Monday, November 14, 2011

நவீன தொழில்நுட்பம்

கலப்பின கிடேரிகள் வளர்க்க எளிய வழிமுறைகள்
கிடேரிக் கன்றுகளை தேர்வு செய்தல்: பொதுவாக ஜெர்சி கிடேரிகள் சிவப்பு அல்லது கருமை நிறத்தினை உடையது. உடல் முழுவதும் ஒரே நிறத்தினையே பெற்றிருக்கும். ஹால்ஸ்டியன் - பிரிசியன் இனம் வெள்ளை மற்றும் கருப்பு கலந்து காணப்படும். கிடேரிகளை 9-12 மாத வயதில் வளர்ப்பிற்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வயதில் கிடேரிகள் தற்காலிகப் பற்களையே பெற்றிருக்கும். மேலும் கிடேரிகளை தேர்ந்தெடுக்கும்போது கீழ்க்கண்ட அம்சங்களை கவனித்து வாங்க வேண்டும்.
* தேர்ந்தெடுக்கப்படும் கிடேரிகள் சுறுசுறுப்பாகவும் சாந்தமான மனநிலை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
* பக்கங்களில் இருந்து பார்க்கும்பொது உடல் நீள, முக்கோண வடிவாகக் காணப்பட வேண்டும்.
* முதுகு தொங்கிக்கொண்டு இல்லாமல் நேர்கோடாகவும், திமில் இல்லாமலும் மென்மை கலந்த தோற்றத்துடனும் இருக்க வேண்டும்.
* கண்கள் பளிச்சென்றும் வலுவான கால்களுடனும் தோற்றமளிக்க வேண்டும்.
* தோல் நல்ல மினுமினுப்பாகவும், மிருதுவாகவும் இழுத்தால் எளிதாக இழுபடும் விதமாகவும் இருத்தல் வேண்டும்.
* மூக்கு பெரியதாகவும், உடல் விரிந்தும் காணப்பட வேண்டும்.
* பால் மடியில் நான்கு காம்புகள் இருக்க வேண்டும். கிளை காம்புகள் இருப்பின், அதை சிறு அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிட வேண்டும். இதனால் மடி சீராக வளரும்.
* கால் குளம்புகள் கருப்பாகவும், ஈரத்தன்மையுடனும் இருக்க வேண்டும். குளம்புகளின் நடுவில் பிளவு அதிகமாக இல்லாமல் ஒட்டி இருக்க வேண்டும்.
பண்ணை வீடு அமைத்தல்: ஒரு கிடேரிக் கன்றுக்கு 15-20 ச.அடி இடம் தேவை. பொதுவாக கிடேரிக் கன்றுகளை மிதத்தீவிர முறையில் வளர்க்கலாம். இம்முறையில் இரவு மற்றும் சாதகமற்ற தட்பவெப்ப நிலைகளில் கால்நடைகளை கொட்டிலிலும் மற்ற தருணங்களில் திறந்தவெளி மேய்ச்சல் அல்லது தற்காலிக பாதுகாப்பு வேலிகளை அமைத்து வளர்க்கலாம். கொட்டகையின் உயரம் 10 முதல் 12 அடி உயரத்திற்கு குறையாமலும் நல்ல காற்றோட்ட வசதியுடனும் இருக்க வேண்டும். பண்ணை கிழக்கு மேற்காக அமைய வேண்டும். கொட்டகையின் தரை உறுதியாகவும் வெயில் காலங்களில் குளிர்ச்சியாகவும் மற்றும் எளிதில் உலரக் கூடியதாகவும் இருக்க வேண்டும். தரையை வடிகால் நோக்கி 60 அடிக்கு ஒரு அடி என்ற அளவில் சரிவுடன் கான்கிரீட்டால் அமைக்க வேண்டும். கொட்டகையின் கூரையை தென்னங்கீற்று, பனை ஓலை, கல்நார்ப்பலகை, நாட்டு ஓடு மற்றும் மங்களூர் ஓடு ஆகியவைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி அமைக்கலாம். 10 கிடேரிக் கன்றுகள் வளர்க்க 200 ச.அடியில் கொட்டகை அமைக்க வேண்டும்.
தீவனமளித்தல்: பொதுவாக கிடேரிகளுக்கு அடர்தீவனம், பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். ஆனால் கிடேரிகளை மிதத்தீவிர முறையில் மேய்ச்சல் மூலம் வளர்க்கும்பொழுது அதன் உடலுக்குத் தேவையான எரிசக்தி மற்றும் புரதச்சத்து போதுமான அளவு கிடைப்பதில்லை.
எரிசக்தி பற்றாக்குறையினைப் போக்க போதுமான அளவு பசுந்தீவனம் அளிக்க வேண்டும். குறிப்பாக தீவனச்சோளம், மக்காச்சோளம் மற்றும் வீரிய புல் வகைகளான கோ1, கோ2 மற்றும் கோ3 போன்ற தீவனப்பயிர்களை தினசரி 5 கிலோ அளிக்கலாம். புரதச்சத்து தேவையினைப் பூர்த்தி செய்ய மரஇலைத் தீவனத்தை 5-6 கிலோ வரை அளிக்கலாம். அகத்தி, சவுண்டால் மற்றும் கிளைரிசிடியா போன்ற மர இலைகளை நல்ல பசுந்தீவனமாகப் பயன்படுத்தலாம். மேலும் வைக்கோல் போன்ற உலர்தீவனத்தை 1.5-2 கிலோ வரை அளிக்கலாம்.

No comments:

Post a Comment