Sunday, November 13, 2011

ஆடு மேய்க்கலாம் வாங்க ! அபாரமான லாபம் இருக்கு!



செய்தி: தமிழக கிராம மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி இலவசமாக ஆடு, மாடுகளை வழங்கும் திட்டத்திற்கு அதிகாரிகளுடன் ஆலோசனை.

நெருக்கடி மிகுந்த சென்னை வேண்டாம் என்று சொல்லி, அங்கு  ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்த கணவன் மனைவி இருவரும் அந்த வேலையை விட்டு விட்டு சொந்த ஊரான தஞ்சாவூருக்கு போய் ஆட்டு பண்ணை தொடங்கியதாக பசுமை விகடனில் ஒரு கட்டுரை வந்தது. ஆடு வளர்ப்பு என்பது அந்த அளவு மனநிம்மதியும், செல்வமும் தரும் ஒரு நல்ல தொழில்.

ஆடுகளும், மாடுகளும் "கால்நடைச் செல்வங்கள்" என்று மதிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த செல்வங்கள் மறக்கப்பட்டு இன்றைக்கு இந்த தொழில்கள் எல்லாம் நசிந்து போயிருக்கின்றன. மாடுகள் குறைந்து போனதால் பாலுக்கு திண்டாட்டமாகி இருக்கிறது. ஆனால் ஆடு, மாடுகளை பண்ணையாக அமைத்து தொழில் செய்வதன் மூலம் சுயமாக பொருளாதாரத்தில் வளர்ச்சியடைய முடியும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. வித்தியாசமான சிந்தனை உள்ளவர்கள் ஆடுகளை பெருமளவில் பெருக்கி ஆட்டின் பாலை "பாக்கெட் வடிவில் " பேக் செய்தும் விற்பனை செய்யலாம். 

தாய்ப்பாலுக்கு மிகவும் நிகரான புரதங்கள், நோய்எதிர்ப்பு சக்தி போன்றவை பசுவின் பாலை விட ஆட்டுப்பாலில் மட்டுமே அதிகம். இந்த நிலையில் போதிய இடவசதி இல்லாதவர்கள் கூட சிறிய இடத்தில் ஆடுகளை வளர்க்கும் வகையில் "பரண் மேல் ஆடு வளர்ப்பு " என்னும் ஒரு தொழில் நுட்பத்தை நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியை சேர்ந்த டாக்டர்.பூவராஜன் நமக்கு செய்தியாக அளித்துள்ளார். விவசாயம் செய்ய போதிய நிலமில்லாத இஸ்ரேல் நாடு இதே போல் வீட்டு அலமாரி போன்ற அமைப்பில் பயிர்களை விளைவித்து வருவது இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது. இதோ பரண்மேல் ஆடு வளர்ப்பு உங்கள் பார்வைக்கு.........

தமிழகத்தின் பொருளாதார வளத்திற்கு கால்நடை செல்வங்கள் பெரிய பங்களிப்பை செய்து வருகின்றன. குறிப்பாக ஆடு வளர்ப்பு நல்ல லாபம் தரும் தொழிலாக இருக்கிறது. படித்த இளைஞர்கள் தற்போது இந்த தொழிலில் இறங்கி வருவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மேலும் இந்த தொழிலில் இறங்க திட்டமிடுபவர்களுக்கு பரண்மேல் ஆடு வளர்ப்பு என்னும் நவீன முறை கைகொடுப்பதாக இருக்கும்.

பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு
வெள்ளாடுகளை தரையில் வளர்க்காமல் தரையிலிருந்து 4 அடி உயரத்தில் கிடைமட்டமாக மரச்சட்டங்களை 4 க்கு 3 அடி இஞ்ச் அளவில் 1 விரல் இடைவெளியில் வரிசையாக அடுக்கி கட்டி அமைப்பது தான் பரண் அமைப்பு. இதன் இடைவெளி அதிகமானாலோ, குறைந்தாலோ ஆடுகள் நடப்பதில் சிரமம் ஏற்படும். கால்களில் காயங்கள் ஏற்படலாம்.
மேலும் இதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மரமும் முக்கியம். சுமார் 100 ஆடுகள் வளர்க்க 50 அடிநீளம், 22 அடி அகலம் உடைய ஒரு கொட்டை அவசியம். இந்த கொட்டைகையில் ஆடு ஈனும் இளங்குட்டிகளை அடைக்கவும் அதனில் ஒரு பகுதி 22 க்கு 15 இஞ்ச் அளவில் அமைத்தல் வேண்டும். 
குட்டிகள் 3 மாதங்கள் வரை தாயிடம் பால்குடிப்பதால் அவை தாயின் பார்வைக்கு அப்பால் இருக்க கொட்டில் முழுவதும் அடைத்து  இருத்தல் வேண்டும்.

