Sunday, November 13, 2011

இது நாவல் சீசன்: கவனமாக சாப்பிடுங்க நாவல் பழம்!


நகரத்தில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் நாவல் பழமரத்தை பார்த்தே பல ஆண்டுகள் ஆகியிருக்கும். கிராமங்களில்  சர்வசாதாரணமாக நாவல் மரங்களை பார்க்கலாம். சாலை ஓரங்களிலும், குளக்கரை, ஆற்றங்கரைகளில் நாவல் மரங்கள் தன்னிச்சையாக வளர்ந்திருப்பதுண்டு. நாவல் மரத்திற்கு ஆருகதம், நேரேடு, சுரபிபத்தினர் என்றும் பெயர்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் நாவல் மரத்தினை (eugenia jambos)ஜம்பலம், பிளாக் பிளம் என்று பெயர்கள் உண்டு. ஜம்பு நாவல் என்றொரு ரகமும் உண்டு. இதன் பழங்கள் இனிப்பு கலந்த துவர்ப்பாக இருக்கும். இதன் இலைகள் கால்நடைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. 

இந்தியாவில் வறண்ட பகுதிகள் தவிர நாவல் மரம் அனைத்து இடங்களிலும் வளரும். இதன் இலைகள் கரும்பச்சையாக பளபளப்புடன் இருக்கும். ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இலைகளை உதிர்க்கும் தன்மை கொண்டது இந்த மரம். இந்த மரத்தைக் கொண்டு விவசாய கருவிகள் செய்யலாம். பெரும்பாலும் ஒட்டுச் செடிகள் மூலமும், விதைகள் மூலமும் செடிகள் உண்டாக்கப்படுகின்றன. நாவல் பழங்கள் ஜுலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் மரத்தில் பழுத்து கிடைக்கின்றன. கிராமங்களில் மரத்தில் ஏறி இதனை உதிர்த்து விற்பனைக்கு எடுத்து வருவார்கள். ஒரு மரத்திலிருந்து ஆண்டொன்றுக்கு 50 முதல் 80 கிலோ பழங்கள் கிடைக்கும்.

பழத்தின் மருத்துவபண்புகள்
நாவல் பழத்தை சாப்பிட மூளை பலமாகும். நல்ல சீரண சக்தி கிடைக்கும். குறிப்பாக பழத்தை கசாயம் போல் தயாரித்து சாப்பிடும் போது வாயுத்தொல்லை நீங்கும். மண்ணீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து பல காலங்களாக கழிச்சல் நோய் உள்ளவர்கள் நாவல் பழத்தை சாப்பிட்டு வர குணமடையலாம். பழச்சாறுடன் தேன் கலந்து குடிக்கும் போது வெயிலால் உடம்பில் ஏற்படும் அனல் குறையும். 

ஆனால் பழம் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒத்துக் கொள்ளாது என்றும் கூறப்படுகிறது. பழம் உடலுக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சியை தரும். இரத்தத்தை சுத்தி செய்யும். இரத்தம் விருத்தி ஆகும். சிறுநீர்க்கழிவினைத் தூண்டுவதுடன், சிறுநீர்ச்சுருக்கை போக்கும். பழத்தை அதிகமாக உண்டால் சளி, காய்ச்சல் உண்டாக வாய்ப்புண்டு. குறிப்பாக சிறுவர்களுக்கு இந்த பழங்களை அளவுடன் உண்ண தர வேண்டும்.

சிலருக்கு இந்த பழங்களை உண்ணும் போது தொண்டைக்கட்டும் ஏற்படலாம். நாவல் பழத்தை உப்பில் போட்டு சாப்பிடுவதால் தொண்டைக்கட்டு உண்டாகாது.
பழுக்காத நாவல் காய்களை நன்றாக உலர்த்தி பொடி செய்து ஒரு தேக்கரண்டி எடுத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று போக்கு குணமாகும். 

