Sunday, November 13, 2011

வீட்டில் கலப்பு கீரை விவசாயம் பார்க்கலாம் வாங்க!



டாக்டரிடம், எந்த வியாதியென்று போனாலும் 'சாப்பாட்டுல கீரைய மறக்காமா சேர்த்துக்கோங்க' என்பார். ஆனால் இன்றைக்கு சந்தைகளில் கூட பல்வேறு கீரைகளை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் வீட்டில் தொட்டிகளில் கூட கீரை பயிரிடலாம். அபார்ட்மெண்டுகளில் பொதுவாக உபயோகத்திற்கென்று சிறிதளவு இடம் ஒதுக்கியிருப்பார்கள்.

இந்த இடத்தை சிமெண்ட் வைத்து பூசி தளமாக்கி விடாமல், அந்த இடத்தில் கூட கீரை பயிரிடலாம். இதனால் இந்த இடம் பார்க்க பச்சை பசேல் என்று அழகாக இருக்கும். சாப்பிடுவதற்கு சத்தான கீரையும் பறிக்கலாம். இந்த பதிவில் விவசாய நிலத்தில் கீரை பயிரிடுவது குறித்து தான் என்றாலும், இதே அடிப்படையில் தொட்டியிலும், வீட்டில் இருக்கும் சிறிய இடத்திலும் பயிரிடலாம்.

குறைந்த நிலத்தில் பெரிய அளவுக்கு இடுபொருள் செலவு இல்லாமல் லாபம் வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி கீரைகளை பயிரிடுவது தான். கீரையில் என்ன லாபம் இருக்க போகிறது என்று எண்ணிவிடக்கூடாது. இன்றைக்கு மதுரையில் கூட அரைக்கீரை கட்டின் விலை 10 ரூபாய். சென்னை, கோவையில் எல்லாம் எப்படி என்று ஊகித்துக் கொள்ளுங்கள். கீரை சாகுபடி பற்றி அனுபவ விவசாயி கேசவன் சொல்வதை பார்க்கலாம். 

கலப்பு கீரை சாகுபடி
" பொதுவாக களிப்பு(களிமண்) இல்லாத நிலங்களில் முளைக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை,சிறுகீரை, பொன்னாங்கண்ணி, வெந்தயக்கீரை, புளிச்சக்கீரை போன்றவை நன்றாக வளரும். புளிச்சகீரையில் குள்ளக்காசினி, கொம்புக்காசினி என இரு வகைகள் உண்டு. இந்த இரண்டு கீரைகளையும் முக்கிய சாகுபடியாக இல்லாவிட்டாலும் ஓரங்களில் மட்டும் சாகுபடி செய்து லாபம் பார்க்கலாம். தோட்டத்தில் எல்லா வகை கீரைகளையும் கலந்து சாகுபடி செய்தால் தொடர்ந்து வருவாய் கிடைக்கும்.

அதிகமாக சிறுகீரை, அரைக்கீரை, முளைக்கீரை சாகுபடி செய்யப்படும். முளைக்கீரையை ஒரு முறை தான் பயன்படுத்த முடியும். இதனை முறையாக நன்கு சாகுபடி செய்தால் 18 வது நாளில் அறுவடை செய்யலாம். அரைக்கீரையினை ஒரு முறை சாகுபடி செய்தால் தொடர்ந்து 6 அல்லது 7 தடவைக்கு மேல் அறுவடை செய்யலாம். சிறுகீரை சாகுபடி முளைக்கீரை சாகுபடியை போன்றது தான். இதுவும் ஒரு முறை தான் பயன்தரும்.

விலை குறைவு
கீரை சாகுபடி செய்வதற்கு நிலத்தில் தொழுஉரம் போட்டு நிலத்தினை நன்கு உழவு செய்து மேட்டுப்பாத்தி அமைத்து விதைப்பு செய்ய வேண்டும். கீரை விதைகளை சில விவசாயிகள் தாங்களே சேமித்து வைத்து அதை வைத்து விதைப்பு செய்வதுண்டு. ஆனால் தற்போது நல்ல விதைகள் சந்தையில் கிடைப்பதால் அதனை வாங்கி பயன்படுத்தலாம். அரைக்கீரை சாகுபடியில் அவ்வளவாக நோய்த்தாக்கம் இல்லை என்பதால் விவசாயிகள் அரைக்கீரை விவசாயத்தில் அதிக ஆர்வம் காட்டுவதுண்டு. 

புளிச்சகீரை, சிறுகீரை போன்ற கீரைகளின் விதைகள் ஒரே மாதிரியான விலையில் கிடைக்கும். ஆனால் அரைக்கீரை விதையின் விலை சற்று கூடுதலாக இருக்கும். கீரைகளில் பொதுவாக பூச்சி தாக்குதல் இருப்பதுண்டு. இதனை கட்டுப்படுத்த பூச்சி மருந்துகளை பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பூச்சி தாக்கம் ஏற்பட்ட கீரைகள் விலை குறைந்து போகும்.

10 சென்ட் நிலத்தில்
ஒரு 10 சென்ட் நிலத்தில் கீரை சாகுபடி செய்ய உத்தேசமாக 2 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை தேவைப்படும். அதாவது இந்த செலவு என்பது விதை, உழவு, பாத்தி கட்ட, யூரியா, பூச்சி மருந்து, தொழுஉரம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றுக்கான செலவு ஆகும். 10 சென்ட் நிலத்தில் இருந்து எடுக்கப்படும் கீரைகளை சுமார் 7 ஆயிரம் ரூபாய் வரை விற்க முடியும். முதல் அறுவடை 25 வது நாளிலும், அடுத்து 15 வது நாளில் மீண்டும் அறுவடை செய்யலாம். மூன்று விரல் அளவு விட்டு கீரைகளை செடியில் இருந்து அறுவடை செய்ய வேண்டும். இப்படியாக 8 தடவை அறுவடை செய்யலாம்.

மறுஅறுவடை செய்யும் போது நாம் மிதித்து நிலம் கெட்டிப்படாமல் இருக்க மண்ணைக்கிளறி, களை எடுத்து வைக்க வேண்டும். அப்போது தான் கீரை நன்றாக வளரும். அரைக்கீரையில் முதல் சாகுபடியிலேயே செலவு போக லாபம் வந்து விடும். 

இதற்கு அடுத்த அறுவடையில் நீர் பாய்ச்சுதல், பூச்சி மருந்து, யூரியா போன்ற செலவுகள் மட்டுமே. கூடுதல் லாபம் இருந்தாலும் குறைந்த அளவு தான் அடுத்தடுத்த அறுவடைகளில் கிடைக்கும். மற்ற கீரைகளை விட அரைக்கீரையில் கூடுதலாக லாபம் பெறலாம்.

கீரை சாகுபடி செய்யும் போது ஒவ்வொரு பாத்தியினையும் தனித்தனியாக நாள் விட்டு சாகுபடி செய்தால் அறுவடையும் மொத்தமாக இல்லாமல் தனித்தனியாக வரும். தொடர்ந்து வருவாய் வரும் வகையில் கீரை வகைகளையும், விதைப்பு மற்றும் அறுவடை தனித்தனியே வரும் வகையில் திட்டமிட வேண்டும்.

No comments:

Post a Comment