தீவன பராமரிப்பு
பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு முறை வெற்றிகரமாக இருக்க, பசுந்தீவனம் தான் முக்கிய பங்களிக்கிறது. பெரும்பாலான விவசாயிகள் தீவனப்பற்றாக்குறையால் தான் வெள்ளாடு வளர்ப்பை சிறந்த முறையில் செய்ய இயலவில்லை. எனவே 100 ஆடுகளை இந்த முறையில் வளர்க்க குறைந்த பட்சம் 4 ஏக்கர் பசுந்தீவனத்திற்கு என ஒதுக்க வேண்டும். வாரம் இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சக்கூடிய விவசாய நிலமாக இருத்தல் வேண்டும். தென்னையில் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க அதன் இடைவெளிக்கு ஏற்ப 6 முதல் 8 ஏக்கர் நிலம் அவசியம்.
பசுந்தீவன வகைகள்
கோ-3, கோ-4, வேலிமசால், குதிரை மசால் வகைகள், தீவன சோள புல்வகைகள், அகத்தி, சித்தகத்தி, சவுண்டல் ரகங்களை வளர்க்கலாம். இதனை 50 சென்ட் நிலத்தில் ஒவ்வொன்றையும் வளர்க்கலாம். பண்ணை அமைப்பதற்கு முன் பசுந்தீவனங்களை பயிரிட்டு விட வேண்டும். ஏனென்றால், முதல் அறுவடை 60 முதல் 70 நாட்கள் குறைந்த பட்சமும், 80 முதல் 90 நாட்கள் அதிகபட்சமாகவும் தேவைப்படும். இந்த இடைவெளியில் கொட்டகை அமைத்தல் வேண்டும். இதற்கு பின்பே ஆடுகளை வாங்கி வர வேண்டும்.

அடர் தீவனம்
 வெள்ளாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு அதன் வயதிற்கேற்ப அடர்தீவனம் அளிக்க வேண்டும். 3 மாதம் முதல் 6 மாத குட்டிகளுக்கு 25 கிராம் முதல் 35 கிராம் தீவனமும், 6 மாதம் முதல் 12 மாதம் வரையில் 50 கிராம் முதல் 100 கிராம் வரையிலும், சினைப்பருவத்தில் 175 கிராம், ஈன்ற ஆடுகளுக்கு 200 முதல் 250 கிராம், கிடாக்களுக்கு 300 கிராம் என்ற அளவிலும் அளிக்க வேண்டும்.
அடர்தீவனம் என்ற தீவனத்தின் கலவை (100 கிலோவிற்கு) விகிதம் கீழ்கண்ட அளவில் இருக்க வேண்டும்.
மக்காச்சோளம் மற்றும் கம்பு 35 முதல் 40 கிலோ, ராகி மற்றும் இதர தானியங்கள் 10 கிலோ, கடலைப்புண்ணாக்கு 20 கிலோ, கோதுமை தவிடு மற்றும் அரிசி தவிடு 10 கிலோ, துவரந் தூசி மற்றும் பாசித்தூசி 17 கிலோ, தாதுஉப்பு 2 கிலோ, சாதாரண உப்பு 1கிலோ என்ற அளவில் 100 கிலோ அடர்தீவனத்தின் பகுதிகளாக இருக்க வேண்டும்.
நோய் பராமரிப்பு 
ஆண்டுக்கு 4 முறை தடுப்பூசிகள் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி அளிக்க வேண்டும். குறிப்பாக, மார்ச் ஏப்ரல் மாதங்களில் கால் வாய் நோய்க்கான தடுப்பூசி, ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் பி வி ஆர் தடுப்பூசி, ஆகஸ்ட் மாதத்தில் கால் வாய் நோய் தடுப்பூசி, அக்டோபர் மாதத்தில் துள்ளுமாரி தடுப்பூசி ஆகியவற்றை போட வேண்டும். குடற்புழு மருந்துகளை பிறந்த 30 வது நாள், 2,3,4,6,9 வது மாதங்களில் போட வேண்டும். 
நன்மைகள்
!வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு மூலம் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு. 
!இனப்பெருக்கத்தில் குட்டிகளின் இறப்பு விகிதம் குறைவு.
!குறைந்தபட்சம் 100 ஆடுகள் வளர்த்தால், ஆடு ஒன்றிலிருந்து ஆண்டுக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.

இது பற்றி உங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு டாக்டர்.பூவராஜனிடம் விடைபெற மின்னஞ்சல் அனுப்புங்கள்.
ஆடு  வளர்ப்பு பற்றி இன்னொரு அருமையான பதிவு நண்பர் பழனிவேலின்...

No comments:

Post a Comment