விதையின் குணங்கள்
நாவல் பழத்தை சப்பித்தின்ற பிறகு மிஞ்சும் கொட்டையை நன்றாக நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை தினமும் 2 முதல் 4கிராம் வீதம் மூன்று வேளை தண்ணீரில் கலந்து அருந்தினால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் என நம்பிக்கை உள்ளது. விதையை பொடித்து மாம்பருப்பு தூளுடன் சேர்த்து தர சிறுநீரை பெருக்கும். இந்த கொட்டை தூளை அதிக அளவில் உண்ண கூடாது. அது நஞ்சாகும். 

இலையின் குணம்
நாவல் கொழுந்து சாறு, மாவிலைச்சாறு ஆகிய இரண்டையும் கலந்து கடுக்காய் பொடியுடன் சேர்த்து ஆட்டுப்பாலில் கலக்கி குடித்தால், சீதக்கழிச்சல் என்ற வெப்பக்கழிச்சல் குணமடையும். நாவல் கொழுந்து, மாவிலைக் கொழுந்து ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து மை போல் அரைத்து மோரில் அல்லது தயிரில் கலக்கி சாப்பிட வயிற்று போக்கு, இரத்தத்துடன் காணப்படும் பேதி ஆகியவை குணமாகும்.

மரப்பட்டையின் குணம்
நாவல் மரம்பட்டையை சுவைத்தால் குரல் இனிமையாகும் என்று கூறுகிறார்கள். இது ஆஸ்துமா, தாகம், களைப்பு, குருதி பேதி, கீச்கீச் என்ற ஈளை இருமல் ஆகியவற்றை குணப்படுத்த நல்லது. நாக்கு, வாய், தொண்டைப்புண்களுக்கு இந்த மரத்தின் பட்டையை கொதிக்க வைத்து வாய் கொப்புளித்தால் குணம் காணலாம். மரப்பட்டையை இடித்து சலித்து எருமைத்தயிரில் கலந்து குடிக்க பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்த போக்கு கட்டுப்படும். குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், ரத்தகழிச்சல் ஆகியவற்றுக்கு வெள்ளாட்டுபாலுடன் சேர்த்து நன்கு காய்ச்சி சங்கு அளவில் மூன்று முறை தரலாம். இந்த மரப்பட்டையின் கசாயத்தை கொண்டு புண்களை கழுவலாம். கிருமிநாசினி போல் செயல்படும்.

வேரின் குணம்
மரத்தின் வேரை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து அந்த நீரை குடித்தால் சர்க்கரை வியாதிக்கு நல்லது. உடலுக்கு குளிர்ச்சியையும், ஆண்மையையும் த்ரும்.

நாவல் பழத்தில் உள்ள சத்துக்கள்
புரதம் 0.7 கிராம்
கொழுப்பு 0.3 கிராம்
மாவுப்பொருள் 0.9 கிராம்
கீழ்வருபவை எல்லாம் (மில்லி கிராம் அளவில்)
கால்சியம் 14.0 
பாஸ்பரஸ் 15 
இரும்பு 1.2 
தயமின் 0.03 
நியாசின் 0.2 
வைட்டமின் சி 18 
மெக்னீசியம் 35 
சோடியம் 26.2 
பொட்டாசியம் 55 
தாமிரம் 0.23 
கந்தகம் 13 
குளோரின் 8 
ஆக்சாலிக் அமிலம் 89 
பைட்டின் பாஸ்பரஸ் 2 
கோலின் 7 
கரோட்டின் 48 
இந்த சத்துக்கள் எல்லாம் பொதுவாக உடலில் எப்படியெல்லாம் பயன்படுகின்றன என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். இந்த சத்துக்களை தெரிந்து கொண்டால் தான் ஒவ்வொரு பழத்திலும் இருக்கும் இந்த சத்துக்களின் அளவை வைத்து நமக்கு எந்த சத்துள்ள பழம் அதிகம் உண்ணத்தகுந்தது என்று தெரிந்து கொள்ள முடியும்

No comments:

Post a Comment