செயல்பட்ட, பொருளாதாரபோக்குகளும் அவைகளில் உச்சகட்டமாக உருவான உலகமயமாதல் போக்குகளும் நம்மை இன்று பேரழிவின் விளிம்பில் கொண்டுவந்துள்ளன.

இந்தியாவில் பூமி வெப்பமடைவதால் ஏற்படும் தாக்கங்கள்
இந்தியாவில் இந்தியாவில் இதன் விளைவு மிகபயங்கரமானதாக இருக்கும்.  இந்திய அரசு 2006ல் கொண்டுவந்துள்ள காலநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டம் (National Action Plan on Climate Change) மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டம் (National Action Plan on Climate Change)
எட்டு அம்சங்களைக் கொண்டுள்ளது.
1. தேசிய சூரிய ஒளி இயக்கம்
2. தேசிய விரிவுபடுத்தப்பட்ட சிக்கன இயக்கம்
3. நிலைத்த குடியிருப்புகளுக்கான தேசிய இயக்கம்
4. தேசிய தண்ணீர் இயக்கம்
5. இமாலய சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம்
6. பசுமை இந்தியா இயக்கம்
7. நிலைத்த வேளாண்மைக்கான தேசிய இயக்கம்
8. தட்பவெப்பநிலை மாற்றம் பற்றிய அறிவுசார் உத்திகளுக்கான தேசிய இயக்கம்
இத்திட்டங்களை தீட்டும்போதும், செயல்படுத்தும் போதும் மக்களின் பங்கேற்பு ஏதும் இல்லை. பன்னாட்டு கம்பெனிகளின் நலன்களை பாதுகாக்கும் விதத்திலும், சர்வதேச அரங்குகளுக்கு இந்தியா காலநிலை மாற்றப் பிரச்சனையில் தீவிரமாக செயல்படுகிறது என்பதைக் காட்டுவதற்கும் மட்டுமே இத்திட்டங்கள் துணைசெய்யுமேயன்றி பூமி வெப்பமடைதலைக் குறைக்க எவ்வகையிலும் துணைசெய்யாது.

நாம் செய்யவேண்டியது...
பூமி அழிவிலிருந்து பேரழிவை நோக்கி செல்லுகிறது என்பது நம் ஒவ்வொருவர், நம் எதிர்கால சந்ததியினர், பூமியில் நம்மோடு வாழ்கின்ற ஏனைய உயிரினங்கள் ஆகியவற்றோடு நேரடியாக சம்பந்தப்பட்டவைகள் ஆகும். எனவே நாம் ஒன்றும் செய்யாமல் இருப்பது என்பது முடியாத காரியம். ஒவ்வொருவருக்கும் பூமியை பேரழிவிலிருந்து பாதுகாக்க கடமையிருக்கிறது. தனிப்பட்ட, குடும்ப வாழ்வில் எவையெல்லாம் செய்ய முடியுமோ அவைகளைச் செய்யவேண்டும்.

* வாழ்வை இயற்கைக்கு இசைவுள்ளதாக அமைத்துக் கொள்ளவேண்டும்.
* கிராமங்களில் கூட்டாக இயற்கை வளங்களை பாதுகாக்கவும், பேணவும், முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
* மாநில, தேசிய அளவில், இன்றைய போக்குகளுக்கு, மாற்றுப்போக்குகளை உருவாக்கும் விதத்தில், நாம் பலமான அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும். 

தமிழகம்
தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இன்று பன்னாட்டு கம்பெனிகளும், உலகவங்கி, ஆசியவங்கி போன்ற அமைப்புகளும் பலமாக வேரூன்றி வளர்ச்சி என்ற போர்வையில் நமது வள ஆதாரங்களையும், வாழ்வாதாரங்களையும் சந்தைப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். பசுமைக்குடில் வாயுக்களை நாளுக்குநாள் கூடுதலாக வெளியிடும் செயல்பாடுகள் தான் முன்னிலையில் உள்ளன. தமிழகத்தின் விவசாயம் அடியோடு விழுந்து விட்டது. கிராமத்தொழில்கள் நசுங்கிவிட்டன.

நிலம்,நீர், காடுகள் போன்ற வாழ்வாதாரங்கள் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகின்றன. எனவே தமிழகத்தின் பொருளாதாரப் போக்குகளும், அவற்றைத் தாங்கிப் பிடிக்கின்ற அரசியல் போக்குகளும் மக்களுக்கும் இயற்கைக்கும் எதிராக செயல்படுகின்றன என்பதை நாம் உணர வேண்டும்.

எனவே, மக்களிடையே புதிய சிந்தனை போக்குகளை உருவாக்கவும், வளர்க்கவும், புதிய சக்திகள் தமிழகத்தில் உருவாகவும், இன்றுள்ள பன்னாட்டு கம்பெனிகளை மையப்படுத்திய வளர்ச்சிப்போக்குக்கு மாற்றாக மக்களைமையப்படுத்திய, இயற்கையோடு இசைவான, அறநெறியுள்ள பொருளாதார போக்குகள் உருவாகவும், தொடர்ந்த செயல்பாடுகள் அவசியம். சமூக ஆர்வலர்கள் இப்போக்குகளை உருவாக்க தனிக்கவனம் செலுத்தவேண்டும்

இந்நிலையில் தான் பூமி வெப்பமடைதல், நமது பேரழிவை மையப்படுத்திய மாபெரும் மாநாடு தேவைப்படுகிறது. மக்கள் புவி வெப்பமடைதலை தெளிவாக புரிந்து கொள்ளவும், தமிழகத்தில் வளர்ச்சி, முன்னேற்றம்,மேம்பாடு ஆகியவைப் பற்றி புதிய சிந்தனைப் போக்குகள் உருவாகவும், அரசு தன் போக்குகளை மாற்ற வலிமையான அழுத்தங்களை உருவாக்கவும், ஏனைய மாநிலங்களிலும் உலகின் பிற பாகங்களிலும் இதே எழுச்சிகள் உருவாக துணை செய்யவும், மக்களை மையப்படுத்திய பசுமை உற்பத்திகளை ஊக்கப்படுத்தவும், உந்துதல் கொடுக்கவும் மாபெரும் மாநாடு அவசியம்.
இம்மாநாட்டை சிறப்பான முறையில் அமைக்க முழுக்கவனத்தையும் செலுத்தவேண்டும்" என்கிறார் திரு .டேவிட்.
பேரழிவைத் தடுப்போம்!! புவியைக் காப்போம்!!!

No comments:

Post a Comment