Sunday, November 13, 2011

கரித்துண்டின் சக்தியை கண்டு பிடிக்க முயல்வோம் அறிவியல் படித்த பதிவர்களே!




ரித்துண்டுகளை என்ஜினுக்குள் போட்டு எரித்து ரயில்களை இயக்கினார்கள். மின்சாரத்தை தயாரித்து வருகிறார்கள். இப்படி எரிசக்தியை உருவாக்க கரித்துண்டுகள் இப்போதும் உதவி வருகிறது. ஆனால் கரித்துண்டுகளில் மற்றொரு பரிணாமம் இன்னும் கண்டு கொள்ளாமலே இருக்கிறது என்பது தான் இந்த பதிவை எழுத தூண்டியது. எங்கள் கல்லூரி காலத்தில் சில கிராமங்களுக்கு கால்நடை ஆய்வு களப்பணிக்காக செல்வதுண்டு.

அப்போது எங்களது பேராசிரியர் ஒருவர் முதன் முதலாக இப்படி நாங்கள் களப்பணிக்காக கிளம்பிய போது, கரித்துண்டுகளை சிலவற்றை கையில் எடுத்து வர சொன்னார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு தான் தெரிந்தது. சில இடங்களில் குடிதண்ணீர் சந்தேகத்துக்கு உரியதாக தென்பட்டால் அந்த குடிநீரை ஒரு பாட்டிலில் பிடித்து பிறகு அந்த குடிநீரை நாங்கள் கொண்டு போன கரித்துண்டுகள் வழியாக வடிகட்டி பிறகு குடிக்க பயன்படுத்தும் ஒரு ஐடியாவை கற்றுக் கொடுத்தார். கரித்துண்டுகளுக்கு கிருமிகளை கொல்லும் மற்றும் வடிகட்டும் ஆற்றல் இருப்பதை அப்போது தெரிந்து கொண்டோம்.

சமீபத்தில் கரித்துண்டுகளை பற்றி ஆய்வு செய்த அமெரிக்கர்கள் வித்தியாசமான தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். சார்க்கோல் என்பது கரித்துண்டின் மற்றொரு பெயர். அமேசான் காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் சமீபத்தில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. பொதுவாக இந்த காடுகளின் மனிதகாலடி படாத இடங்களில் வெளி உலகத்துக்கே வராத ஆதிவாசிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. 

ஆனால் இதே பகுதியில் சற்று நாகரீகத்துடனும் வாழ்ந்துவரும் ஆதிவாசிமக்களும் உள்ளனர். இது போன்றதொரு அமேசான் ஆதிவாசி மக்கள் தான் கரித்துண்டுகளை மிகச்சிறந்த மண்ணிற்கு ஊட்டமளிக்கும் ஒரு இடுபொருளாக பயன்படுத்துவது தெரியவந்தது. கரித்துண்டுகளை மண்ணுடன் கலக்கி பிறகு பயிரிடும் போது பயிர்கள் சிறப்பாக, செழிப்பாக வளர்வதாக இந்த ஆதிவாசிகள் நம்புகிறார்கள்.

இவர்கள் இதை எப்படி செய்கிறார்கள் தெரியுமா? அமேசான் ஆதிவாசி மக்கள் அவர்கள் காடுகளில் வேட்டையாடும் விலங்குகளின் எலும்புகளை சேகரித்து வைக்கிறார்கள். பல வகை மரங்களிலிருந்தும் பட்டைகளை உரித்துக் கொள்கிறார்கள். இவற்றை எரித்து கரியாக்குகிறார்கள். இப்படி உருவாக்கப்பட்ட கரியை மாவு போல ஆக்கி மண்ணுடன் கலக்குகிறார்கள். இந்த மண்ணில் சில பயிர்களை பயிரிடுகிறார்கள். ஆதிவாசிகள் கரித்துண்டுகளை இப்படி பயிரிட பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.இந்த விஞ்ஞானிகளும் கரித்துண்டை தயாரிக்க முயன்றார்கள். 

