Sunday, November 13, 2011

மூலிகை 1-அமுக்கிரா




 மரபு சார்ந்த பயிர்களின் சாகுபடி பல நேரங்களில் எதிர்பார்த்த லாபத்த¬ தருவதில்லை என்று விவசாயிகள் சலிப்பில் ஆழ்ந்து போவார்கள். இந்தியாவை பொறுத்தமட்டில் இங்கு விளையும் மூலிகைகளுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு இருக்கிறது. இதில் குறிப்பாக அமுக்கிரா கிழங்கு என்ற நரம்புத்தளர்ச்சி, இரத்தக் கொதிப்பு, ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை கிழங்கிற்கு அதிக தேவை உள்ளது. சுமார் ஐந்து அடிவரை வளரக்கூடிய இந்த குறுஞ்செடியில் இதன் கிழங்கே முக்கியமான மருத்துவப் பொருளாக உள்ளது. இந்த செடியின் வேர்க்கிழங்கிலிருந்து இரு முக்கிய வேதிப்பொருட்களான "வித்தானின்" " சோம்னியன்" என்பவை பிரித்தெடுக்கப்பட்டு மூலிகை மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. 

அமுக்கிரா கிழங்கில் வித்தாபெரின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது தொழுநோய் மற்றும் புற்றுநோயை குணப்படுத்துவதில் மிகச்சிறந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர அமுக்கிரா பொதுவாக உடல்தேற்றியாகவும், பித்தநீர் பெருக்கியாகவும், பசி உண்டாக்கவும் சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. இதன் இலைகள் காய்ச்சலை தீர்க்கவும், குடற்புழுக்களை கொல்லவும் பயன்படுகிறது. அதிகளவு அன்னிய செலாவணியை பெற்றுக்கூடிய அமுக்கிராகிழங்கு சாகுபடி விவசாயிகளுக்கு எக்கசக்க லாபத்தை பெற்று தரும் என்பதில் மாற்றமில்லை. இதன் சாகுபடி குறித்த விவரங்களை பார்க்கலாம்.

சித்த மருத்துவத்தில் அஸ்வகந்தி என்றழைக்கப்படும் அமுக்கிராக்கிழங்கு ஒரு வெப்ப மண்டல பயிராகும். வேரின் வளர்ச்சிக்கும் தரமான வேர்களை பெறுவதற்கும் ஆண்டு தோறும் 60 முமுதல் 75 செமீ மழையளவு இருக்க வேண்டும். ஆனால் வேர்கள் முதிர்ச்சி பெறும் நிலையில் மழை தொடர்ந்து பெய்தால், வேரின் உற்பத்தி மற்றும் மருந்து பொருளின் அளவு குறைந்து விடும்.

அமுக்கிரா கிழங்கு வறட்சியான பிரதேசங்களிலும், எல்லாவகையான தட்பவெப்ப நிலையிலும் நன்றாக வளரும்.  செம்மண் கலந்த மணற்பாங்கான நல்ல வடிகால் வசதியுடைய இடங்களிலும் செழித்து வளரும். கடல் மட்டத்திலிருந்து 600 முதல் 1200 மீட்டர் உயரமுள்ள இடங்களில் பயிரிடலாம். 
விதைப்புக் காலத்ததை பொறுத்த மட்டில், ஜுன்/ஜுலை மாதங்கள் ஏற்றவை. நாற்றாங்காலிலி ஏப்ரல்-மே மாதங்களில் விதைகளை தூவியும் விதைக்கலாம் அல்லது வரிசையாகவும் விதைக்கலாம். ஒரு எக்டர் நிலத்தில் சாகுபடி செய்ய, 5 கிலோ விதை போதுமானது. விதை முளைத்து 35 முதல் 45 நாட்கள் ஆனபின், நாற்றுக்களை நடவுக்கு பயன்படுத்தலாம்.

