Friday, November 11, 2011

பாலைவனமாகும் சோலைவனங்கள்




மிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து உதகை வரை இந்த மலைத்தொடரில் மனிதர்களின் புழக்கத்திற்கு வராத குன்றுகளின் உச்சியில் இருக்கும் புல்வெளிகள், பெய்யும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் தேக்கி வைக்கும் நீர்த்தொட்டிகளாக இயற்கையாகவே அமைந்துள்ளன. மலைச்சிகரங்களில் நடக்கும் மகத்தான இயற்கை நிகழ்வை புரிந்து கொண்டால் அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் சிக்கல் வராமல் செய்ய முடியும்.
சமவெளியை விட மலை உச்சிகளில் மழைப்பொழிவு அதிகம். அறிவியல்படி தண்ணீர் உயரமான இடத்தில் இருந்து பள்ளத்தை நோக்கி ஓடிவரும் இயல்பு கொண்டது. ஆனால், இந்த புல்வெளிகளில் இருக்கும் குன்றுகளில் மழைபெய்தால் அவற்றை தம் வேர்க்கால்களால் தேக்கி வைக்கும் இயல்பை புல்வெளிகள் கொண்டுள்ளன.
இந்த குன்றுகளில் சரிவுகளில் இருக்கும் சோலைக்காடுகள் நம் மலைக்கே உரித்தான தனித்தன்மையை கொண்டவை. வள்ளுவன் சொன்ன அணி நிழற்காடு இந்த சோலைகள் தான். கதிரவனின் ஒளிக்கீற்றுகள் புகமுடியாத ஈரப்பதம் நிறைந்த சோலைகளின் மண் உருவாகும் விதமே சிறப்புக்குரியது.
தமிழகத்தின் ஆண்டுதோறும் சராசரி மழையளவு 900 மி.மீ ஆகும். ஆனால், நமக்கு ஆண்டுக்கு 50 நாட்களுக்கு குறைவாகவே மழை கிடைக்கிறது. இவற்றை ஆண்டு முழுவதும் பயன்படுத்த இயற்கை கொடுத்த கொடை தான் மலைக்காடுகள். இதைத்தான் நம் முன்னோர்கள் குறிஞ்சி நிலம் என்று வரையறுத்து வைத்தனர்.
காடாய் இருந்த முல்லை நிலங்களை அழித்து மருத நில வயல்களாய் மாற்றிய தமிழர்கள், குறிஞ்சி நிலத்தை எந்த சேதாரமுமின்றி வைத்திருந்ததாக வரலாறு சொல்கிறது. எந்த நதியும் சமவெளிகளில் உற்பத்தியாவதில்லை. பசுஞ்சோலைகளே ஆறுகளின் தாய்மடி.
வெள்ளையர்கள் காலத்தில் நமது மலைவளம் கொள்ளை போனது. இயற்கைச் சோலைகள் அழிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட யூகலிப்டஸ், வேட்டல், பைன், தேயிலை, காபி என பசுமைப்பாலைவனங்கள் உருவாக்கப்பட்டன. ஓடைகள் மடிந்து நதிகள் சுருங்கின. இன்னும் மிச்சமிருக்கும் மிகக்குறைந்த மலைக்காடுகளே தண்ணீரின் ஆதாரம். அவற்றை காப்பது நம் தலைமுறைக்கு சேர்த்து வைக்கும் மிகப்பெரிய சொத்து.
உலகம் இன்று பேராபத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அது தான் புவிவெப்பம். இது பற்றி அறிவியல் உலகம் ஆழ்ந்த கவலையில் உள்ளது. மனிதர்கள் தோன்றிய நாள் முதல் சென்ற நூற்றாண்டின் துவக்கம் வரை பூமியில் வெப்ப நிலை சீராக இருந்தது. இந்த உயிர்க் கோளத்திற்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்வது உலகின் 13 நாடுகளில் உள்ள காடுகள் தான். அவற்றில் இந்தியாவும் ஒன்று. மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலை, இமயமலைக்காடுகள் உலகில் உயிர்க்காற்றை உற்பத்தி செய்வதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இந்தக் காடுகளே, வெளியேறிய கார்பன்டை ஆக்சைடுகளை உறிஞ்சிக் குடிக்கின்றன. காடுகளை காப்பாற்றுவதன் மூலம் உலகை அச்சுறுத்தும் புவி வெப்பத்தில் இருந்து எல்லா உயிர்களையும் காப்பாற்ற முடியும்.

No comments:

Post a Comment