Monday, November 14, 2011

"பை' முறை விவசாயம்




இயற்கையான உணவு எப்பொழுதுமே சிறந்தது. சரிவிகித, சத்தான, தீங்கு விளைவிக்காத உணவினை குழந்தைகளுக்கு தருவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இதை நான் இரு குழந்தைகளின் தாயாக சொல்கிறேன் என்கிறார் சித்ரா. ஐரோப்பிய நாட்டில் பயணம் செய்யும்போது பார்த்த சீதோஷ்ண நிலை, சமன்படுத்தப் பட்ட காய்கறி தோட்ட தொழிற் சாலைகளை மனதில் கொண்டு திட்டமிடப் பட்டதுதான் இந்த வீட்டுக் குறுந்தோட்டமும், வீட்டு மாடித் தோட்டமும். தேங்காய் மட்டையிலிருந்து கிடைக்கும் துகள்களை ஆதாரமாகக் கொண்டு அத்துடன் இயற்கைத் தாதுக் களையும், நுண்ணுயிர்களையும் கலந்து செடிகள் வளர்வதற்கான ஊடகத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்களின் உதவியோடு உருவாக்கி உள்ளார்.
இந்த ஊடகத்தை ஆராய்ந்தவர்கள் இது இயற்கையான சத்துமிகுந்த ஊடகம் மட்டுமில்லாமல் மிக சிறிதளவு தண்ணீர் இருந்தாலே செடிகள் வளர்வதற்கு போதுமானது என்கிறார்கள். கலக்கப்பட்ட ஊடகத்தை பைகளில் போட்டு விதைச்சான்று பெற்ற வீரிய விதைகளை விதைத்து வீட்டில் சூரிய வெளிச்சம் படும் வராந்தா, பால்கனி, மாடி, ஜன்னல் போன்ற இடங்களில் வளரவிடுவதுதான் வீட்டு குறுந்தோட்டம்.
அன்றாட தேவைக்கான கீரைகள், காய்கறிகள், அலங்கார செடிவகைகள், மூலிகை செடிகள் எது வேண்டுமானாலும் இந்தப் பைகளில் வளர்க்கலாம். பைகளில் விவசாயமா? கதை சொல்கிறார்களா? இல்லை இல்லை. நிஜம். 3 செடியிலிருந்து 8 கிலோ கத்தரிக்காய், 15 கிலோ தக்காளி அறுவடை செய்யப் படுகிறது. இச்செடிகளுக்கு வரும் நோய்களைக் கட்டுப்படுத்த பஞ்சகவ்யா இயற்கைவழி பூச்சிவிரட்டியும் உபயோகப்படுத்தப் படுகிறது.
கீரைகள்: கீரைகளில் புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்கீரை, கருவேப்பிலை, சிறுகீரை, பாலக்கீரை, பசலைக்கீரை, பொன்னாங் கண்ணிக் கீரை, வல்லாரைக்கீரை, தண்டுக்கீரை, புளிச்சகீரை ஆகியவை பயிர் செய்யப் படுகின்றன. காய்கறிகளில் கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, பாகற்காய், சுரைக்காய், முள்ளங்கி, பீட்ரூட், வெள்ளரி, அவரை ஆகியவை பயிர் செய்யப்படுகிறது.
மூலிகைச்செடிகள்: நமது அன்றாட வாழ்விற்குத் தேவையான மூலிகைகளையும் இம்முறையில் வளர்க்கலாம். மிக முக்கியமான மூலிகைகளான கற்பூரவல்லி, துளசி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை, சிறியாநங்கை, பெரியநங்கை, இன்சுலின், தத்துரா (கருஊமத்தை), பல்வலிப்பூண்டு, பார்வதிதழை, ஆடாதொடை, தைம் ரோஸ்மேரி, மின்ட் வகைகள், அறுபத்தாம் தழை, வெட்டிவேர், லேவண்டர், லெமன்கிராஸ், கரிசலாங்கண்ணி, தூதுவளை, அப்பகோவை, முடக்கத்தான், நொச்சி, பொடுதலை வளர்க்கலாம்.
இம்மூலிகைகளை வளர்க்கும் முறை பற்றியும், உபயோகிக்கும் முறை பற்றியும் இத்துறையில் பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் உதவியோடு எடுத்துரைக்கப் படுகிறது. மாடியிலோ அல்லது தரையிலோ 20+10 அளவில் வெயில் படும்படியான இடவசதி இருக்கின்றதா? இருந்தால் இந்த பசுமைக்குடில் அமைக்கலாம். ஐந்து நபர் கொண்ட குடும்பத்தின் காய்கனி, கீரைகள் தேவைகளை இந்த பசுமைக்குடில் பூர்த்தி செய்யும்

No comments:

Post a Comment