இதற்கு மர இலைகள், மக்காச்சோள கொண்டை உள்பட மரத்துண்டுகளை எரித்து கரியாக்கி கொண்டார்கள். இப்படி தயாரிக்கப்பட்ட கரியை மண்ணுடன் கலந்து தொட்டிகளில் நிரப்பினார்கள். இந்த கரித்துண்டு கலக்கப்பட்ட மண்ணில் கோதுமையை விதைத்தார்கள். கரித்துண்டு கலக்கப்பட்ட மண்ணில் விதைத்த கோதுமை அபாரமாக வளர்ந்தது. விதைகளின் முளைப்புத்திறன் அதிகமாக இருந்தது. விஞ்ஞானிகளுக்கு இது ஆச்சரியத்தை அளித்தது. இது போல் வேறு சில பயிர்களிலும் இந்த கரித்துண்டு கலக்கப்பட்ட மண் சேர்த்து விளைவிக்கும் பரிசோதனையை மேற்கொண்டார்கள்.

அந்த பயிர்கள் எல்லாம் மிகச்சிறப்பாக வளர்ந்து செழிப்பாக காட்சியளித்தன. பொதுவாக மண்ணில் தொடர்நது குறிப்பிட்ட பயிரை பயிரிடும் போது அந்த மண்ணின் வளம் தொடர்ந்து குறைந்துவரும். அந்த மண்ணில் உள்ள சத்துக்களை நாம் பயிரிடும் தாவரங்கள் உறிஞ்சிக் கொள்வதால் மண்ணில் இயற்கையாக இருக்கும் அங்கக சத்துக்கள் குறைந்து விடும். இதை ஈடுகட்ட தான் நாம் உரங்களை இடுகிறோம். ஆனால் இந்த கரித்துண்டு கலக்கப்பட்ட மண்ணில் இருந்த சத்துக்கள் உறிஞ்சப்படும் விகித அளவு குறைவாக இருந்தது. அதனால் அடிக்கடி உரங்களை இடாமல் அடுத்தடுத்து பயிர்களை விளைவிக்க முடிந்தது. 

இது தவிர கரித்துண்டு கலக்கப்பட்ட மண் இயல்பாக மென்மையாக ஆகி விடும் என்பதால், மண்ணுக்குள் வெளிக்காற்று நன்றாக புகுந்து செல்ல ஏதுவான நிலைமை உருவானது. இதனால் மண்ணுக்குள் பிராண வாயு அதிகமாகி அது பயிருக்கு கிடைத்த காரணத்தால் பயிர்கள் செழிப்பாகவும், ஆரோக்கியமாகவும் விளைந்தன. (நாம் ஆழமாக பிராணவாயுவை சுவாசித்தால் நல்ல ஆரோக்கியத்துடன் வாழமுடியும்.பிராணவாயுவை உள் நுரையீரலுக்குள் ஆழமாக உள் இழுத்து பயிற்சி செய்வதற்கு பெயர் தானே நாடிசுத்தி மற்றும் பிராணயாமம்) இது போல் தான் பயிருக்கும்.

இப்படி கரித்துண்டு கலக்கப்பட்ட மண்ணில் இயல்பாகவே பாசனம் செய்யும் போது, தண்ணீரானது அதிக நேரம் இந்த கரித்துண்டில் ஈர்க்கப்பட்டு, அதாவது உறிஞ்சப்பட்டு தேங்கி இருப்பதால் பயிருக்கு தொடர்ந்து தண்ணீர் கிடைத்து விடுகிறது. அதாவது சிலர் தண்ணீரை அதிகம் விட்டால் பயிர் நன்றாக வளரும் என்று கிணற்றிலிருந்து பல ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை வெள்ளம போல் விட்டு பாசனம் செய்வார்கள். இப்படி விடப்படும் தண்ணீர் பயிருக்கு போவதில்லை. வீணாக மண்ணுக்குள் தான் செல்லும் என்பதே உண்மை. ஆக.கரித்துண்டு கலக்கப்பட்ட மண்ணில் பாசனம் செய்யும் போது அந்த மண் பாசனம் செய்த சிறிது நேரத்திற்குள்ளாகவே, அதிக தண்ணீர் ஈர்ப்புடன் காட்சியளிக்கும். 

