Monday, November 14, 2011

தமிழகத்தில் இயற்கையாக பரவிவரும் ஆடுதுறை 45 நெல்



காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கம் கொளத்தூரில் விவசாயம் செய்து வருபவர் கே.லோகு. இவர் நெல் சாகுபடியில் வல்லுநர். எப்போதும் திறமையாக நன்கு தேர்ந்தெடுத்த நெல் ரகங்களை இவர் சாகுபடி செய்வது வழக்கம். கொளத்தூர் பகுதியில் நீர்வளம் சிறப்பாக இருப்பதால் விவசாயம் சிறப்பாக செய்யப் படுகிறது. இப்பகுதியில் நெல் விவசாயம் மூன்று பட்டங்களில் செய்யப்படுகிறது. சொர்ணவாரிப் பட்டத்தைத் தொடர்ந்து சம்பா மற்றும் நவரைப் பட்டங்களில் நெல் விவசாயம் செய்யப்படுகின்றது. போட்டி மனப்பான்மையில் விவசாயிகள் சிறப்பாக நெல் சாகுபடியை செய்து வருகின்றனர்.
கே.லோகு சொர்ணவாரிப் பட்டத்தில் ஆடுதுறை 43 ரகத்தை சாகுபடி செய்துவந்தார். இப்பயிரில் லாபம் எடுத்துவந்தாலும் ஆடுதுறை43 ரகத்தில் கோடையில் அதிக உஷ்ணத்தால் கதிரில் பால் பிடிக்கும் தருணத்தில் பால் சிதறி கருக்காய் அதிகமாக விழ ஆரம்பிக்கின்றது. அதனால் மகசூல் ஏக்கரில் 20 மூடைதான் கிடைத்தது. கோடை சற்று குறைவாக இருக்கும்போது நல்ல மகசூல் கிடைப்பதுண்டு. இதுசமயம் லோகுவிற்கு ஆடுதுறை45 என்ற நெல் ரகத்தை விவசாயிகள் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். ஆடுதுறை 45 ரகமும் ஆடுதுறை 43 போல் மிகவும் சன்னமான நெல்லினைக் கொண்ட ரகமாகும். இந்த பயிரை சொர்ணவாரியில் சாகுபடி செய்ய நினைத்து 2011ம்வருடம் மே மாதம் சித்திரைப் பட்டத்தில் ஆடுதுறை 45 ரகத்தினை அரும்பாடுபட்டு ஒரு ஏக்கரில் விவசாயி லோகு சாகுபடி செய்தார். பயிர் மிக செழிப்பாக வளர்ந்ததோடு அல்லாமல் வாளிப்பான கதிர்கள் வந்து பயிரைப் பார்த்தவர்கள் கவனத்தை ஈர்த்தது. பார்த்தவர்கள் எல்லாம் நல்ல மகசூல் கிடைக்கும் என்று கூறினார்கள். கதிர்கள் மிக சிறப்பாக வந்ததோடல்லாமல் நெல் மிக சன்னமாக இருந்தது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. பயிர் இவ்வாறு வளர்ந்து கொண்டிருக்கும்போது லோகு மிகப்பெரிய வியாபாரிகளைக் கூட்டி வந்து தனது பயிரைக் காட்டி என்ன விலை கிடைக்கும் என்ற கேட்டார். வியாபாரிகள் முதலில் எந்த கருத்தையும் கூறவில்லை. இருந்தாலும் ஒரு வியாபாரி சில நெல்மணிகளை எடுத்து கையில் தேய்த்து அரிசியை எடுத்து வைத்துக்கொண்டார். ஆனால் கருத்து ஒன்றும் சொல்லவில்லை. 
லோகு வியாபாரியின் கருத்தை தெரிந்துகொள்ள பொறுமையாக இருந்தார். ஒரு வாரம் கழித்து வந்த வியாபாரி லோகுவிடம், "உன் நெல் மிக சன்னமாக இருந்தாலும் அரிசி பச்சைக்கு வராது இருந்தாலும் வெண் புழுங்கலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது,' என்றார். என்ன விலை கொடுப்பீர்கள் என்று கேட்டதற்கு கிலோவிற்கு ரூ.8.50தான் கொடுப்பேன் என்றார். விவசாயி லோகு ரூ.9 கொடுங்கள் என்று கேட்டார். வியாபாரி மறுக்கவே வியாபாரி சொன்ன விலையே லோகு ஏற்றுக்கொண்டார்.
இந்த சமயத்தில் லோகு தனது கிராமத்தில் உள்ள ஆடுதுறை 43 ரகத்தை சாகுபடி செய்த விவசாயிகளை சந்தித்து உங்கள் பகுதியில் நெல் விலை விவரம் எப்படி என்று கேட்டார். வியாபாரிகள் கிலோவிற்கு ரூ.9 தருவேன் என்று சொன்னாலும் எங்கள் ஆடுதுறை 43 பயிர் எதிர்பார்த்த மகசூல் கொடுக்கவில்லை. ஏனெனில் நெல் மகசூலில் அதிகம் கருக்காய் போனதோடு கருப்பு நெல்கள் அதிகம் விழுந்துவிட்டன. விவசாயி லோகு மனதை திடப்படுத்திக் கொண்டு வந்த லாபம் வரட்டும் என்று தீர்மானம் செய்துகொண்டு தனது வயலில் அறுவடையை தயார்செய்ய ஆட்களை ஏற்பாடு செய்ய சென்றார்.
விவசாயி லோகு தனது அறுவடையை வெற்றிகரமாக செய்து முடித்தார். இப்பகுதி விவசாயிகள் லோகுவிற்கு என்ன மகசூல் வரும் என்று தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். லோகுவிற்கு ஏக்கர் சாகுபடி செலவு ரூ.10,036 ஆனது.
லோகுவிற்கு அறுவடையில் 25 மூடை மகசூல் கிடைத்தது (மூடை 80 கிலோ). ஒரு கிலோ ரூ.8.50 வீதம் ஒரு மூடை விலை ரூ.680.00. 25 மூடைகள் விலை ரூ.17,000. சாகுபடி செலவு ரூ.10,036 போக நிகர லாபம் ரூ.6,964 கிடைத்தது. வைக்கோல் வரவு ரூ.1000. மொத்த வரவு ரூ.7,964. விவசாயி லோகு சாகுபடியில் திருப்தி அடைந்தார். மேலும் ஆடுதுறை 45 ரகத்திற்கு ஆடுதுறை 43 ரகத்தைவிட அதிக மகசூல் திறன் உள்ளதை தெரிந்துகொண்டு தொடர்ந்து ஆடுதுறை 45 ரகத்தை சாகுபடி செய்யலாம் என்ற எண்ணத்திற்கு அனைவரும் வந்தனர். இந்த ரகம் மேலும் பரவுவதற்கு விவசாய இலாகா அதிகாரிகள் ரகத்தின் விதையை கொடுத்து உதவுவது குறிப்பிடத்தக்கது. ஆடுதுறை 45 தமிழகத்தில் இயற்கையாகவே பரவிவருகிறது.

No comments:

Post a Comment