Monday, November 14, 2011

சின்னார் 20 - புதிய ரக நெல்



ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கீழமானங்கரை கிராமத்தில் லேட். சின்னார் என்ற விவசாயி ஒரு புதிய நெல்ரகத்தை அதே கிராமத்தில் உள்ள புஷ்பம் என்பவர் உதவியுடன் உருவாக்கியுள்ளார். இந்த நெல் 110-115 நாட்கள் வயதுஉடையது. நெல் கத்தரி ஊதா கலரில், சாயாத நெல் வகையைச் சேர்ந்தது.
புதிய நெல் ரகம் உருவான வரலாறு: 7 வருடங்களுக்கு முன்னர் புஷ்பம் என்ற விவசாயி முதுகுளத்தூர் பஞ்சாயத்து யூனியனில் எடிடி 36 என்ற நெல் ரக விதையை வாங்கிக் கொணர்ந்து புரட்டாசி மாதம் வயலில் விதைத்தார். நெல் முளைத்து பயிரானது. அச்சமயம் நெல்லில் களை எடுக்க முற்பட்டார். ஒரு பயிர் மட்டும் கத்தரி ஊதா கலரில் களைச்செடி போன்று தென்பட்டது. இது களைச்செடி என்று பிடுங்க முற்பட்ட சமயம் நெல்மணி போன்ற கதிரும் தென்பட்டது. இந்த நெல் பயிரை பார்வையிட்ட சின்னார் என்ற பக்கத்து தோட்ட விவசாயி இதனை பிடுங்கிச்சென்று அவருடைய வயலில் நட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தார். ஆரம்பத்தில் கத்தரி கலரில் இருந்த பயிரானது ரோஜா நிறத்தில் மாறியது. நெல்லின் மணிகள் சற்று நீளம் அதிகம் கொண்டதாக இருந்தன. இதன் மணிகளை தனியாக அறுவடை செய்து அடுத்த பட்டத்தில் விதைத்தார். இவ்வாறாக பிரித்து எடுத்த நெல்லை "நாதன்' என்பவர் ஆலோசனைப்படி தன்னுடைய பெயரிலேயே சின்னார் 20 என்று பெயரிட்டார். இதில் 20 என்பது 2000/2004 வருடத்தைக் குறிக்கும். அதாவது 20ம் நூற்றாண்டு என்பதைக்குறிக்க இவ்வாறு பெயரிட்டார். இந்த நெல்லின் நிறத்தையும் நீண்ட மணிகளையும் பார்த்த உள்ளூர் விவசாயிகள் அதிசயப்பட்டு தாங்களும் பயிரிடமுற்பட்டனர். இவ்வூரில் புஷ்பம் என்பவரும் மற்ற விவசாயிகளும் இந்த நெல்லை தங்கள் வயலில் விளைவித்து நல்ல பலன் கண்டனர். இதனால் இந்த ரகம் கீழமானங்கரை மற்றும் பக்கத்து கிராமங்களிலும் உள்ள விவசாயிகளால் சுமார் 150 ஏக்கர் நிலங்களுக்கும் மேலாக பயிர் செய்யப்படுகிறது.
சின்னார் நெல் ரகத்தின் சிறப்பு தன்மைகள்: நெற்பயிர் வளரும் சமயம் கத்தரி ஊதா கலரில் காணப்படும். அறுவடை செய்யும் போது ரோஜா கலரில் மாறிவிடும். நெல்லின் உயரம் சுமார் 88 செ.மீ. கதிரின் நீளம் 22 செ.மீ. ஒரு பயிரில் 19-30 தூர்கள் உள்ளன. இதில் கதிர்பிடிக்கும் தூர்கள் 11 வரை உள்ளன. இது 115 நாட்களில் அறுவடை ஆகும். ஒரு கதிரில் 85-100 நெல்மணிகள் காணப்படும். 1000 நெல்மணிகளின் எடை 25 கிராம் ஆகும். இந்த நெல் ரகம் சாயாது. ஏக்கருக்கு 40-44 மூடைகள் விளைச்சல் கிடைக்கும்.
இந்த நெல் ரகம் பரவி உள்ள ஊர்கள்: இந்த நெல்லின் சிறப்பம்சங்களை கேள்விப்பட்டு பக்கத்து ஊரில் உள்ள விவசாயிகள் இந்த நெல் ரகத்தை விதைக்காக கூடுதல் விலைகொடுத்து வாங்கிச் செல்கின்றனர். இந்த நெல் கீழ்க்கண்ட ஊர்களில் பரவலாக பயிர் செய்யப்படுகின்றன.
1. தேரூர்வெளி, 2. கீழப்பானூர், 3. உத்தரகோசமங்கை, 4. சாத்தான் குளம், 5. கமுதி, 6. பொதிகுளம், 7. முதுகுளத்தூர், 8. குமாரகுறிஞ்சி, 9. பேரையூர். இந்தரகம் இப்போது சிவகங்கை மாவட்டத்திலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த நெல் ரகத்தை மூடைக்கு ரூ.100 அதிகம் கொடுத்து விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர். இதில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் தன்மை குறைவு என்று கூறுகின்றனர். 

No comments:

Post a Comment