நடவு செய்யப்படும் நிலத்தை நன்கு உழுது, ஒரு ஏக்கருக்கு 4 டன் தொழு உரம் இட்டு பண்படுத்திய பின், 60 செ.மீட்டர் அளவில் பார்கள் அமைக்க வேண்டும். இந்த பார்களில், 60 செ.மீ இடைவெளியில் நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும். மானவாரி நிலங்களில் நாற்றங்காலை தவிர்த்து, நேரிடையாக நிலங்களில் விதைகளை தூவி சாகுபடி செய்யலாம். செடிகள் முளைத்து 25 நாட்கள் ஆன பிறகு, செடிகளின் எண்ணிக்கை ஏக்கருக்கு சுமார் 8000 முதல் 10 ஆயிரம் வரை மட்டுமே இருக்கும்படி மற்ற உதிரி செடிகளை களைந்து விட வேண்டும்.

இதற்கடுத்து செடிகள் வளர்ந்து வரும் நிலையில், இது மூலிகை செடி என்பதால் ரசாயன உரங்களை தவிர்த்தும், பூச்சி மருந்துகள் அடிக்காமலும் சாகுபடி செய்வது நல்லது. எனவே, இவற்றுக்கு பதிலாக தொழுஉரங்கள், மண்புழு உரங்கள் மற்றும் பசுந்தாள் உரங்கள் பயன்படுத்தலாம்.
அமுக்கிரா கிழங்கு சாகுபடியை பொறுத்த மட்டில் நீர்ப்பாசனம் முக்கியம். மண்ணில் அதிக அளவில் நீர் இருந்தால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படக் கூடும். எனவே, நீர்ப்பாசனத்தை தவிர்ப்பது நல்லது. எனினும், மிகவும் வறட்சியான காலநிலையில் பயிரின் உயிர்காக்கும் அளவில் நீர்பாசனம் செய்யலாம். 

செடியில் வேர்க்கிழங்குகள் நன்றாக வளர்ந்த நிலையில் அறுவடை செய்யலாம். அதாவது, ஏக்கருககு 120 கிலோ முதல் 200 கிலோ வரை உலர்ந்த வேரினையும், 25 முதல் 30 கிலோ விதைகளையும் மகசூலாக பெறலாம். செடியில் டிசம்பர் மாதத்தில் பூத்து காய்க்க தொடங்கும். செடிகளை நடவு செய்து 5 முதல் 6 மாதத்தில் இதன் இலைகளும், கனிகளும் வாடத் தொடங்கும். இந்த நிலையில், செடியினை வேருடன் அறுவடை செய்து, வேர்ப்பாகத்தை சுத்தம் செய்து 7 முதல் 10 செ.மீ அளவுள்ள துண்டுகளாக வெட்டி நிழற்பாங்கான இடத்தில் உலர்த்த வேண்டும். தற்போது வேரின் தரம் நான்கு வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
முதல் தரம்
வேரின் நீளம் ஏழு செ.மீ ஆகவும், அதன் குறுக்களவு 1.0 முதல் 1.5 செ.மீட்டர் விட்டம் உள்ளதாகவும் இருக்கும். வேர்கள் கடினமாகவும், அவற்றின் தோலின் நிறம் வெண்மையாகவும் இருக்க வேண்டும்.
இரண்டாவது தரம்
வேரின் நீளம் 5 செ.மீ ஆகவும், குறுக்களவு 1.0 செ.மீ ஆகவும், தோலின் நிறம் சுமாராகவும் இருக்க வேண்டும்.
மூன்றாம் தரம்
வேரின்நீளம் மூன்று செ.மீ ஆகவும், குறுக்களவு 1.0 செ.மீக்கு குறைவாகவும், தோலின் நிறம் சுமாராகவும் இருக்க வேண்டும்.
நான்காம் தரம்
சிறிய துண்டுகளும், வேரின் உட்புறம் கடினமில்லாமலும் இருக்க வேண்டும். மிகவும் பருமனான வேர்களில் மருந்து பொருளின் அளவு குறைவாக இருப்பதால் அவற்றுக்கு அதிக விலை இல்லை. 

No comments:

Post a Comment