பொதுவாக செயற்கை உரங்களை இன்று அதிக அளவில் விவசாயத்தில் பயன்படுத்துகிறார்கள். இதற்கு காரணம், பயிருக்கு உரம் அதிக அளவில் தேவைப்படுவதால் தான். இந்த ரசாயன உரங்களால் மனிதனுக்கும் ஆபத்து. செயற்கை உரம் பயன்படுத்த மண் விரைவில் மலடாக மாறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் செயற்கை உரம் இல்லாமல் பயிர் குறிப்பிட்ட மண்ணில் வளரவே வளராது என்ற நிலையை விவசாயிக்கு உருவாக்கி விட்டு விடுகிறது. ஆக, கரித்துண்டை கலப்பதால் செயற்கை உரத்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு குறைத்து விட முடியும். மெதுவாக மண்ணை இயற்கை உரங்களால் நிரப்பி விஷத்தன்மையற்ற பயிரையும், உணவு தானியங்களையும் உருவாக்க முயலலாம்.

பொதுவாக கரித்துண்டுகளை பயன்படுத்துவதால் பூமி வெப்பமாவதை தடுக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். வைரம் கூட கரித்துண்டின் ஒரு குறிப்பிட்ட மாறுபாடு அடைந்த நிலை தான் என்பது வேதியியல் தெரிந்தவர்கள் அறிந்திருக்க முடியும். இத்துடன் நான் மேலே சொன்னது போல் கரித்துண்டுகள் தான் ஒரு காலத்தில் இந்தியா மட்டுமல்லாது உலகில் இயங்கிய அத்தனை ரயில்களிலும் எரிபொருளாக இருந்திருக்கிறது. மேலும் இன்று வரை அனல் மின்சாரம் தயாரிக்க இதே கரித்துண்டு தான் பயன்பட்டு வருகிறது. பார்ப்பதற்கு சாதாரணமாக இருக்கும் கரி பற்றத் ெத்ாடங்கினால் தணலாக மாறி செஞசிவப்பு நிறத்தில் தகிக்கும். அதாவது அளப்பரிய சக்தியை தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு சாதாரணமாக காட்சியளிக்கிறது.

ஆக, எனக்கு தெரிந்த வரை இந்த கரித்துண்டுக்கு இன்னும் அபாரமான சக்தி இருக்கலாம். அதாவது, நாம் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் மற்றும் காற்று கார்புரேட்டரில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கும் படி இருக்கும் போது அது என்ஜினுள் செலுத்தப்பட்டு எரிக்கப்பட்டு ஆற்றலாக மாறி வாகனத்தை இயக்குகிறது என்பது ஒரு எளிய விதி. இந்த கரித்துண்டு வழியாக பெட்ரோலை உட்புகுமாறு செய்து பயன்படுத்தினால் வாகனத்தில் இயங்குதிறனை குறைவில்லாமலும், அதே நேரத்தில் பெட்ரோல் உள்செல்லும் அளவை குறைத்து விடமுடியுமா? என்பதே எனது கேள்வி.

இது ஒரு புறம் இருக்கட்டும். இங்கு சொல்ல வந்த விடயம், நீங்கள் அவசரத்திற்கு எங்கேனும் கிடைக்கும் குடிநீரை பயன்படுத்த நேர்ந்தால் சில சுத்தமான கரித்துண்டுகள் மூலம் அந்த தண்ணீரை வடிகட்டி பயன்படுத்துங்கள். காரணம் கரித்துண்டு ஒரு சிறந்த கிருமி வடிகட்டி என்பதுடன் சில கிருமிகளையும் அழிக்கும் ஆற்றல் பெற்றவை என்பதே உண்மை.

No comments:

Post a Comment